Sunday, April 29, 2018

சென்னை முதலைகள் பண்ணை தோன்றிய வரலாறும் சில ஆச்சர்யங்களும்!
 
க.சுபகுணம்  29.04.2018
vikatan

 அது 1973ஆம் வருடம்... அவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஊர்வன ஆராய்ச்சியாளர். அவரது மனைவியிடம் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார், "இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மக்கர், கரியால் போன்ற முதலைகள் தொடர்ச்சியாக அழிந்துகொண்டே வருகின்றன. இதை என்னால் பொறுக்க முடியவில்லை." அவர் அப்படி வேதனைப்படக் காரணம் இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் 80கள் வரை முதலைகள் அவற்றின் கடினமான தோலுக்காகத் தொடர்ச்சியாக வேட்டையாடப் பட்டன. அது மட்டுமின்றி நீர் மேலாண்மை காரணமாக அதிகமான அணைகள் கட்டப்பட்டு ஆற்று நீரின் பாதை கட்டுப்படுத்தப் பட்டது. அதனால் முதலைகள் அவற்றின் வாழ்விடப் பாதையில் நீர்வரத்து இல்லாமல் இடம் மாறி ஊருக்குள் வருவதும் அதிகமாகிக் கொண்டே இருந்த காலகட்டம் அது.



அந்தச் சமயத்தில் தான் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மக்கர், கரியால், உப்புநீர் முதலை போன்றவையின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வந்தது. இதுகுறித்துத் தான் அந்த அறிஞர் தனது மனைவியிடம் வருந்திக் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து ஒரு முடிவை எடுத்தனர். முதலைகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கென ஒரு வாழ்விடம் அமைப்பது, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது, அதைவிட முக்கியமாக அவற்றை இனப்பெருக்கம் செய்யவைத்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி அழிவில் இருந்து காப்பது, அந்த முடிவை 1976இல் நடைமுறையிலும் சாத்தியமாக்கியது அவர்களது விடா முயற்சி. அது தான் இன்று உலகின் மிகப்பெரிய முதலைப் பூங்காக்களில் ஒன்றாக விளங்கும் சென்னை முதலைகள் பண்ணை.



அதை உருவாக்கியவர்கள் ராமுலஸ் விடேகர் என்ற ஊர்வன அறிஞரும் அவரது மனைவி சாய் விடேகர் என்பவரும் தான். சென்னையில் இருக்கும் முதலைகள் பண்ணை தான் ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளுக்கு என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காப்பிடம். மூன்று வகை முதலைகளோடு தொடங்கிய இந்தப் பூங்காவில் உலகளவில் இருக்கும் 23 வகையான முதலைகளில் 17 முதலைகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை முதலைகளுக்கும் தனித்தனி வாழிடம், இனப்பெருக்க காலத்தில் அவற்றைத் தனியாக பராமரிப்பது, இயற்கையானச் சூழல் என்று அசத்துகிறது சென்னை முதலைகள் பண்ணை. சுமார் 5000 முதலைகள் வரை இனப்பெருக்கம் செய்ய உதவிகரமாக அமைந்த அங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஊர்வனப் பிராணிகள் வாழ்ந்து வருகின்றன.




பகுதிநேரப் பணியாளர்களில் இருந்து 24 மணிநேரமும் அங்கேயே தங்கிப் பராமரிக்கவும் ஆட்கள் வரை இருக்கிறார்கள். முதலைகள் வாழும் குளங்களைத் தூர்வாருவதில் தொடங்கி முதலைகளுக்கான உணவு வரை அனைத்தையுமே பார்த்துக்கொள்வது முதலைகள் பராமரிப்பாளர்கள்தான். பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் தளமாகச் செயல்படுவதையும் தாண்டி மேலும் பல ஆராய்ச்சிப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.



ஆரம்ப கட்டத்தில் இனப்பெருக்கம் செய்து வெளியிடும் திட்டத்தின் மூலமாக இந்தியாவின் மக்கர் முதலைகளை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாம்பல் ஆற்றுப் பகுதிகளில் அதிகம் காணப்படும் கரியால் வகை முதலைகள் எண்ணிக்கையில் இன்னும் குறைவாகவே இருப்பதால், ரேடியோ டெலிமெட்ரி ( Radio telemetry) என்ற ஆராய்ச்சியின் மூலம் அவற்றின் வலசைப் பாதை, வாழ்விடம், உணவுப் பழக்கம் அனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். "கங்கா, பிரம்மபுத்திரா, சாம்பல் போன்ற பெருவாரியான நதிகளில் அவை வாழ்ந்துகொண்டு இருந்தாலும் கரியால் முதலைகளைப் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லாததால் இந்த கரியால் எக்காலஜி பிராஜக்ட் ( Gharial Ecology project) என்ற ஆராய்ச்சித் திட்டம் அதற்குப் பேருதவியாக இருக்கும். நதிகளில் கொட்டப்படும் ரசாயனக் கழிவுகளால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கரியால் முதலைகள் இறப்பதால் அவற்றின் பாதுகாப்பிற்கு அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது முக்கியம். அதனால் அங்கு இருக்கும் மக்களுக்கும் மீனவர்களுக்கும் அவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்." என்கிறார் அங்கு காப்பிடக் கல்வியாளராக இருக்கும் திரு. அருள்.




அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓர் ஆராய்ச்சிக் குழு அந்தத் தீவுப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய என்டெமிக் உயிரினங்களைப் பற்றி ATREE என்ற அமைப்போடு இணைந்து ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார்கள். அத்தோடு முதலைகள் பண்ணையில் கோடைக் காலங்களில் எட்டு வயது நிரம்பிய குழந்தைகளுக்கென முகாம் அமைத்து ஊர்வன உயிரினங்கள் பற்றிய வகுப்புகள் எடுப்பதும் கள ஆய்வுகளைச் செய்ய வைப்பதும் என்று சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு மற்ற உயிரினங்கள் மீதான அக்கறையை வளர்த்தெடுக்கிறார்கள்.




முதலைகள் மட்டுமின்றி சில ஆமைகள், பல்லி வகைகள் போன்றவற்றையும் பராமரித்து வருகிறார்கள். பட்டகூர் பாஸ்கா என்று அழைக்கப்படும் வடக்கத்திய ஆற்று ஆமை இனம் உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக ஐ.நா வரையறுத்துள்ளது. வனங்களில் வெறும் 15 மட்டுமே இருக்கும் இந்த வகை ஆமைகள் உலகளவில் காப்பிடங்களில் இருக்கும் எண்ணிக்கை மொத்தம் 300 மட்டுமே. அதை இந்தியாவில் முதன்முறையாகப் பராமரிப்பில் வைத்து இனப்பெருக்க முயற்சி செய்தது சென்னை முதலைகள் பண்ணை தான்.



இவ்வாறு ஊர்வன விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பல முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் சென்னை முதலைகள் பண்ணை சுற்றுலாப் பயணிகளிடம் வசூல் செய்யும் கட்டணங்களிலும், நன்கொடைகளிலுமே செயல்பட்டு வரும் விலங்குகளுக்கான ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்.






முதலைகளுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே உணவளித்தால் போதுமானது. ஏனென்றால் நம்மைப் போல் அவற்றுக்கு விரைவில் செரிமானம் ஆவதில்லை. சராசரியாக நாளொன்றுக்கு நமக்கு 2000 கலோரிகள் வரை தேவைப்படும் ஆனால் முதலைகளுக்கு 150 கலோரிகள் இருந்தாலே போதும், அதை அவை ஒரு நாள் உண்ணும் உணவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்துக்கொள்கின்றன. அவை மற்ற ஊர்வன போலவே தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தவாறு உடல் வெப்பத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை. இத்தகைய திறன்மிக்க இயற்கையின் படைப்பிற்குத் தனியாக காப்பிடம் அமைத்த ராமுலஸ் விடேகரை வியக்காமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...