Monday, January 15, 2018

காச நோயாளிகளுக்கு உதவித்தொகை!!!

 
காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டியூபர்செல் பாசிலஸ்’ எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் ‘டியூபர் குளோசிஸ்’. இதைச் சுருக்கி ‘டிபி’ என்று அழைக்கிறோம். இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும். இந்தியாவில் டிபியால் பாதிப்படையும் மக்கள் இறப்பது குறைந்திருந்தாலும், நோயால் மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “காச நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க செலவு நிதி குழு ஒப்புதல் அளித்துள்ளது. நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்குவது குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதனால், காசநோயாளிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிடவும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும். காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் 90% ஒழிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறையைப் பின்பற்றி வந்தனர். “ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்துக்கு மூன்று முறை மருந்து எடுத்துக்கொள்ளாமல், தினமும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்குக் கசப்பான மாத்திரைக்குப் பதிலாக எளிதில் கரையக்கூடிய இனிப்பு சுவையுள்ள மருந்துகள் வழங்கப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை டெல்லியில் 2 லட்சம் காசநோயாளிகள் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2014இல் 73,096, 2015இல் 83,028, 2016இல் 69,169 ஆகவும் இருந்தது. இந்நோய் மூலம் கடந்த 2014இல் 4,350 பேரும், 2015இல் 3,635 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் 2017ஆம் ஆண்டின் அறிக்கைபடி, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.2 லட்சத்திலிருந்து 27 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இறப்பு 60 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...