Sunday, January 14, 2018


மருத்துவர்கள் பற்றாக்குறை!

By ஆசிரியர் | Published on : 12th January 2018 01:07 AM | 


 | ஒருபுறம் சர்வதேச அளவிலான வசதிகளைக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாநகரங்களில் உருவாகி வருகின்றன. இன்னொரு புறம் ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத அவலம் காணப்படுகிறது. 

இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. 2,046 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையின் படுக்கை வசதி என்பதுதான் இப்போதைய நிலைமை. அதேபோல 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற விகிதம்தான் காணப்படுகிறது. இந்தியாவின் 70 கோடி மக்கள் வாழும் கிராமங்களில் 11,054 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன.


இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான விகிதம் என்பது வியத்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவாகக் காணப்படுகிறது என்றும், மருத்துவர்கள் பற்றாக்குறைதான் இந்தியாவின் சுகாதார நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும், 2016-இல் நாடாளுமன்றத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், 11,097 பேருக்குத்தான் ஓர் அலோபதி முறை மருத்துவர் என்கிற விகிதம் இந்தியாவில் காணப்படுவதாக 2017 தேசிய சுகாதார விவரக் குறிப்பு தெரிவிக்கிறது. ஊரகப் புறங்களில் இந்த விகிதம் இதைவிட மோசம். 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 60% மக்கள் ஊரகப் புறங்களில்தான் வாழ்கிறார்கள். அங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத அவலம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. 2017-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட வேண்டுமானால், 2030-குள் இந்தியாவுக்குக் குறைந்தது 20 லட்சம் மருத்துவர்கள் கூடுதலாகத் தேவைப்படுவார்கள்.
மருத்துவப் பற்றாக்குறைதான் இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகள் முறையாகச் செயல்பட முடியாமல் முடக்குகிறது. குறிப்பாக, ஊரகப் புறங்களில், ஆதிவாசிகள் வாழும் மலைப்பிரதேச கிராமங்களில் மருத்துவ வசதி என்பது இன்னும் கானல் நீராகவே காணப்படுகிறது. 


'இந்தியாஸ்பென்ட்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைபடி, ஊரகப் புறங்களில் உள்ள அரசின் பொது சுகாதார மையங்களில் 30,000க்கும் அதிகமான மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. பல பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே செயல்படும் அவலம் தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் இல்லாத சுகாதார மையங்களில் 200% அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


அரசின் தேசிய அளவிலான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017 பல உயரிய இலக்குகளை நிர்ணயிக்கிறது. இதன்படி பொது சுகாதாரத்திற்கான இந்திய அரசின் ஒதுக்கீடு இப்போது இருக்கும் 1.4% லிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 2.5%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


மத்திய அரசின் தேசிய சுகாதார உறுதியளிப்புத் திட்டம் (நேஷனல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன்) ரூபாய் 1லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 50க்கும் மேற்பட்ட மருந்துகளையும், 12க்கும் மேற்பட்ட பரிசோதனைகளையும் இலவசமாக வழங்கவும், 2019-க்குள் இந்தியாவிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தவும் முனைகிறது. இந்தத் திட்டத்தின் இன்னொரு பகுதியாக சிசு மரண விகிதத்தை 1000 பிரசவத்துக்கு 40 என்றிருப்பதை 30ஆகக் குறைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


அரசின் முனைப்பும், இலக்கும் பாராட்டுக்குரியது என்றாலும் அதை எட்டுவது என்பது சுலபமானதாக இருக்காது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 3 கி.மீ. சுற்றளவில் போதிய மருத்துவ வசதி உருவாக்கப்பட வேண்டும். நமது மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மருத்துவ வசதிகளை உருவாக்குவது என்பது தனியார் மருத்துவ சேவைகளையும் சேர்த்துக் கணக்கிட்டாலுமேகூட எட்டுவது கடினம். இதை 2020-க்கான நிதி ஆயோகின் செயல் திட்டம் சுட்டிக்காட்டாமல் இல்லை.


இந்தியாவின் மிக முக்கியமான தேவை கூடுதலான மருத்துவர்கள். மருத்துவக் கல்விக்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள 462 மருத்துவக் கல்லூரிகள் 56,748 மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு 2.6 கோடி மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில் கல்லூரி எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சில பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத நிலையும் காணப்படுகின்றது. இந்திய மக்கள் தொகையில் 46% மக்கள் வாழும் எட்டு மாநிலங்களில் மொத்த மருத்துவக் கல்வி இடங்களில் 21%தான் உள்ளன. 31% மக்கள் தொகை உள்ள ஆறு மாநிலங்களில் 21% மருத்துவக் கல்வி இடங்கள்தான் காணப்படுகின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய பல மாநிலங்களில் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லாததால் மருத்துவர்களுக்கான குறைபாடு அதிகமாக இருக்கிறது.
தரமான மருத்துவக் கல்வி, தரமான மருத்துவர்கள், தரமான மருத்துவ வசதிகள் இவையெல்லாம் ஒரே நாளில் உருவாகிவிடக் கூடியவை அல்ல. சாமானியனுக்கு மருத்துவ வசதி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் மட்டும் போதாது. அதை எட்டுவதற்கான முனைப்பும் இருக்க வேண்டும். ஊரகப் புறங்களில் பணியாற்ற அடுத்த தலைமுறை மருத்துவர்கள் முன்வந்தால் மட்டுமே இந்தச் சவாலை இந்தியா எதிர்கொண்டு வெல்ல முடியும்!

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...