Monday, August 21, 2017

'இந்திய தம்பதியின் விவாகரத்து மனு : வெளிநாடு கோர்ட் முடிவெடுக்கலாமா'
பதிவு செய்த நாள்21ஆக
2017
00:53

மும்பை: 'இந்தியாவை உறைவிடமாக வைத்து, ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்துள்ள தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை உயர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு, ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், நானும், என் கணவரும், துபாயில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, துபாய் கோர்ட்டில் விவாகரத்து கோரி, என் கணவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்று, துபாய் நீதிமன்றம், விவாகரத்து வழங்கிவிட்டது. எனக்கு ஜீவனாம்சம் தருவது பற்றி, எதுவும் கூறவில்லை. இதையடுத்து, மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரக் கோரி, மனு தாக்கல் செய்தேன். துபாய் கோர்ட் ஏற்கனவே விவாகரத்து வழங்கிவிட்டதால், விசாரிக்க முடியாது என கூறி, என் மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், என் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்கில், தம்பதி துபாயில் வசித்தாலும், இந்திய குடிமகன்களாகத் தான் உள்ளனர். அதனால், இந்திய தம்பதியின் விவாகரத்து மனு மீது, வெளிநாட்டு நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. இருவருக்கும், ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்துள்ளது. 

ஹிந்து திருமண சட்டத்தின்படி, மனு மீது விசாரணை நடத்த, துபாய் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

துபாய் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க முடியாது என்பதால், இந்த மனுவை, மும்பை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. அதனால், இந்த மனு மீது, குடும்ப நல நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
அடுத்த மாதம், 18ல் நடக்கும் விசாரணையின் போது, குடும்ப நல நீதிமன்றத்தில், தம்பதி ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...