Wednesday, August 23, 2017

முக்கிய நகரங்களுக்கு புதிய விமான சேவை
பதிவு செய்த நாள்22ஆக
2017
23:17

சென்னை: 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம், சென்னையில் இருந்து, மதுரை, கோவை, விஜயவாடா நகரங்களுக்கு, ஆக., 30ம் தேதியும், திருச்சிக்கு, 31ம் தேதியும், புதிய விமான சேவைகளை துவக்குகிறது.

குறைந்த கட்டணத்தில், சிறிய நகரங்களுக்கு, விமான சேவைகள் வழங்கும், மத்திய அரசின், 'உதான்' திட்டத்தில், சமீபத்தில், தமிழக அரசு இணைந்தது. இதன் ஒரு பகுதியாக, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம், சென்னையில் இருந்து, 30ம் தேதி முதல், மதுரை, கோவை மற்றும் ஆந்திர மாநிலம், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு, விமான சேவையை துவக்குகிறது. 31ம் தேதி முதல், திருச்சிக்கு விமானங்களை இயக்குகிறது.

இது குறித்து, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் மண்டல இயக்குனர் அருள்மணி கூறியதாவது:

இந்த புதிய சேவைக்கு, 'ஏ.டி.ஆர்., 72 - 600' ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. அதில், 70 பேர் வரை பயணிக்கலாம். சென்னையில் இருந்து விஜயவாடாவிற்கு, காலை, 10:55 மணி; மதுரைக்கு, பிற்பகல், 2:45 மணி; கோவைக்கு, மாலை, 6:50 மணிக்கு, விமானங்கள் இயக்கப்படும். திருச்சிக்கு, காலை, 7:35 மணிக்கு, விமானம் இயக்கப்படும். விரைவில், துாத்துக்குடிக்கு விமான சேவை துவங்க திட்டமிட்டு உள்ளோம். சேலத்திற்கு, விமான சேவை துவங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முதல் முறையாக நெல்லையில் பயிற்சி

பதிவு செய்த நாள்22ஆக
2017
23:03

திருநெல்வேலி: முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி பட்டறை, முதல் முறையாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.

முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், தங்கள் பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக, மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியில்ஈடுபட வேண்டும். அவர்களின் மருத்துவப் படிப்பு முடியும் தருணத்தில், அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியை, கட்டுரையாக தருவதுடன், ஆராய்ச்சியை பதிப்பிக்கவும் வேண்டும். வழக்கமாக, முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், இந்த ஆராய்ச்சி வழிகாட்டுதலுக்காக சென்னை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு செல்ல வேண்டும். மாறாக, முதல் முறையாக, இந்த பயிற்சிபட்டறை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று துவங்கியது. மொத்தம், மூன்று நாட்கள் நடைபெறும் பயிற்சி பட்டறையை, எம்.ஜி.ஆர்., மருத்துவபல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார்.

விழாவில் அவர்பேசுகையில், ''முதுகலை மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சியை சிறப்பாகவும், சமூகத்திற்கு பயன் தரும் வகையிலும் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற வகையில், இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. ''முதல் முறையாக, இந்த பயிற்சி, சென்னைக்கு வெளியே திருநெல்வேலியில்நடக்கிறது,'' என்றார். பயிற்சியில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த, 100 மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
சட்டசபை கூடுமா? எடப்பாடி அரசு கவிழுமா ?





பதிவு செய்த நாள்
ஆக 22,2017 13:38

சென்னை: தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளதை அடுத்து சட்டசபை கூடுமா ? அல்லது சமரசம் ஏற்படுமா, எதிர்கட்சியான திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபையில் எம்.எல்ஏ.,க்கள் மொத்த உறுப்பினர்கள்; 234 ,அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் - 135, இதில் எடப்பாடி அணி - 116 , தினகரன் அணி- 19 , தி.மு.க., - 89 , காங்கிரஸ்- 8 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்ற நிலையில் உள்ளனர். பெரும்பான்மை நிரூபிக்க 117 உறுப்பினர்கள்தேவை. இதில் அதிமுவிடம் உள்ள கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் என்ன நிலையில் உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
சட்டசபை கூடுமா ? எடப்பாடி அரசு கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போராட்டத்தில் தள்ளிய தமிழக அரசு : அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்22ஆக
2017
22:59

மதுரை: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் தமிழக அரசு தள்ளிஉள்ளது,'' என, மதுரையில், அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் குற்றஞ்சாட்டினார்.

அவர் கூறியதாவது: 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்து விட்டது. 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்' என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு குறித்து, உடனடியாக அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்ய, குழுவை அமைத்தனர். அந்த குழு காலாவதியாகி, புதிய குழுவை, தற்போதைய அரசு அமைத்துள்ளது. புதிய குழு மீது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அரசு உத்தரவிட வேண்டும். இத்திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 9,000 கோடி ரூபாயை, அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி எனும், ஜி.பி.எப்.,பில் வரவு வைக்க வேண்டும். நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், 10 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். 285 தாலுகா அலுவலகங்கள் செயல்படவில்லை. அரசு பணிகள் முடங்கின. அரசு, உடனடியாக, 'ஜாக்டோ - ஜியோ' சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைந்து, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
தவறினால், செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கப்படும். ஆக., 26, 27ல், மாநிலம் முழுவதும், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கும்.


சிவகங்கை சீமையில் சூப்பர் சுற்றுலா

பதிவு செய்த நாள்23ஆக
2017
00:36




இயற்கை எழில் கொஞ்சும் பிரான்மலை, கட்டடக்கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள், பக்தி மணம் கமழும் ஆன்மிக தலங்கள் என, சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பல ஆண்டுகளாக சுற்றுலா மேம்பாடு அடையாமல் இருந்தது. தற்போது சுற்றுலாத்துறை பயணிகளுக்கு வழிகாட்டி வருகிறது. 

திட்டமிடலோடு சுற்றினால் இரண்டு நாட்களில் மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் ரசித்து விடலாம். அவற்றில் சில...

செட்டிநாடு அரண்மனை

காரைக்குடி, பள்ளத்துார், ஆத்தங்குடி மற்றும் கோதமங்கலம் பகுதிகளில் காணப்படும் செட்டிநாடு வீடுகள் கலைநயத்துடன் கட்டப்பட்டவை. இறக்குமதி செய்யப்பட்ட உயர்வகை மரங்கள், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றவை. காரைக்குடியில் இருந்து 10 கி.மீ.,ல் செட்டிநாடு அரண்மனை உள்ளது. வேலைப்பாடுகள் மிகுந்த அந்த அரண்மனையை கட்டி முடிக்க இரண்டு ஆண்டு ஆகியது. கட்டட பொருட்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அரண்மனையில் விலையுயர்ந்த தேக்கு, பளிங்கு, கிரானைட் கற்களால் செய்யப்பட்ட பெரிய துாண்கள் நிறைந்த அகண்ட தாழ்வாரம் இருக்கிறது. கல்யாணம், மத சடங்குகள் நடக்கக்கூடிய விசாலமான முற்றம் உள்ளது. அரண்மனை குடும்பத்தினர் பயன்படுத்திய விலையுயர்ந்த பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1,900 சதுர அடியில் ஒன்பது கார்கள் நிறுத்தும் அளவிற்கான அறைகள் மற்றும் 'லிப்ட்' வசதியும் உள்ளது.

பேசாத குழந்தையும் பேசும்

'கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்...' என்பர். இத்தகைய பெருமையுடைய கம்பனின் சமாதி நாட்டரசன்கோட்டை அருகே உள்ளது. வாய் பேசாத குழந்தைகள் சமாதி மண்ணை சாப்பிட்டால், பேச்சாற்றல் உண்டாவதாக கூறுகின்றனர். பெரியோர் திருநீறாக பூசுகின்றனர். சமாதியில் காலை 7:௦௦ மணிக்கு ஒருவேளை பூஜை நடக்கும்.

ரூ.5.83 கோடியில் மேம்பாட்டு பணி

2011 முதல் 2014 வரை சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்கு 5.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருமலை, நாட்டரசன்கோட்டை, திருக்கோஷ்டியூர், இடைக்காட்டூர் போன்ற இடங்களில் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில்
சுற்றுலா வரவேற்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா குறித்த விபரங்களுக்கு 04565 232 348 ல் தொடர்பு கொள்ளலாம்.ஜெயக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர்

நாட்டரசன்கோட்டை

இது சிவகங்கையில் இருந்து 7 கி.மீ., ல் உள்ளது. இங்குள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயில் 18ம் நுாற்றாண்டில் நகரத்தாரால் கட்டப்பட்டது. சுயம்பாக அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் உடுக்கை, சூலம் ஏந்தி, இடது காலில் அசுரனை வதம் செய்வது போல் காட்சிதருகிறார். இக்கோயில் கட்டட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தை முதல் செவ்வாய் கிழமை 'செவ்வாய் பொங்கல்' நடக்கிறது. கோயில் முன் நகரத்தார் ஒன்று கூடி பொங்கல் வைப்பர். வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். தொடர்ந்து அம்மனுக்கு 100 க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, அபிஷேகம் செய்கின்றனர். பொங்கல் விழாவில் நகரத்தாரின் வரன் தேடும் படலமும் நடக்கும். அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

ஆன்மிக தலமிக்க பூமி

ஆன்மிக தலங்கள் நிறைந்த பூமி சிவகங்கை. 'செவ்வாய் பொங்கல்' போன்ற ஏராளமான பாரம்பரிய விழாக்களும் உள்ளன. அவற்றை தமிழகம் மட்டுமின்றி உலகளவில் சுற்றுலாத்துறை பிரபலப்படுத்தினால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தங்குமிடம், உணவகம் குறித்து சுற்றுலாத்துறை வழிகாட்ட வேண்டும்.

கோ.மாரி, சமூக ஆர்வலர்

காரைக்குடியில் தமிழ்த்தாய் கோயில், கண்ணதாசன் நினைவகம், செட்டிநாடு கால்நடை பண்ணை, திருப்புத்துாரில் மருதுபாண்டியர் நினைவகம், சிவகங்கையில் வேலுநாச்சியார் நினைவகம், அரண்மனை, கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், திருமலை, ஏரியூர் என, அடுக்கி கொண்டே செல்லலாம்.

காளையார்கோவில்

இது சிவகங்கையில் இருந்து 18 கி.மீ., ல் உள்ளது. இங்குள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயில் பாண்டிய நாட்டின் 10 வது தேவார தலமாக கருதப்படுகிறது. 150 அடி உயரமுடைய ராஜகோபுரம், ஆனைமடு எனப் பெயர் பெற்ற தெப்பக்குளம் சிறப்பு அம்சம்.

குன்றக்குடி

காரைக்குடியில் இருந்து 10 கி.மீ., உள்ளது. இங்குள்ள முருகன் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. தைப்பூசம், திருகார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடக்கும். மலையடிவாரத்தில் மூன்று குகைக் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. இங்கு கற்கால கல்வெட்டுகள் உள்ளன.

பிள்ளையார்பட்டி கோயில்

இது பழமையான குகை கோயில். மூலவர் ஆறு அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இக்கோயிலில் காணப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வெட்டு குறிப்பு கோயிலில் தொன்மையை கூறும். விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும். காரைக்குடியில் இருந்து 12 கி.மீ., ல் உள்ளது.

வேட்டங்குடி சரணாலயம்

திருப்புத்துாரில் இருந்து எட்டு கி.மீ.,ல் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இது வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி ஊர்களின் நீர்நிலைகளில் 40 எக்டேரில் அமைந்துள்ளது. உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான எட்டாயிரம் வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன. பறவைகள் முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது. நவம்பர், பிப்ரவரிக்கு இடைப்பட்ட மாதங்களில் சென்று பார்வையிடலாம்.

பிரான்மலை

இயற்கை எழில் கொஞ்சும் பிரான்மலையில் கொடுங்குன்றநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், சுயம்பு மூர்த்தி உள்ளார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் இடம்பெற்ற 274 சிவாலயங்களில் 194 வது தலம் இது. இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரம். பல நுாற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய் உதிர்ந்து விடும். மங்கைபாகர் சன்னதிக்கு மேலே ஒரு பாறையில் 'பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. இந்த செடி பூப்பதில்லை. இத்தலம் சிங்கம்புணரியில் இருந்து கி.மீ., 6 ல் உள்ளது.

இடைக்காட்டூர் சர்ச்

இது பிரான்சில் உள்ள ரய்ம்ஸ் கதீட்ரல் சர்ச்சை போன்று 1894ல் கட்டப்பட்டது. இடைக்காட்டூர் சர்ச்சில் உள்ளும், புறமும் 153 தேவ துாதர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவாலயப் பீடத்தில் 40 புனிதர்களின் போதனைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சர்ச் சுண்ணாம்பு கற்கள், ஓடுகளால் கட்டப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகளில் பூ வேலைப்பாடு, இயேசு கிறிஸ்துவின் சிலுவை பயணத்தை சித்தரிக்கிறது. சர்ச்சின் உட்பகுதி குளிராக இருக்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் ரோட்டில் 36 கி.மீ.,ல் உள்ளது.

ஆயிரம் ஜன்னல் வீடு

இந்த வீடு காரைக்குடியில் 20 ஆயிரம் சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ளது.
1941 ல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டது. இவ்வீட்டில் 25 பெரிய அறைகள், ஐந்து பெரிய கூடங்கள் உள்ளன.

திருக்கோஷ்டியூர் கோயில்

திருப்புத்துாரில் இருந்து சிவகங்கை ரோட்டில் 10 கி.மீ.,ல் உள்ளது. இது 108 வைணவ தலங்களில் ஒன்று. பொதுவாக வைணவ தலங்களில் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் காட்சி தருவார். திருக்கோஷ்டியூரில் மூன்று கோலங்கள் மட்டுமல்லாது நான்காவதாக நர்த்தன நாயகனாகவும் காட்சி தருகிறார்.

பட்டமங்கலம்

இங்குள்ள தட்சிணாமூர்த்தி கோயில் 500 ஆண்டு பழமையானது. சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள் தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே ஐந்து தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம்.
மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு

பதிவு செய்த நாள்23ஆக
2017
00:29

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு   அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், நீண்ட குழப்பத்துக்கு பின், 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த, மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிடுகிறது. ஓரிரு நாட்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 4,567 இடங்கள் உள்ளன. அத்துடன், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் திருப்பி கொடுக்கப்பட்ட, 57 இடங்கள் என, மொத்தம், 4,624 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு மருத்துவ கல்லுாரிகள் - எம்.பி.பி.எஸ்., இடங்கள் கல்லுாரி பெயர் மொத்த அகில இந்திய மாநில இடங்கள் இடங்கள் ஒதுக்கீட்டு  இடங்கள்

சென்னை
எம்.எம்.சி., 250 38 212
ஸ்டான்லி 250 37 213
கீழ்ப்பாக்கம் 150 22 128

மதுரை 150 22 128
தஞ்சாவூர் 150 23 127
நெல்லை 150 23 127
கோவை 150 22 128
திருச்சி 150 22 128
துாத்துக்குடி 150 23 127
புதுக்கோட்டை 150 22 128
செங்கல்பட்டு 100 15 85
சேலம் 100 15 85
வேலுார் 100 15 85
தேனி 100 15 85
தர்மபுரி 100 15 85
விழுப்புரம் 100 15 85
திருவாரூர் 100 15 85
சிவகங்கை 100 15 85
திருவண்ணாமலை 100 15 85
அரசு ஓமந்துாரார்,
சென்னை 100 15 85
கோவை இ.எஸ்.ஐ., 100 15 85
கன்னியாகுமரி 100 15 85
சிதம்பரம்,
ராஜா முத்தையா 150 22 128
மொத்த இடங்கள் 3,050 456 2,594
அரசு கல்லுாரிகள் - பி.டி.எஸ்., இடங்கள்
சென்னை அரசு
பல் மருத்துவ கல்லுாரி 100 15 85
சிதம்பரம், ராஜா
முத்தையா பல்
மருத்துவ கல்லுாரி 100 15 85
மொத்த இடங்கள் 200 30 170
வீட்டின் விலை வெறும் 'ரூ.36 ஆயிரம்'
பதிவு செய்த நாள்23ஆக
2017
00:11

கோவை : 'புது வீடு தேவைப்படுவோர், 36 ஆயிரம் ரூபாய், ஆவணங்களுடன் வரவும்' என்று குடிசைமாற்று வாரியம் சார்பில் வெளியான அறிவிப்பால், கோவை சி.எம்.சி.,காலனி மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

கோவை வெரைட்டிஹால் ரோட்டில் இருக்கிறது சி.எம்.சி., காலனி. இங்குள்ள, 412 அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் வீடு கிடைக்காத சுமார், நுாற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள சிட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து, குடிசைகள் அமைத்து குடும்பத்துடன் வசிக்கின்றனர்.நீர்வழியோரங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும், அம்மன்குளம், கணபதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தந்துள்ள மாநகராட்சி, சி.எம்.சி., காலனி மக்களுக்கும், வெள்ளலுாரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளது.இந்நிலையில், 'தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, வரும்24ம் தேதி (நாளை) காலை 10:00 மணிக்கு, குலுக்கல் நடைபெறப் போவதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும், 36 ஆயிரம் ரூபாய் சகிதம், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு வருமாறும்', சாதாரண காகிதத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குடிசை மாற்று வாரியம்.

சாதாரண தாளில் எழுதி, ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, யாரோ ஒரு சிறுவன் வாயிலாக வினியோகிக்கப்பட்ட இந்த அறிவிப்பை, இந்த பகுதி மக்கள் நம்பத்தயாராக இல்லை. அதே நேரம் வாய்ப்பை விடவும் மனதில்லை.இது குறித்து விசாரித்து, உண்மையை கண்டறிய கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ''வெள்ளலுார் பகுதி பள்ளிகளில் குழந்தைகளை மாற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இவர்களில் சிலர் மட்டுமே துப்புரவு பணியாளர்கள். தினமும் அதிகாலையில், இவர்களை பணிக்கு அழைத்து செல்ல, மாநகராட்சி வாகன வசதி செய்து தர வேண்டும். நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, ''குடிசை மாற்று வாரியம் சார்பில், அப்படி எந்தவொரு அறிவிப்பும் சாதாரண தாளில் அனுப்பவில்லை. ஏதோ அரசியல்கட்சியினர் போலியாக அனுப்பி ஏமாற்றியுள்ளனர்.தொகுதி எம்.எல்.ஏ.,வும் மறுத்துள்ளார். 

எப்படியிருந்தாலும், இப்போது ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துள்ள அப்பகுதி மக்களில், 60 பேர் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ளலுாரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியமர்த்தப்படுவர்,'' என்றார்.ஸ்மார்ட் சிட்டி ஆக, அடுத்த சில ஆண்டுகளில் கோவை மாறும்போது, வெள்ளை வேட்டியில் கரும்புள்ளியாக, அழகிய நகரின் நடுவே காட்சியளிக்கப் போகிறது அசிங்கமான சி.எம்.சி., காலனி. ஆகவே, புது வீட்டில் குடியேற மறுக்கும் இப்பகுதிவாசிகளின், சிறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒன்றே, இப்போதைக்கு மாநகராட்சி எடுக்கும் 'ஸ்மார்ட்' ஆன முடிவாக இருக்க முடியும்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...