Tuesday, September 12, 2017

வேலைநிறுத்தம் ஏன்? பஸ் ஊழியர்கள் விளக்கம்
பதிவு செய்த நாள்11செப்
2017
22:41

சென்னை: அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான், 24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: பஸ் ஊழியருக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியரிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, 2,200 கோடி ரூபாய்; பங்களிப்பு ஓய்வூதியம், 1,700 கோடி ரூபாய்; பணிக்கொடை நிதி, 750 கோடி ரூபாய்; கூட்டுறவு நிறுவனங்களுக்காக பிடித்தம் செய்த, 300 கோடி ரூபாய்; விடுப்பு சம்பளம், 300 கோடி ரூபாய், என, 5,250 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வரவில்லை. ஓய்வு பெற்றோருக்கான, 800 கோடி ரூபாய்; பேச்சுக்கு பின், நிர்வாகம் செலவழித்த தொகை, 600 கோடி ரூபாயை வழங்க, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைகளை பணியில் அமர்த்திய சூதாட்ட கிளப் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 2 லட்சம் போதை பொருள் பறிமுதல்

2017-09-11@ 00:33:45




கீழ்ப்பாக்கம்: தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைளை பணியில் அமர்த்தி சூதாட்ட கிளப் நடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் வார விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மது போதை, விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகளும் சூதாட்டமும் நடைபெற்றது. இதனால் குடியிருப்புக்கு ஏராளமான விஐபிக்கள் சொகுசு கார்களில் வந்து சென்றனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று முன் தினம் இரவு அக்குடியிருப்பில் உதவி கமிஷனர் ஹரிகுமார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

அப்போது அக்குடியிருப்பில் வெளிப்பக்கம் பூட்டியிருந்த ஒரு வீட்டின் மீது உதவி கமிஷனருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவ்வீட்டின் கதவை அவர் தொடர்ந்து தட்டியதும் அங்கிருந்த அறையில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். பிறகு பூட்டை திறந்த போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஹான்ஸ், பான்பராக், உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் அங்கே சூதாட்டம் நடந்ததற்கு அடையாளமாக சீட்டுக் கட்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட யோகேஷ் ஜோஷி (22) என்ற வாலிபர் கொடுத்த தகவலின்படி சூதாட்ட கிளப் நடத்திய தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்ரமன் (38) என்பவரை கைது செய்தனர். அவர் போலீஸ் விசாரணையில், ‘‘நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த சூதாட்ட கிளப்பை நடத்துகிறேன்.

ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த கிளப் நடைபெறும். ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகள் இங்குவந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு தேவையான மது, குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். சில சமயங்களில் இளம்பெண்களை வரவைத்து நடனம் ஆடி ரசிப்போம். சினிமா துணை நடிகைகள் வந்து ஆடியிருக்கிறார்கள். யோகேஷ் ஜோஷி என்னிடம் பல வருடங்களாக ஊழியராக வேலை பார்க்கிறான். நீங்கள் ரெய்டு நடத்திய தினத்தில் நான் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டதால் அன்றைய தினம் கிளப் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக லண்டனில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்
2017-09-11@ 17:17:22




லண்டன்: நீட் தேர்வுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் கடல் கடந்து பிரிட்டன் வரை பரவி உள்ளது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இந்திய தூதரம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் நீட் தேர்வு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தப்படி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாகும். கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக்கூடாது என்று இந்திய அரசை பிரிட்டன் வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றம் 18ல் விசாரணை

2017-09-12@ 00:21:29




புதுடெல்லி: தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதனால், தமிழகத்தின் இந்த ஒதுக்கீட்டு முறையை உடனடியாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கடந்த வாரம் நாகர்கோவிலை சேர்ந்த திருமால்மங்கள் என்ற மாணவி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர் மற்றும் சந்திராசூட் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், அது விசாரிக்கப்படவில்லை. எனவே, விசாரனையை 18ம் தேதி நடத்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
சிபிஎஸ்இ ஆசிரியர்கள் 33 பேருக்கு விருது

2017-09-12@ 00:23:44




புதுடெல்லி: நாடு முழுவதும் திறமையாக செயல்பட்ட 33 சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆர்வம், அவர்கள் சார்ந்த துறையில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அர்ப்பணிப்புவு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கலந்துக் கொண்டு 33 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்கினார். சிபிஎஸ்இ-யின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனிதா கார்வாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘புதிய தலைமுறைகளை நல்ல முறையில் உருவாக்குவதன் மூலம் நாட்டை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணி ஈடு இணையில்லாதது. ஆசிரியர்களே நாட்டின் உண்மையான பெருமையாக உள்ளனர். மாணவர்கள் மீதும் அதன் மூலம் நாட்டின் மீதும் இவர்கள் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'’ என்றார்.
போராட்டம் எதிரொலி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை: தமிழக அரசு அவசர உத்தரவு
2017-09-12@ 00:39:40




நெல்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக அவர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக அரசு நேற்று அவசர உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதை பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ேநற்று 5ம் நாளாக அரசு ஊழியர்களின் ேவலைநிறுத்தம் தொடர்ந்ததால் அத்யாவசிய பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. இந்நிலையில் தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேலைநிறுத்தம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கக் கூடாது. அவர்கள் பணிக்கு வராதது சட்ட விரோதமானது என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்புகளும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவ விடுப்பு தவிர எந்த விடுப்பும் எடுக்க அனுமதி கிடையாது. அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு கோரினால் அவர்களது மருத்துவ சான்றின் உண்மைத் தன்மையை அறிய உரிய மருத்துவ குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ சான்றின் உண்மையை அறிவதற்கு முன்பு மருத்துவ விடுப்பு வழங்கக் கூடாது. அரசு ஊழியர் மருத்துவ விடுப்பு கோரி அளித்த சான்று உண்மையிலேயே மருத்துவம் சார்ந்தது இல்லை என தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் குவியும் பக்தர்கள் இன்று முதல் காவிரி புஷ்கரம்
2017-09-12@ 01:05:53




திருச்சி: ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நம் நாட்டில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்னும் பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இன்று குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். எனவே காவிரி மகாபுஷ்கரம் விழா இன்று(12ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

விழா நடைபெறும் 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். மகா புஷ்கரத்தில் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளனர். மயிலாடுதுறை துலாகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதன் பின் 8.25 மணிக்கு ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் காவிரி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனிதநீராடுவர். தொடர்ந்து துறவியர் மாநாடு நடக்கிறது.

NEWS TODAY 15.07.2026