Monday, August 21, 2017

மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை : போதைக்கு எதிராக வரிந்து கட்டும் போலீஸ்

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:24

நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார் தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர்.

அதிகரிப்பு : பள்ளி, கல்லுாரிவகுப்புகளை, 'கட்' அடிக்கும், ஒழுங்கீன மாணவர்கள், போதை பழக்கத்துக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. காகிதத்தில், எழுத்தை அழிக்க பயன்படுத்தும், வெள்ளை நிற திரவ, ஒயிட்னரை, கைக்குட்டையில் தேய்த்து, நுகர்ந்து, போதை ஏற்றி, வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர். ஸ்டேஷனரி கடைகளில், 15 மி.லி., கொள்ளவு உள்ள ஒயிட்னர், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதில், ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதை அதிகம் நுகர்ந்தால், நான்கு மணி நேரமாவது போதை இருக்கும் என, கூறப்படுகிறது. நரம்பு மண்டலம், மூளை, கிட்னியை செயல் இழக்கச்செய்யும், ஒயிட்னர் போதைக்கு, சில ஆண்டுகள் முன், கோவையைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் பலியானார். ஒயிட்னர் போதைக்கு அடிமையாகும், மாணவர்களின் எண்ணிக்கை, சமீபத்தில் அதிகரித்துள்ளது. இவர்கள், 'திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்' என, போலீசார் கூறுகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'ஒயிட்னர்' போதைக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர், அடிமையாகி வருகின்றனர். 

இதனால், தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, ஒயிட்னர் விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல கடைகளில், தடையை மீறி, ஒயிட்னர் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால், உளவு போலீசார் வாயிலாக, ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, கடைகளில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.

அதிரடி 'ரெய்டு' : இதைத் தொடர்ந்து, தடையை மீறி, இளம் தலைமுறையினருக்கு, ஒயிட்னர் விற்கும் கடைகளில் அதிரடி, 'ரெய்டு' நடத்த உள்ளோம். இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோர், ஜாமினில் வெளிவராத வகையில்,இந்திய தண்டனை சட்டம், 328 பிரிவின் கீழ் கைதுசெய்யப்படுவர். மனித உடலை பாதிக்கும் என, தெரிந்தே, 'ஒயிட்னர்' விற்பனையில் ஈடுபட்டதால், அவர்களுக்கு, மூன்றில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரைதண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

- நமது நிருபர் -

விழுப்புரம் மாவட்டத்தில் 2 விபத்துகளில் 4 பேர் பலி

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:34

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டு விபத்துகளில், இரண்டு மாணவர்கள் உட்பட, நான்கு பேர் உயிரிழந்தனர். தஞ்சையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 35; சிங்கப்பூரில், தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த, சமீபத்தில், சொந்த ஊர் வந்தார். உறவினர்களுக்கு காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க, 'டாடா இண்டிகா' வாடகை காரில், நேற்று முன்தினம் இரவு, சென்னை புறப்பட்டார். காரை, தஞ்சாவூரைச் சேர்ந்த, 21 வயது டிரைவர் ஓட்டினார். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், சலவாதி சந்திப்பில், 'பிரேக் டவுண்' ஆகி நின்றிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கரூரைச் சேர்ந்த, 30 வயது லாரி டிரைவரை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து : கோவையைச் சேர்ந்தவர் பிரவீன், 21; அதே பகுதியில் உள்ள குமரகுரு டெக்ஸ்டைல்ஸ் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், உடன் படிக்கும், ஐந்து நண்பர்களுடன், இனோவா காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.அனைவரும், தனியார் விடுதியில் தங்கினர். நேற்று முன்தினம் நள்ளிரவு, விடுதியில் இருந்து காரில், இ.சி.ஆர்., சாலையில் மரக்காணம் சென்று, புதுச்சேரி திரும்பினர். பிரவீனின், 21 வயது நண்பர் காரை ஓட்டினார். கோட்டக்குப்பம் அடுத்த மஞ்சங்குப்பம் அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பிரவீன், காரை ஓட்டிய நண்பர் என, இருவர் இறந்தனர்; படுகாயம் அடைந்த நான்கு மாணவர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரூ.1.14 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல் : 2 பேர் கைது

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:17

மதுரை: மதுரையில் 1.14 கோடி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையில் கென்னட் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடந்தது. அப்போது டூ வீலரில் வந்த அண்ணாநகர் பாலாஜி, வண்டியூர் பிரபு ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதால் அவர்களை போலீசார் சோதனையிட்டபோது டூ வீலர் டேங்க் பையுக்குள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பாலாஜியின் அண்ணாநகர் வீட்டில் சோதனையிட்டபோது 1.14 கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பா?

போலீசார் கூறியதாவது: இவர்கள் வைத்திருந்த பணம் வெளிநாடு வாழ் இந்தியர்களுடையதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின், வெளிநாட்டு இந்தியர்களின் பணம் ரிசர்வ் வங்கியில் மாற்றப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில், பலரது பணத்தை இவர்கள் கமிஷன் அடிப்படையில் புதிய நோட்டுக்களாக மாற்றித்தந்துள்ளனரா என விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு கோடிக்கும் மேல் பணம் வைத்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
ஏன்?  உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது...ரயில்வே அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்




புதுடில்லி:'உ.பி.,மாநிலம், முசாபர்நகர் அருகே, ரயில் இருப்புப் பாதை பராமரிப்பு பணியால், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்' என, ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.



ஒடிசா மாநிலம் புரியில் இருந்து, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நோக்கிச் சென்ற உத்கல் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம், உ.பி.,யின், முசாபர்நகர் அருகே, தடம் புரண்டு விபத்துக் குள்ளானது.இதில், 23 பயணியர் உயிரிழந்தனர்; 97 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில், 26 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:ரயில் விபத்து நடந்த இடத்தில், முதற்கட்ட விசாரணை நடந்தது. இதில், ரயில் இருப்புப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரா மரிப்பு பணியால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.விபத்து நடந்த இடத்தில், பராமரிப்பு பணியில் பயன்படுத்தப்படும் சில சாதனங்கள் காணப்பட்டன. அந்த பகுதியில், தக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள பட வில்லை. ஆடியோ பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையின் அறிக்கை, ரயில்வே அமைச்சகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில், குழு அமைக் கப் பட்டுள்ளது. இக்குழு, 21ல், விசாரணையை துவங்குகிறது.தவறு இழைத்தவர்களுக்கு எதிராக, ரயில்வே அமைச்சர் உத்தரவுப்டி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து நடந்த இருப்புப் பாதையில், எந்த வகையில் பராமரிப்பு பணி நடந்தது என்பது பற்றி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை சமர்ப்பிப்பார். ரயில்வே விதிகள், முறைப் படி பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும், அவர் ஆய்வு செய்வார்.

சில நேரங்களில், அவசரம் கருதி, உடனடியாக சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பராமரிப்பு பணி நடந்திருந்தால், அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பெட்டிகளை அகற்ற ராட்சத கிரேன்கள்

:முசாபர்நகர் அருகே,விபத்து நடந்த பாதையை சரிசெய்யும் பணிகளில், ஏராளமானஊழியர் கள் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற, நேற்று காலை முதல், 140 டன் கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின் றன.விபத்தில் நொறுங்கிய ரயில் பெட்டிகளில், உயிருக்கு போராடுபவர்களை யும், இறந்தவர் களின் உடல் களையும் மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மீட்புப் பணி களில், தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்புக்கு முன்னுரிமை

மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் நேற்று, அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:ரயில் விபத்து நடந்த இடத் தில் மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். தடம் புரண்ட, 13 பெட்டிகளில், ஏழு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந் தவர்களுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ரயில்வே வாரிய தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கான பொறுப்பை, அவர்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு, 3.5 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய், சிறு காயம் அடைந்தோ ருக்கு, 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.இவ்வாறு சுரேஷ் பிரபு கூறினார்.
வருமான வரி விலக்கு கோரி தீர்மானம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:22

ராமநாதபுரம்:ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஓய்வூதியர் நல உரிமைச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் பாண்டியன் அறிக்கை, தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் சுவாமிநாதன் வரவு -செலவு திட்ட அறிக்கை சமர்ப்பித்தார். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவும், 7 வது ஊதியக்குழு அறிக்கையை விரைவில் அமல் படுத்த வேண்டும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் பெர்னார்ட் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.
ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்திய மாணவர்கள்

பதிவு செய்த நாள்20ஆக
2017
23:02

விருதுநகர்:விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் சுத்தம், ரயில்வே நிலைய சுத்தம், ரயில்வே சுற்றுப்புற சுத்தத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 முதல் 31 வரை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியைச் சேர்ந்த 25 என்.சி.சி. மாணவர்களும், 25 என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்து கொண்டு ரயில்வே ஸ்டேஷனை சுத்தப்படுத்தினர். கல்லுாரி பேராசிரியர் அழகுமணி, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சிவகுருநாதன், முதன்மை சுகாதார இன்ஸ்பெக்டர் முருகன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வினோத்குமார், நேரு யுகேந்திரா திட்ட இயக்குனர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களை தரிசிக்க சிலம்புவில் வரும் 3 மாவட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்20ஆக
2017
22:39


ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள பல்வேறு கோயில்களில் சுவாமிதரிசனம் செய்ய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வசதியாக இருப்பதால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்துசெல்வது அதிகரித்துள்ளது. 

விருதுநகர் மாவட்ட மேற்கு நகரங்களாக இருக்கும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்தது. 

இந்நிலையில், மானாமதுரை வரை வந்து சென்னை சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த சில மாதம் முன் அருப்புகோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவதால் இந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் ஒருநாள் சுற்றுலாவாக ஸ்ரீவில்லிபுத்துார் வரத் துவங்கியுள்ளனர். இதன்படி தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துார், சிவகங்கை, மானாமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமநாதபுரம் பகுதி பக்தர்கள் சிலம்பு ரயிலில் ஏறி காலை 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வந்துவிடுகின்றனர்.

ஆட்டோக்களில் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மதியம் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பிட்டுவிட்டு பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேசனில் ஓய்வு எடுத்து விட்டு, மாலை 5:30 மணிக்கு வரும் சிலம்பு ரயிலில், வீடு செல்கின்றனர். பயண நேரம் குறைவு மற்றும் குறைந்த கட்டணத்தில் சிவகங்கை உட்பட சுற்று மாவட்ட பயணிகள் தற்போது ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஒருநாள் சுற்றுலாவாக வந்துசெல்ல வசதியாக சிலம்பு ரயில் போக்குவரத்து உள்ளது. இதனை தினசரி இயக்கினால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அதிகம் வருவர். ஸ்ரீவில்லிபுத்துார் சுற்றுலா மேம்படும். 

பயணிகளுக்கு தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் செய்ய அறநிலையத்துறை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

NEWS TODAY 29.01.2026