Saturday, August 26, 2017

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு செப். ௨௦ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:01

புதுடில்லி, '௨ஜி' அலைக்கற்றை முறைகேடு வழக்கில், நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு வழங்கும் தேதியை, அடுத்த மாதம், ௨௦ம் தேதி அறிவிப்பதாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சி இருந்த போது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., என்கிற மத்திய தலைமை கணக்கு அலுவலகம் குற்றஞ்சாட்டியது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணை முழுதும், ஏப்ரல் ௨௬ல் முடி
வடைந்தது. தீர்ப்பு எழுதும் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தீர்ப்பு வழங்கும் தேதியை, செப்., ௨௦ல் அறிவிப்பதாக, நிதிபதி, சைனி நேற்று தெரிவித்தார்.
'தனிமனித சுதந்திரம் தீர்ப்புமாட்டிறைச்சிக்கும் பொருந்தும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:40


புதுடில்லி, 'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.இந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மஹாராஷ்டிர அரசின் உத்தரவுக்கு, மும்பை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்க்கும் வழக்கு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிமனித சுதந்திரம் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். 'என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று மற்றவர்கள் நம்முடைய விருப்பத்தில் தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. 'அதனால், இந்த வழக்கில், தனிமனித சுதந்திர தீர்ப்பும் பொருந்தும்' என, அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஆற்றங்கரையில் செத்து மிதக்கும் மீன்கள் தொடர்வதால் மீனவர்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:52




ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே, கழிமுக பகுதியில் இறால் பண்ணை
கழிவுகளால் கடலில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம்,
ஆற்றங்கரை கடற்கரை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். பாரம்பரிய முறையில் கரைவலை, வல்லம், பைபர் படகுகளில் மீன் பிடித்து வாழ்கின்றனர். 

இப்பகுதியில், வெளியூர் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீன் வளம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின்கரை கழிமுக பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே, ஆக.,9ல் இதுபோல் கரை ஒதுங்கின. தற்போது கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.
ஆற்றங்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் முகமது அலி ஜின்னா கூறியதாவது:

இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இறால் உணவு, விரைவான வளர்ச்சி, நோய்களுக்காக வேதிப்பொருட்களை கலக்கின்றனர். கழிவுகளை கடலில் விடுவதால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மீன்கள் செத்து கரை ஒதுங்கலாம். கடலில் மீன் வளம் குறைந்து தொழில் நசிந்து வரும் நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும், இறால் பண்ணைகளை அரசு தடை செய்ய வேண்டும், என்றார்.

இந்நிலையில், நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள், பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் கடல் நீரை சேகரித்து, மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
பேரறிவாளனுக்கு திருமணம் தாய் அற்புதம்மாள் தகவல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:10




வேலுார், ''பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளோம்,'' என, அவரது தாய் அற்புதம்மாள் கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலுார் சிறையில், 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டுஉள்ள, தன் தந்தை ஞானசேகரன், தாய் அற்புதம்மாள் ஆகியோரை பார்க்க, அவருக்கு, நேற்று முன்தினம், ஒரு மாதம், 'பரோல்' வழங்கப்பட்டது.அன்று இரவு, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு, இரவு, 11:00 மணிக்கு, பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார். டி.எஸ்.பி., பழனிசெல்வம் தலைமையில், 11 போலீசார், 24 மணி நேரமும், அவரதுவீட்டுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.'ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு, பேரறிவாளன் தினமும் சென்று, கையெழுத்து போட வேண்டும்' என, பரோல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசாரே, பேரறிவாளன் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்குகின்றனர்.

பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பேரறிவாளன், 20 வயதில் சிறைக்குச் சென்று, 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின் தான் வெளியே வந்துள்ளார். தற்போது, அவருக்கு, 46 வயதாகிறது. பரோலில் விடுவிக்கப்பட்டது தற்காலிக மகிழ்ச்சி தான்.
அவர், நிரந்தரமாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசை; பெண் பார்த்து
வருகிறோம். வரன் அமைந்து விட்டால், பரோல் முடிவதற்குள், திருமணம் செய்து வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
தோப்புக்கரண தண்டனை

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:03

பெண்ணாடம், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில், நேற்று காலை, 6:00 மணியளவில், அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை, கிராம மக்கள் திரண்டு, சிறை பிடித்தனர். கிராம மக்களுக்கும், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த, அரியலுார் மாவட்டம், தளவாய் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., ஸ்ரீதர், கிராம மக்களை சமாதானம் செய்தார். 

மணல் ஏற்றிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தோப்புக் கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினார்.
உயர் சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:44

சென்னை, 'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, மத்திய அரசின், மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துஉள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு,
ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிமன்றத்தில் இருந்து, முழுமையான தீர்ப்பு வரும் வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்ப்பு வந்ததும், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு, www.mcc.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதனால், மாணவர்கள் தொடர்ந்து இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஓணம் கொண்டாட்டம் துவக்கம்: செப்.4 திருவோணம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:22




நாகர்கோவில், ஆவணி அஸ்தம் நட்சத்திரமான நேற்று ஓண கொண்டாட்டம் தொடங்கியது. இனி 10 நாட்கள் மலர்களால் அமைக்கப்படும் கோலங்கள் மக்களை வரவேற்கும்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரத்தில் வாமன அவதாரத்தை விளக்குவதுதான் திருவோண பண்டிகையின் வரலாறு. திருக்காக்கரை பகுதியை வாய்மை தவறாமல் ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்று அடி நிலம் கேட்ட போது தருகிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்ற மூன்றாவது அடிக்கு தனது தலைை-யை கொடுத்து மண்ணுக்குள் அந்த மன்னர் மாய்ந்து போனார். 

அவ்வாறு மாய்ந்த மன்னர் விஷ்ணுபகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி மாதம் ஓணம் நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம்.
செப்., 4-ம் தேதி திருவோண பண்டிகை . அதற்கு முன்னோடியாக அஸ்தம் நட்சத்திர தினமான நேற்று காலையில் ஓண கொண்டாட்டம் தொடங்கியது.
வீடுகளின் முன் மலர்களால் அமைக்கப்பட்ட கண்கவர் கோலங்கள் அணி வகுத்தது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் நேற்று காலை அத்தப்பூகோலம் போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர். 

ஓண கொண்டாட்டம் 2வது நாளில் கோலம் மெருகூட்டல் தொடர்ந்து ஒவ்வொறு நாள்களிலும்,ஓணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், அறுசுவை விருந்துக்கான ஆயத்தம்,படகு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்துதல், கலாசார விழாக்கள் நடத்துதல், அத்தப்பூ கோலத்தை மேலும் மெருகூட்டுதல், அத்தப்பூ கோலத்தில் களிமண் மேடு அமைத்து அலங்கரித்தல், திருவோணத்தை வரவேற்கும் முன்னேற்பாடுகள், கடைசி நாளான பத்தாம் நாளன்று திருவோணத்தை அறுசுவை உணவுடன், புத்தாடை அணிந்து கொண்டாடுதல்.

இப்படி 10 நாட்கள் கேரளா மட்டுமல்ல, அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஓண கொண்டாட்டம் களை கட்டும். ஓணத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் பூக்களின் விலை
உயர்ந்தது.

NEWS TODAY 10.07.2026