Saturday, August 3, 2019

அத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்: முழு விவரம் இதோ!

By DIN | Published on : 01st August 2019 12:40 PM |



அத்திவரதர் பெருவிழா தொடங்கிய நாள் முதல் தமிழகமே அத்திவரதரின் நாமத்தைத் தான் இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கிறது.

கடந்த 31 நாட்களில் 45 லட்சம் மக்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இன்று முதல் இன்னும் 17 நாட்கள் இருக்கின்றன. இன்னும் எத்தனை லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று கணிக்கமுடியவில்லை. ஏற்கனவே சயன கோலத்தில் சுவாமியை தரிசித்தவர்கள் கூட நின்ற கோலத்தில் அவரை தரிசிக்க வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. எனவே கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அத்திவரதருக்கு ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் ஏற்பாடு செய்துள்ளன.



நாளொன்றுக்கு 500 பேர் சகஸ்ரநாம அர்ச்சனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு 4 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. ஒருவருக்கு ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் காலை 6.30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நேரம் கூட்டத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. முன்பதிவு செய்யும் போது அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதற்கான முன்பதிவு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.

சிறப்பு தரிசனத்துக்கும் 4 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் முற்பகல் 11 மணிக்கு இதற்கான முன்பதிவு தொடங்குகிறது. ரூ.300 செலுத்தி மாலை 6.30 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க முடியும். ஒவ்வொரு நாளும் 1900 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக மாலை 6.30 மணிக்கு 950 டிக்கெட்டுகளும், இரவு 8.30 மணி தரிசனத்துக்கு 950 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படுகிறது.

சிறப்பு தரிசனம் மற்றும் சகஸ்ரநாம தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாக முக்கியஸ்தர்கள் செல்லும் தனிவரிசையில் அனுமதிக்கப்படுவர். மேலும், இதற்கான விதிமுறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



இதில் ஒரு முறையில் 4 பேருக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒவ்வொருவரின் ஆதார் எண்ணும் அவசியம். முன்பதிவு என்ற இடத்தில் கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். இடையே ADD என்ற இடத்தைக் கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்து, கேப்சாவை சரியாகப் பதிவு செய்து சமர்ப்பித்தால், பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு வரும். அதன் மூலம் உரிய பணத்தை செலுத்த வேண்டும்.



பணம் செலுத்தியதும் உரிய ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். அதற்காகவும் ஒருதனி பிரிவு உள்ளது. அதில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்தால் நீங்கள் செலுத்திய பணத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கும். அதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.



ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய குவிவதால், சில முறைகள் உங்கள் சமர்ப்பிப்பு நிராகரிக்கப்படலாம். தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் முன்பதிவு டிக்கெட்டை பதிவு செய்ய முடியும்.



முன்பதிவு தேதியை பதிவு செய்யும் பயனாளர்களால் மாற்ற முடியாது. இன்று பதிவு செய்ய நீங்கள் முயற்சித்தால் நான்கு நாட்களுக்குப் பிறகான தேதியில்தான் முன்பதிவு செய்ய முடியும். அதுவும் சனி மற்றும் ஞாயிறுகளில் இந்த தரிசனங்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு சில நாட்கள் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் கூட முன்பதிவு முடிந்து விடுகிறது என்பதுதான் ஆச்சரியம்.
எங்கே மனசாட்சியின் குரல்?
By ஆசிரியர் | Published on : 02nd August 2019 01:47 AM 

ரத்தத்தை உறைய வைக்கிறது உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் நீதிக்கான போராட்டமும். பதவி பலம் உள்ளவர்களுக்கு எதிராக சாமானியக் குடிமகன் வழக்கைப் பதிவு செய்வதற்குக்கூட எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும், அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் எப்படி அடிப்படை சட்ட நடைமுறைகளைக்கூட மாற்ற முடியும் என்பதையும் எடுத்துரைக்கிறது.
குல்தீப் சிங் செங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர். 2002 முதல் தொடர்ந்து நான்கு முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர். ஒருமுறை சமாஜவாதி கட்சி உறுப்பினராகவும் இருந்தவர். வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டு ஒரு பெண் அவரிடம் சென்றார். 

அந்தப் பெண்ணை - அப்போது அவர் மைனர் - செங்கரும் அவரது சகோதரரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இது நடந்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கிழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்று தெரிந்தும், செங்கருக்கும் அவரது சகோதரருக்கும் எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் நிலையத்தினர், குற்றவாளிகளின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏறத்தாழ ஓராண்டாகியும் தாங்கள் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அது குறித்து விளக்கம் கேட்க முற்பட்டார் அந்தப் பெண்ணின் தந்தை. அதுதான் அவர் செய்த குற்றம். அவர்மீது பொய் வழக்கு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அந்தப் பெண்ணின் தந்தையை, செங்கரின் சகோதரரும், கூட்டாளியும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். போலீஸ் காவலில் இருந்த ஒருவர் ஏன், எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்துக்கூட முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தனக்குக் காவல் துறையினரிடம் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தப் பெண், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவுக்குச் சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் முன்னால் தீக்குளிக்க முற்பட்டபோதுதான், அந்தப் பிரச்னைக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது. மக்கள் மன்றம் அந்தப் பிரச்னை குறித்து நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கியது. அந்த அளவுக்கு நமது சமுதாயம் மரத்துப்போயிருக்கிறது என்பதன் அடையாளம் இது.

பொது வெளியில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. செங்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சிபிஐ, அதைக் கிடப்பில் போட்டது. அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருந்த மாமாவின் மீது காவல் துறை ஒரு வழக்கை ஜோடித்து அவரை சிறையில் தள்ளியது.
ரேபரேலியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாமாவைச் சந்திக்க அந்தப் பெண்ணும், அவரது இரண்டு சித்திமார்களும், வழக்குரைஞரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் காரில் ஒரு லாரி பலமாக மோதி ஏற்படுத்திய விபத்தில் இரண்டு சித்திகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதுதான் சிபிஐ விழித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் விழித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதன் அடையாளம் இது.

காரில் மோதிய வாகனத்தின் எண் பலகை அழிக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தின் வேகமும், விதிகளை மீறித் தவறான பாதையில் வந்து மோதியிருக்கும் விதமும் இதற்குப் பின்னால் சதி இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையைப் பொருத்தவரை, இது வெறும் சாலை விபத்தாகத்தான் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் லாரியின் ஓட்டுநர் பெயரும், அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயரும்கூட இடம்பெறவில்லை என்பதை என்னவென்பது?
செங்கரின் ஆட்களால் தங்களுக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சம் குறித்தும், நீதி கேட்டும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண்ணின் தாயார் கடந்த ஜூலை 12-ஆம் தேதி எழுதிய கடிதம் அவரது பார்வைக்கே கொண்டு செல்லப்படவில்லை. கடந்த ஜனவரி மாதமே, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி கோரி அவர் எழுதிய மனுவும் தலைமை நீதிபதியிடம் போய்ச் சேரவில்லை. உச்சநீதிமன்றத்தின் நிலைமையே இப்படி என்றால், இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா இல்லை, மாஃபியா ஆட்சியா என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசும், பாஜகவும் இந்தப் பிரச்னையை எப்படி கையாள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அவர்கள் மீதான நம்பகத்தன்மையும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் உறுதிப்படும்.

கடந்த மக்களவையில் 26% உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. 2019-இல் அமைந்த 17-ஆவது மக்களவையில் 43% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள். இவர்கள்தான் சட்டமியற்றுகிறார்கள்!
திருவாரூர் தேரில் இருந்து விழுந்த அர்ச்சகர் படுகாயம்

Added : ஆக 03, 2019 02:11

திருவாரூர்:தியாகராஜர் கோவில் ஆடிப்பூர உற்சவ, தேரோட்டத்தின்போது, தேரில் இருந்து தவறி விழுந்த அர்ச்சகர் படுகாயமடைந்தார்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடிப்பூர உற்சவ விழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு, கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு, 8:30 மணிக்கு நிலைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரில் ஏறி, அம்பாளை தரிசனம் செய்தனர். 

அப்போது, தேரில் அர்ச்சகர் முரளி, 56, அம்பாளுக்கு தீபாராதனை காட்டினார்.பின், தேரில் இருந்து சுவாமியை இறக்குவதற்கு முன், தீபாராதனை காட்டும்போது, கால் தடுமாறி, தேரிலிருந்து விழுந்தார்.படுகாயம் அடைந்த முரளி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம்

Added : ஆக 03, 2019 01:39

சென்னை:லோக்சபா பொதுத் தேர்தலில் பணியாற்றிய, வருவாய் துறை ஊழியர்களுக்கு, மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்களாக, உதவி தேர்தல் அலுவலர்களாக பணிபுரிந்த, மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் தாசில்தார், மண்டல தாசில்தார், தாசில்தார் போன்றோருக்கு, அவர்களின், ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 33 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், எது குறைவோ, அந்தத் தொகை வழங்கப்படும்.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு போன்றவற்றில் இருந்த, கோட்டாட்சியர், தாசில்தார், மாநகராட்சி கமிஷனர், நகராட்சி கமிஷனர் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 24 ஆயிரத்து, 500 ரூபாய்; இதில் எது குறைவோ, அது வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு, அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம் அல்லது, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; எது குறைவோ, அது வழங்கப்படும். கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; தேர்தல் தகவல் ஆப்பரேட்டர்களுக்கு, 7,000 ரூபாய், பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இத்தொகையை வழங்க, எவ்வளவு நிதி தேவை என்ற விபரத்தை, 10ம் தேதிக்குள் அனுப்பும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, கடிதம் அனுப்பி உள்ளார்.
பண்டிகை கால முன்பணம் உயர்வு

Added : ஆக 03, 2019 00:50

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை கால முன்பணம், 5,000 ரூபாயை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள், அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில், அக்கறை கொண்டது, ஜெயலலிதா அரசு.அந்த அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது பண்டிகை கால முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 10 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, பண்டிகை முன்பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம்

Added : ஆக 03, 2019 02:07


ஸ்ரீவில்லிபுத்துார்:ஆண்டாள் கோயிலில் நாளை (ஆக.4 ) ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது.

ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதிஉலா நடந்தது. இன்று மதுரை அழகர்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோயில் பரிவட்டங்கள் கொண்டுவரபட்டு ஆண்டாளுக்கு சூட்டப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நாளை(ஆக.4) நடக்கிறது. அன்றுஅதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. காலை 8:05 மணிக்கு தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடாக மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கோயிலுக்கு வந்துள்ளனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.

மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் கட்டணும்

Added : ஆக 03, 2019 01:24





சென்னை:'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், 1 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், இன்றைக்குள் இடத்தை திரும்ப ஒப்படைக்கலாம்.நாளை மற்றும் நாளை மறுநாள், படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும், 6ம் தேதிக்கு மேல், படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அதேபோல், பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் பெற்றவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், நாளைக்குள் படிப்பை கைவிடலாம்.வரும், 5, 6ம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய்; 7ம் தேதிக்கு மேல் படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 14.02.2026