Monday, August 21, 2017

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தங்கச்செயின் கடத்திய பெண் பயணி கைது
2017-08-21@ 00:42:50




மீனம்பாக்கம்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த பன்சாலா (39) என்ற பெண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது பன்சாலா தான் கட்டியிருந்த புடவைக்குள் கொத்துக் கொத்தாக புத்தம் புதிய தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 16 செயின்கள் இருந்தன. அதன் மொத்த எடை அரை கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் பன்சாலாவை கைது செய்து அரை கிலோ மதிப்புள்ள தங்க செயின்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோல, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சிவகங்கையை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் வந்தார். இவர், இலங்கை வழியாக அபுதாபிக்கு செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். சுங்க அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளி நாட்டு கரன்சிகளை அவரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் கருப்பையாவின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திராவில் விரைவில் பிரீபெய்ட் மின்சாரம்: முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் நடைமுறை

2017-08-21@ 00:42:13




திருமலை: செல்போன் ரீசார்ஜ் செய்வதுபோல ஆந்திர மாநிலத்தில் பிரீபெய்ட் மின்சாரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு அலுவலகங்களில் 

இது டைமுறைப்படுத்தப்படுகிறது.ஆந்திர மாநிலத்தில் மின்சாரத்துறை நிறுவனமான டிரான்ஸ்கோ செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சார கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் வீடு, கடை மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மின்சார துறை ஊழியர்கள் மீட்டர் ரீடிங் செய்து வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்திய மின் கட்டணத்திற்கு ரசீது வழங்கப்படுகிறது. இதற்குண்டான பில் தொகையை இ-சேவா மற்றும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் பணம் கட்ட தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்வது போன்று மின்சாரம் விநியோகத்திலும் பிரீபெய்ட் முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மின் மீட்டர்கள் விரைவில் வாங்க திட்டமிட்டுள்ளனர். மேலும், எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கேற்ப பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து இந்த திட்டத்தை முதல் கட்டமாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த டிரான்ஸ்கோ திட்டமிட்டுள்ளது. இதில் அரசு துறை அலுவலகங்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமல் அப்படியே நிலுவையில் வைத்துள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
அமைச்சர்களுக்கு மோடி கடும் எச்சரிக்கை நட்சத்திர ஓட்டலில் தங்கும் ஆசையை விட்டு விடுங்கள்

2017-08-21@ 00:42:14




புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களின் கார்களை பயன்படுத்துவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது போன்ற செயல்களை கைவிடும்படி மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் ேநற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு யாரும் கலைந்து செல்லக்கூடாது என மோடி சற்று கோபத்துடன் உத்தரவிட்டார். பிறகு அவர்களிடம் பேசிய மோடி, ‘அமைச்சர்கள் சில பேரின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், தங்கள் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் கார்களை தங்கள் குடும்பத்தினருக்காகவும், தங்களுக்காகவும் துஷ்பிரோகம் செய்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களையும் வாங்குகின்றனர். இந்த ஆசைகளை எல்லாம் உடனடியாக விட்டு விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதாக மக்களுக்கு உறுதி அளித்துள்ள நிலையில், சிலர் இப்படி செய்வது கட்சியின் புகழை பாதிக்கும். ஊழல் என்ற வார்த்தையை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டேன். யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு முறை பயணமாக எங்கு சென்றாலும், அரசு விருந்தினர் மாளிகையில்தான் தங்க வேண்டும். உங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் இதை தவிர்க்க வேண்டும்.’ என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

மக்களை இணைக்கும் திரங்கா யாத்திரை: 2022ம் ஆண்டு ‘புதிய இந்தியா’வை நோக்கி, பாஜ சார்பில் திரங்கா யாத்திரை நடத்தப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி, டிவிட்டரில் நேற்று, ‘‘நாடு முழுவதும் பாஜ மேற்கொள்ளும் திரங்கா யாத்திரை, 2022ம் ஆண்டில் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவதற்கான பணியை மேற்கொள்வதில் மக்களை ஒன்றிணைக்கும். இதில் பங்கேற்ற அனைவருக்கும், கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார். யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களையும் அவர் டிவிட் செய்தார்.
தேர்தலின் போது இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபடுவது விசா விதிமுறை மீறலா?: அரசிடம் தேர்தல் ஆணையம் கேள்வி

2017-08-21@ 00:42:16




புதுடெல்லி: வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது விசா விதிமுறை மீறல் இல்லையா? என மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சிலர் ஆம் ஆத்மி கட்சிக்காக இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்து எந்த கட்சியும் புகார் அளிக்கவில்லை. இது புதுமையான முறையாக இருப்பதால் அது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து தேர்தல் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளிலும் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரசாரத்தில் ஈடுபடும் இந்திய வம்சாவளியினர் யாரும் இந்திய குடிமகன்கள் அல்ல. சுற்றுலா விசா அல்லது அலுவல் விசா போன்றவை மூலம் இந்தியா வருபவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது, விசா விதிமுறை மீறல் இல்லையா என பதில் அளிக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.இதற்கு மத்திய சட்ட அமைச்சகத்திடம் பதில் பெறும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சகம் இன்னும் பதில் அளிக்கவில்லை.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் இருந்து தப்பிக்க தங்க கட்டிகளை விழுங்கிய பயணி
2017-08-21@ 01:08:11




திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். இமிகிரேசன் சோதனைக்கு அடுத்தப்படியாக சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது பயணி ஒருவர் இமிகிரேசன் சோதனை முடிந்த பிறகு சுங்கதுறை அதிகாரிகளின் சோதனைக்கு செல்லாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க விமான நிலையத்தின் வருகை பகுதி வழியாக சாவகாசமாக வெளியேறினார். இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த சுங்கதுறை அதிகாரிகள் அந்த நபரை பின்தொடர்ந்து விரட்டினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் அவரை மடக்கி பிடித்து சுங்கதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுங்கதுறை அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினத்தை சேர்ந்த முஸ்தபா மகன் முகமதுசலீம் (49) என்பதும், அவர் மலேசியாவில் இருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பிலான 50 கிராம் கொண்ட 6 தங்க கட்டிகளை கடத்தி வந்தததும், விமான நிலையத்திற்கு வெளியே தப்பிச்சென்றபோது 6 தங்க கட்டிகளை விழுங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி விமானநிலைய சுங்க துறை அதிகாரிகள் ஜேஎம் 1 நீதிபதி கவுதமன் முன் ஆஜர்படுத்தி முகமதுசலீம் விழுங்கிய தங்கத்தை எடுப்பதற்காக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியத்திற்குள் விழுங்கிய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்படும் என சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவை அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மணமகன் குடித்து விட்டு பேசியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
2017-08-21@ 01:24:24




காலாப்பட்டு: புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 24 வயதுள்ள பி.காம்., பட்டதாரி பெண்ணுக்கும், சிதம்பரத்தில் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் 26 வயது நபருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.
மணமகனான வங்கி மேலாளருக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இரவு நேரங்களில் மதுகுடித்து விட்டு மணப்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தார். நாளடைவில் வங்கி மேலாளர் போதையில் எல்லை மீறி பேச தொடங்கியுள்ளார். அதன் பிறகுதான் மாப்பிள்ளை குடிப்பழக்கம் உள்ளவர் என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெண் பெற்றோரிடம் கூறி வந்தார். ஆனால் அவர்கள் ஊரறிய நிச்சயம் செய்து விட்டு தற்போது திருமணத்தை நிறுத்தினால் குடும்ப கவுரவம் பாதிக்கும் என்று மகளுக்கு அறிவுரை கூறினர். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. குடிப்பழக்கம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என உறுதியான முடிவெடுத்த அந்த பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை தெரிவித்து திருமணத்தை நிறுத்துமாறு புகார் அளித்தார். 

இதையடுத்து மகளிர் போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து மணமகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவரை திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பம் இல்லை என்றும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது சட்டத்துக்கு புறம்பானது என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர். இதனால் திருமணம் நின்றது.
'இந்திய தம்பதியின் விவாகரத்து மனு : வெளிநாடு கோர்ட் முடிவெடுக்கலாமா'
பதிவு செய்த நாள்21ஆக
2017
00:53

மும்பை: 'இந்தியாவை உறைவிடமாக வைத்து, ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்துள்ள தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை உயர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு, ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், நானும், என் கணவரும், துபாயில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, துபாய் கோர்ட்டில் விவாகரத்து கோரி, என் கணவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்று, துபாய் நீதிமன்றம், விவாகரத்து வழங்கிவிட்டது. எனக்கு ஜீவனாம்சம் தருவது பற்றி, எதுவும் கூறவில்லை. இதையடுத்து, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரக் கோரி, மனு தாக்கல் செய்தேன். துபாய் கோர்ட் ஏற்கனவே விவாகரத்து வழங்கிவிட்டதால், விசாரிக்க முடியாது என கூறி, என் மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்கில், தம்பதி துபாயில் வசித்தாலும், இந்திய குடிமகன்களாகத் தான் உள்ளனர். அதனால், இந்திய தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. இருவருக்கும், ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்துள்ளது. 

ஹிந்து திருமண சட்டத்தின்படி, மனு மீது விசாரணை நடத்த, துபாய் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

துபாய் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க முடியாது என்பதால், இந்த மனுவை, மும்பை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. அதனால், இந்த மனு மீது, குடும்ப நல நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
அடுத்த மாதம், 18ல் நடக்கும் விசாரணையின் போது, குடும்ப நல நீதிமன்றத்தில், தம்பதி ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

NEWS TODAY 29.01.2026