Sunday, January 14, 2018

சிங்கப்பூரில் பூரிப்புடன் பொங்கும் பொங்கல் திருநாள் 

14/1/2018 11:32


சிங்கப்பூரில் உழவுத் தொழில் நடைமுறையில் இல்லாவிட்டாலும் பொங்கல் வந்துவிட்டால், உவகைக்குப் பஞ்சமில்லை. லிட்டில் இந்தியா வட்டாரமே சிறிய கம்பமாக மாறிக் களிப்பூட்டும். பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில் லிட்டில் இந்தியா வட்டாரம் எழில்மிகு ஒளியூட்டு அலங்காரங்களில் வண்ணமயமாக மின்னும்.



பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் அங்கு விற்கப்படும். அலங்கரிக்கப்பட்ட பானைகள், கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, தோரணங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்திருக்கும். மாடுகளும் பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்கும்.

லிட்டில் இந்தியா வட்டாரத்தைத் தாண்டி குடியிருப்புப் பேட்டைகளிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அவற்றில் இந்தியர்களுடன் பிற இனத்தனவரும் கலந்துகொள்வதைக் கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது.

இளம் தலைமுறையினர் தங்களின் மரபு பற்றியும் அதனைச் சார்ந்துள்ள விழுமியங்கள் குறித்தும் அறிந்துகொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன. அதே நேரத்தில் மற்ற இனத்தவரும் பொங்கலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இக்கொண்டாட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன.



பொதுவாகப் பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்தினம் போகிப் பண்டிகை. வீட்டிலிருக்கும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை அகற்றி வீட்டைத் துப்புரவு செய்வதற்கான நாள். தை மாதத்தின் முதல் நாளில் சூரியப் பொங்கல் கொண்டாடப்படும். கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்றைய நாளில் பொங்கல் படைக்கப்படுகிறது.

மறுநாள், மாட்டுப் பொங்கல். உழவுத் தொழிலில் மாடுகளின் பங்கு இன்றியமையாதது. எனவே அந்நாளில் மாடுகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நான்காம் நாள் காணும் பொங்கல். மக்கள் தங்கள் உற்றார் உறவினருடன் அன்பையும் உணவையும் பகிர்ந்துகொள்ளும் நாள்.

சிங்கப்பூரில், சுமார் 20 ஆண்டுக்கு முன்பை விட தற்போது பொங்கல் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. லிட்டில் இந்தியா வட்டாரம் 2010ஆம் ஆண்டிலிருந்து பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒளியூட்டப்படுவது, பல்வேறு வட்டாரங்களில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டங்கள், ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பண்டிகை ஆகியவை அதற்குச் சான்றாகும். நவநாகரிக சிங்கப்பூரில் பாரம்பரியம் கட்டிக்காக்கப்படுவதை இது போன்ற பண்டிகைகள் புலப்படுத்துகின்றன. நம் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறி, இங்கு நிலவும் இன நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கின்றனர்.

பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பற்பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நீங்களும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் பொங்கல் திருநாள், வார இறுதியில் வந்துள்ளது. எனவே இம்முறை “ஞாயிறுக்கு” நன்றி நவில ஞாயிறன்று பொங்கலை இன்முகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

உள்ளத்தில் பொங்கும் இன்பம்
என்றும் எங்கும் நிலைக்கட்டும்

அன்புடன்

நித்திஷ் செந்தூர்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...