
அரசியல் கட்சி துவக்குவதாக அறிவித்த, நடிகர் ரஜினி, 10 நாட்களுக்கும் மேலாக, அதுபற்றி வாய் திறக்காமல், 'சைலன்ட்' ஆக இருக்கிறார். அவரிடம் எதிர்பார்த்த எந்த பரபரப்பும் இல்லாததால், அவரது ரசிர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ரஜினி வருகையை எதிர்த்த, சில அமைப்புகள் மற்றும் கட்சிகள், அவரின் மவுனத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல் நலக் குறைவு, கமலின் அரசியல் பிரவேசம் ஆகிய காரணங்களாலும், 'மீடியா'க்கள் மற்றும் ரசிகர்களின் வலியுறுத்தலாலும், அரசியல் கட்சி துவக்கும் அறிவிப்பை, நடிகர் ரஜினி, 2017 டிச., 31ல் வெளியிட்டார்.
ஆதரவு:
'ஆன்மிக அரசியல் பாதையில் பயணிப்போம்' என, அவர் அறிவித்த கருத்துக்கு, ஒரு தரப்பில் எதிர்ப்பும், பல தரப்பில் ஆதரவும் காணப்பட்டது. சட்டசபை தேர்தலில், ரஜினியை எதிர்த்து களமிறங்கப் போவதாக, தமிழ் அமைப்புகள் சில, அறிவித்த போதிலும், அதை ரஜினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
'என்னை எதிர்த்து விமர்சனம் செய்தவர் அனைவருக்கும் நன்றி' என, ஒற்றை வார்த்தையில் கருத்து சொல்லி, நிறுத்திக் கொண்டார்.
ஆலோசனை:
அதே நேரத்தில், நடிகர்கள் விஷால், லாரன்ஸ் போன்றவர்கள், ரஜினிக்கு காவலர்களாக செயல்படப் போவதாக அறிவித்து, ரஜினியின் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இதற்கிடையே, அரசியல் ஆலோசனை பெறவும், ஆசி கேட்டும், தி.மு.க., தலைவர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தார், ரஜினி. அதோடு, தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பலத்தை அதிகரிக்க, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில், புதிய இணைதளம் ஒன்றையும் துவக்கினார்.
அதன் வாயிலாக, ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், அவர் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு, உறுப்பினர்கள் சேர்ப்பு நடக்கவில்லை. அதுபற்றிய, அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட, பத்திரிகைகளுக்கு தரப்படவில்லை.
அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, பத்து நாட்களுக்கு மேலாகியும், ரஜினி மவுனம் சாதிப்பதற்கு, என்ன காரணம் என்பது தெரியாமல், அவரது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
ரஜினியிடம் ஆர்வம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து, அவருக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது: ரசிகர் மன்ற நிர்வாகிகள், ஆறாயிரம் பேரை அழைத்து, போட்டோ எடுத்துக் கொண்டாரே தவிர, அடுத்த கட்டமாக, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, கட்சி துவக்கும் பணிகள் குறித்து, ரஜினி ஆலோசிக்கவில்லை.
எதிர்பார்ப்பு:
கருணாநிதி, வீரப்பன் சந்திப்புகளை தொடர்ந்து, நட்சத்திர விழாவில் பங்கேற்க, மலேஷியா சென்று விட்டார். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, 'துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவில், ரஜினி பங்கேற்பார்; பரபரப்பாக பேசுவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி பங்கேற்றதால், அவரை சந்திப்பதை தவிர்த்து, விழாவை புறக்கணித்தார். ஜெட்லியை சந்தித்திருந்தால், ரஜினியை எதிர்க்கும் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், 'பெருந்தீனி' கிடைத்திருக்கும்.
அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக, ரஜினி ஒதுங்கி கொண்டார். ஆனால், அரசியல் என்று வருகிற போது, இது போன்ற விமர்சனங்களுக்கு, அவர் அஞ்சக் கூடாது என்பது தான், ரசிகர்களின் கருத்து.
சென்னையில், நேற்று முன்தினம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்திருந்த, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், கட்சி தொடர்பாக, எதையும் அவர் பேசவில்லை; பொங்கல் வாழ்த்து மட்டும் கூறி, அனுப்பி விட்டார். இதனால், அவரிடம் எதிர்பார்த்த எந்த அரசியல் பரபரப்பும் இல்லையே என்ற விரக்தி, ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் மவுனம், அவரை கடுமையாக எதிர்த்து வரும் அமைப்புகளுக்கும், சில கட்சிகளுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment