Monday, September 11, 2017

'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டமா? - பாய்கிறது நீதிமன்ற அவதிப்பு வழக்கு

பதிவு செய்த நாள்10செப்
2017
22:26


'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களை துாண்டி விட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் தள்ளப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மருத்துவ கல்விக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு எதிராக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி, போராட்டத்தை வலுப்படுத்த, சமூக வலைதளங்கள் வாயிலாக, சில அரசியல் கட்சியினர் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதனால், தமிழகம் முழுவதும், காவல் துறையினர், சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளனர். உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், அறவழியில் போராட தடை ஏதும் இல்லை; அதற்காக இடங்களும் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. காவல் துறையில், உரிய அனுமதி பெற்று, அந்த இடங்களில் போராட்டம் நடத்தலாம். ஆனால், மத்திய --- மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பது போல, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வது தண்டனைக்குரிய குற்றம்.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும், ஈடுபட தயாராகி வரும், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். 

அதற்காக, மாநிலம் முழுவதும், போலீஸ் அதிகாரிகளின் தலைமையில், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் நாள் என்பதால், கல்வி நிறுவனங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்துவோர், நீதிமன்ற அவதிப்பின் வழக்கில், சிறையில் தள்ளப்படுவர். காலையில் கைது, மாலையில் விடுதலை என்ற நிலை இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
இளநிலை டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சி

பதிவு செய்த நாள்11செப்
2017
00:47

சென்னை: ''மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்களுக்கு, அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் விரைவில் துவங்கப்படும்,'' என, டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறினார்.சென்னை மருத்துவ கல்லுாரியில், முட நீக்கியல் துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டு விழாவில், முட நீக்கியல் நிபுணரும் பேராசிரியருமான பாலைய்யா குட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில், டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் பேசியதாவது:உடல்களை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி பெறுவதற்கான ஆராய்ச்சி கூடம், சென்னை மருத்துவ கல்லுாரியில், 2015ல் நிறுவப்பட்டது. இந்த பயிற்சி கூடத்தில், 500 டாக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளை தவிர்த்து, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் ஆகியோருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த துறையின் சார்பில், எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட எலும்புகளை வைத்து, 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. பிற மருத்துவ கல்லுாரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும், எலும்பு வங்கியை துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புறாவுக்கே டிக்கெட்டா? கண்டக்டருக்கு, 'மெமோ'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:46

சென்னை : அரசு பஸ்சில், புறாவுக்கு, டிக்கெட் கொடுக்காத கண்டக்டருக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது, போக்குவரத்து வட்டாரத்தில், அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, எல்லவாடி என்ற பழங்குடியின கிராமத்திற்கு சென்ற, அரசு புறநகர் பஸ்சில், பயணி ஒருவர், ஒரு புறாவுடன் பயணித்தார். பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாக்காரரிடம் டிக்கெட் கேட்டனர். தான் வாங்கிய, டிக்கெட்டை அவர் காட்டினார். புறாவுக்கான டிக்கெட்டை கேட்டதும், பயணியும், கண்டக்டரும் செய்வதறியாது விழித்தனர்.புறாவுக்கு, டிக்கெட் வழங்காத கண்டக்டருக்கு, அதிகாரிகள், 'மெமோ' வழங்கினர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலம் இரண்டாவது கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு பஸ்சில் இந்நிகழ்ச்சி நடந்து உள்ளது. பாதிக்கப்பட்ட கண்டக்டர் புகார் அளிக்கவில்லை. பொதுவாக, 30 பறவை களுக்கு மேல் ஒருவர் கொண்டு சென்றால், அவற்றிற்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.மேலும், கூண்டுக்கிளி தவிர, பிற பறவைகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்ற விதியும் உள்ளது. இதுகுறித்து, இன்று விசாரணை நடத்தப்படும். அப்போது, உண்மை நிலை தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
மழையால் பக்தர்கள் வருகை குறைவு திருவண்ணாமலை கோவில், 'வெறிச்'
பதிவு செய்த நாள்10செப்
2017
23:44

திருவண்ணாமலை : தொடர் மழை காரணமாக, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும், வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நேற்று கோவில் வளாகம் வெறிச்சோடியது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில், தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.தற்போது, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால், வார விடுமுறையான, இரண்டு நாட்களாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளூர் பக்தர்கள் மட்டுமே வந்து, தரிசனம் செய்து சென்றனர். எப்போதும், பக்தர்கள் கூட்டத்தால், பரபரப்புடன் காணப்படும் அருணாசலேஸ்வரர் கோவில், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மருத்துவ வகுப்பு இன்று துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
23:33

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வகுப்பு இன்று துவங்குகிறது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், 6ம் தேதி முதல், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.பல்கலை பதிவாளர், ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி, இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு முதல், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதுநிலை அனைத்து துறை மாணவர்களுக்கான
வகுப்புகள், இன்று - 11ம் தேதி துவங்குகிறது' என, தெரிவித்துள்ளார்.
மருத்துவ, 'அட்மிஷன்' சென்னைக்கு, 'ஜாக்பாட்'

பதிவு செய்த நாள்10செப்
2017
23:28


'நீட்' தேர்வில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மாணவர்கள் முன்னிலை பெற்று, அதிக மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர்.

தேர்வுக்கு விலக்கு கேட்டு, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இதில், பெரும்பாலும் ஊரக பகுதி மாணவர்கள், பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாநில அளவில், 'நீட்' தேர்வுப்படி நடத்தப்பட்ட, அரசு மருத்துவ கவுன்சிலிங்கில், சென்னை மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

கடந்தாண்டு, சென்னை மாணவர்கள், ௧௧௩ பேர் மட்டும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு, ௪௭௧ மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதே நேரம், 2016ல், பிளஸ் ௨ தேர்வு, இன்ஜி., மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், 'டாப்பர்' பட்டியலில் இடம் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தில், அதிகபட்சம், ௯௫௭ பேர் மருத்துவ இடங்களை பெற்றனர்.

இந்த ஆண்டு, 'நீட்' தேர்வின்படி நடந்த கவுன்சிலிங்கில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த, ௧௦௯ பேர் மட்டுமே, மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர்.தங்கும் விடுதியுடன், பிளஸ் ௨ தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல் மாவட்டம், 'நீட்' தேர்வில் பின்தங்கி உள்ளது. இதன்படி, மனப்பாடக் கல்விக்கு, 'நீட்' தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.

வேலுார், கோவை, திருநெல்வேலி, கடலுார், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில், 2016ஐ விட, இந்த ஆண்டு, மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:'நீட்' தேர்வால், சென்னை போன்ற மாவட்டங்களில், மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில, வட மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அனைத்து மாவட்டத்தினருக்கும் வாய்ப்பு ஏற்படும் வகையில், மாணவர்களுக்கு, 'நீட்' குறித்த பயிற்சிகளை அளிக்க வேண்டும்.வரும் கல்வியாண்டில், 'நீட்' தேர்வுப்படி தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்குமா என்பதை, தமிழக அரசு, உடனே தெளிவுபடுத்த வேண்டும்.

அதற்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியும், முன் தயாரிப்பும் வழங்க வேண்டும். அதே போல், 'நீட்' தேர்வால், முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த வேறுபாட்டையும் களைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
லைசென்ஸ் கோரி 2 லட்சம் விண்ணப்பம் அரசின் கிடுக்கிப்பிடியால் ஆர்வம்
பதிவு செய்த நாள்10செப்
2017
21:43



சென்னை : அரசின் கிடுக்கிப்பிடி காரணமாக, ஒரே வாரத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், லைசென்ஸ் கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள், செப்., 1 முதல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பது, கட்டாயமாகி உள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதனால், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, பழகுனர் லைசென்ஸ், ஒரிஜினல் லைசென்ஸ் கோரி வருவோரின் எண்ணிக்கை, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

எனவே, விடுமுறை தினமான சனியன்றும், தமிழகம் முழுவதும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்பட்டன.இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசின் அறிவிப்பு, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 100 பேர் தான், பல்வேறு விதமான லைசென்ஸ் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது, தினமும், 500 பேர் வருகின்றனர்.

ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு லட்சம் பேர், பழகுனர் லைசென்ஸ், டிரைவிங் லைசென்ஸ் கோரி, விண்ணப்பம் செய்துஉள்ளனர்.விதிமீறலில் ஈடுபடுவோரின் லைசென்ஸ், மூன்று மாதங்கள் வரை, 'சஸ்பெண்ட்' செய்யப்படும். ஆனால், அவர்கள், நகல் லைசென்ஸ் வைத்து, வாகனம் ஓட்டுவர். தற்போது, அவ்வாறு செய்ய இயலாது.

ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே, இனி, வாகனங்களை ஓட்ட முடியும். அதனால், சாலை விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 15.07.2026