Sunday, December 1, 2019

ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை

Updated : டிச 01, 2019 00:21 | Added : நவ 30, 2019 22:23

தமிழக அரசு, கூடுதல் அவகாசம் வழங்கியும், சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற, 4.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் குடும்பங்களில், நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பாமாயில்

மேலும், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயிலும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி கிடையாது. மாறாக, 5 கிலோ சர்க்கரை உட்பட, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு, இலவச திட்டங்கள் போன்ற சலுகைகள், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களின் ஓட்டுகளை கவர, அவற்றையும் அரிசி கார்டுகளாக மாற்ற, நவ., 19ல் இருந்து, 29ம் தேதி வரை, அரசு அவகாசம் வழங்கியது. பொங்கலுக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும், 4.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் மட்டுமே, அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்து உள்ளனர்.

விரும்பவில்லை

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்க்கரை கார்டுதாரர்களில், பலர் வசதியானவர்கள். அவர்கள், ரேஷன் அரிசியை வாங்க விரும்ப வில்லை.மேலும், பொங்கல் பரிசில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கினால், உறவினர்கள் விமர்சனம் செய்வர் என்று, கருதுகின்றனர். அத்துடன், அரிசி கார்டாக மாற்றினால், தற்போது கிடைக்கும், 5 கிலோவுக்கு பதில், 2 கிலோசர்க்கரை தான் கிடைக்கும்.

இது போன்ற காரணங்களால், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்கு மாற விரும்பவில்லை. அரிசி கார்டுகளாக மாறியுள்ள, சர்க்கரை கார்டுகளுக்கு, சில தினங்களில், அரிசி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.2,000 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்து உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இருப்பினும், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு, எந்த தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது என்ற விபரம், இதுவரை, அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப் படவில்லை.

பயனாளிகளுக்கு வழங்கும் சமயத்தில், 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அதை, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பணம் வழங்க, 2,000 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் தேவை. கூட்டுறவு துறையின் கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அந்த வங்கிகளில், மக்களின் டிபாசிட், அவர்கள் அடகு வைத்த நகைகளுக்கு வட்டி செலுத்துவது, நகைகளை மீட்பதுபோன்றவற்றின் வாயிலாக, தினமும், பல கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

இதனால், 1,000 ரூபாய் வழங்க ஏதுவாக, தேவையான தொகைக்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு வங்கிகளில், இருப்பு வைக்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், அதிக தேவை இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது. எனவே, 2,000 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 500 கோடி ரூபாய்க்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

'ஆன்லைன்' முன்பதிவு சபரிமலையில் குறைக்க முடிவு

Added : டிச 01, 2019 00:38



சபரிமலை:''பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களும் காத்திருக்க வேண்டியுள்ளதால், முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும்,'' என, சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி, ராகுல் ஆர்.நாயர் கூறினார்.

அவர் கூறியதாவது:சபரிமலை தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள், மரக்கூட்டத்தில் இருந்து பிரிந்து, சந்திராங்கதன் ரோடு வழியாக, பெரிய நடைப்பந்தல் சென்று, 18-ம் படி ஏறலாம்.பெரிய நடைப் பந்தலில் இரண்டு வரிசை உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள், தனியாக, வரிசையில் நிற்கின்றனர். இரு பிரிவினரையும், கூட்டத்தை பொறுத்து, படியேற போலீசார் அனுப்புகின்றனர்.ஆயினும், கூட்டம் அதிகமாகும் போது, 'ஆன்லைன்' பதிவு பக்தர்களை, சந்திராங்கதன் ரோடு முடிவடையும் இடத்தில், போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்துகின்றனர்.பெரிய நடைப்பந்தலில் கூட்டம் குறைவதை பொறுத்து, இங்கிருந்து, பகுதி பகுதியாக அனுப்புகின்றனர். இதனால், எதிர்காலத்தில், 'ஆன்லைன்' முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும். 'டோலி' கட்டணம், சூழ்நிலைக்கேற்ப வசூலிப்பதை தடுக்க, பம்பை- - சன்னிதானம் இடையே, ஒரு வழிக்கு, 2,000, இரு வழிக்கு, 3,600 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Updated : நவ 30, 2019 13:27 | Added : நவ 30, 2019 13:20

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மைசூரை சேர்ந்த 25 வயதான மாணவர் அபிஷேக் சுதேஷ் பட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அபிஷேக், பணத்தேவைக்காக அங்குள்ள உணவுவிடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீடு திரும்பும்போது அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர் .அபிஷேக்கின் உடல் கலிபோர்னியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே உணவு விடுதியில் பணியாற்றிய அபிஷேக்கின் நண்பர் அளித்த தகவலின் பேரிலேயே அபிஷேக், கொலை செய்யப்பட்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.

மைசூரில் உள்ள குவெம்புநகரை சேர்ந்த யோகா குருவான சுதேஷ் சந்தின் மகன் தான் அபிஷேக். சுதேஷ் சந்த், 16 ஆண்டுகளாக யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். மைசூரு வித்யா விகாஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த அபிஷேக், 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்றுள்ளார்.

கொலை செய்யப்படும் அளவிற்கு அபிஷேக்கிற்கு யாருடன் விரோதம் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தான் கலிபோர்னியா பல்கலை.,யில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதாக அக்.,31 அன்று அபிஷேக், தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க திணறிய ஆசிரியை உ.பி., பள்ளியில் அவலம்

Updated : டிச 01, 2019 00:03

உன்னாவ் : உத்தர பிரதேச மாநிலம், உன்னாவில் உள்ள ஒரு பள்ளியில், பாடத்தை படிக்க முடியாமல், மாணவர்கள் திணறினர். அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியையும் படிக்க முடியாமல் திணறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மாநிலத்தில் கல்வியின் தரம் மோசமாக உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.

சோதனை

இந்நிலையில், தான் சொல்லித் தரும் பாடத்தையே படிக்க முடியாமல் ஆசிரியை ஒருவர் திணறிய சம்பவம் அங்கு நடந்துள்ளது. உன்னாவ் நகருக்கு அருகில் உள்ள, சிக்கந்தர்பூர் சரவ்சி கிராமப் பள்ளியில், மாவட்ட கலெக்டர் தேவேந்திர குமார் பாண்டே, சமீபத்தில் திடீரென சோதனை செய்தார். அப்பள்ளி மாணவர்களை, பாடங்களை படித்துக் காட்டும்படி கூறியுள்ளார். ஹிந்தி மொழி வழியான பாடங்களை மாணவர்கள் படித்துக் காட்டினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

மாணவர்களின் ஆங்கில திறமையை சோதித்து பார்த்தார் கலெக்டர். அவர்கள், கோர்வையாக படிக்க முடியாமல் திணறினர். 'ஏன் மாணவர்கள் திணறுகின்றனர்? நீங்கள் கொஞ்சம் சொல்லித் தாருங்கள்' என, எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையை பாடம் எடுக்கும்படி, கலெக்டர்கூறினார்.

கேள்வி

மாணவர்களே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு, ஆசிரியை திக்கித் திணறி படித்தார். ஒரு பத்தியை படிப்பதற்குள், அவருக்கு மூச்சு முட்டிவிட்டது. 'நீங்களே சரியாக படிக்காவிட்டால், மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவீர்கள்?' என்று, கலெக்டர் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, மேலும் சில வகுப்பறைகளில் சோதனை நடத்தினார். அப்போது, இன்னொரு ஆசிரியையும், ஆங்கிலம் படிக்கத் தெரியாமல், திக்கித் திணறினார். இவர்கள் இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆதார் இருந்தால் வெங்காயம் ; உ.பியில் கூத்து

Updated : டிச 01, 2019 00:58 | Added : டிச 01, 2019 00:55

வாரணாசி : உத்திரபிரதேசத்தில் ஆதார் அட்டையை அடமானமாக வைத்து வெங்காயம் வாங்கலாம் என சில கடை உரிமையாளர்கள் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.



தற்போது நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100க்கு அதிகமாகவே விற்கப்படுகிறது. வெங்காயத்தின் கடுமையான விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளும் பலவித முயற்சிகளையும் செயல்பாடுகளையும் செய்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பல இடங்களில் இருந்தும் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே வெங்காய விலை உயர்வு மக்களை வெகுவாகவே பாதித்துள்ளது.





இந்நிலையில் உ.பி மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சில காய்கறி உரிமையாளர்கள் வெங்காய உற்பத்தி குறித்து புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். அதாவது, வெங்காயம் வங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் கார்டை அடமானமாக வைத்து வெங்காயம் வாங்கி செல்லலாம். மற்றும் சில கடைகளில் வெள்ளி பொருட்களை அடமானமாக வைத்தாலும் வெங்காயம் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.



இதுகுறித்து ஒரு வெங்காய கடை உரிமையாளர் கூறுகையில், நாட்டில் வெங்காயத்தின் மதிப்பும் அதன் தேவையும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. உ.பியில் கடை உரிமையாளர்கள், பணம் வைக்கும் பெட்டிகளில் தற்போது வெங்காயத்தை பாதுகாப்பாக வைத்கின்றனர். பல இடங்களில் வெங்காயம் கொள்ளையடிக்கப்படுவதாகவம் கூறப்படுகிறது. இதன் மூலமாக மாநிலத்தில் நிலவிவரும் வெங்காய விலை உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறும் தாலுகாக்கள்



செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களும் செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.

பதிவு: நவம்பர் 29, 2019 04:30 AM

வாலாஜபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகிறது. புதிதாக பிறக்கும் இந்த மாவட்டத்தை பற்றிய சிறப்புகளை இனி காண்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னை முதல் பொன்னேரி வரை செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டுதான் செயல்பட்டது. 1997-ல் தான் இந்த மாவட்டமானது காஞ்சீபுரம், திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்களும் புதிய மாவட்டத்தில் இடம் பெறும்.

செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், மறைமலை நகர், பம்மல், செம்பாக்கம், மதுராந்தகம் என 8 நகராட்சிகளையும், அச்சரப்பாக்கம், சிட்லபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாடம்பாக்கம், மாமல்லபுரம், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பள்ளிக்கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் போன்ற பேரூராட்சிகளையும் கொண்டு அமைகிறது செங்கல்பட்டு மாவட்டம்.

காட்டாங்கொளத்தூர், திருப்போரூர், புனித தோமையார் மலை, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், இலத்தூர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்கள் புதிய மாவட்டத்தில் இணைந்துள்ளன.

உலகமே வியந்து பார்க்கும் வரலாற்று சின்னங்களையும், தகவல்களையும் கொண்ட பெருமை மிக்க மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் ஆகும். பல்லவ சாம்ராஜ்யத்தின் சிற்ப கலைக்கூடமாக திகழ்கின்ற மாமல்லபுரம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒரு மணிமகுடம் என்று சொன்னால் அது மிகையல்ல. அங்குள்ள பல்லவ காலத்து சிற்பங்களும், வரலாற்று சின்னங்களும் எந்த காலத்திலும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

சமீபத்தில் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீன அதிபரே மாமல்லபுரம் வந்து சிற்பங்களை கண்டு வியந்தது தமிழனின் திறமையை, பெருமையை உச்சம் கொள்ள செய்தது. எப்போதும் சுற்றுலா பயணிகளின் முதல் இடமாக நினைவில் நிற்கும் மாமல்லபுரம் தொடர்ந்து அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து வருவது மாவட்டத்திற்கு வருவாயை மட்டுமல்ல புகழையும் சேர்க்கப்போகிறது. வரலாற்று நினைவுகளை மட்டுமல்லாது, பக்தி மனம் தவழும் ஆன்மிக தலங்களையும் கொண்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம்.

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஏரிகாத்த ராமர் கோவில் என ஆன்மிக தலங்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

செங்கல்பட்டு மாவட்டம் 120 கி.மீ அழகிய எழில் கொஞ்சும் கடற்கரையை (கிழக்கு கடற்கரை சாலை) கொண்டது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் உள்ளதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்கு குறைவில்லை.

வண்டலூர் உயிரியல் பூங்கா, வெளிநாட்டு பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆகியவை சுற்றுலா வருமானத்தை ஈட்டி தருபவை. மாவட்டத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி பெரும்பாலான மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வைப்பதுடன், விவசாயத்தை தழைக்க செய்கிறது.

சென்னையை இணைக்கும் செங்கல்பட்டு ரெயில் நிலையம், தலைமை அரசு ஆஸ்பத்திரி, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஒருங்கிணைந்த விரைவு மற்றும் அமர்வு கோர்ட்டுகள், மாவட்ட தலைமை நூலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என மக்களுக்கு சேவையாற்றி வருபவை பல உள்ளன.
சென்னை கடற்கரையில் 2-வது நாளாக நுரை வெளியேற்றம்



சென்னை கடற்கரையில் நேற்று 2-வது நாளாக அதிகளவு நுரை வெளியேறியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பதிவு: டிசம்பர் 01, 2019 04:15 AM

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று முன்தினம் கடல் அலைகளில் திடீரென நுரை பொங்கி வந்தது. கடற்கரையில் பனிபோல் நுரைகள் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் அங்கு சென்று அந்த கடல் நீரின் மாதிரிகள் மற்றும் நுரைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக பட்டினப்பாக்கம் கடலில் இருந்து அதிகளவில் நுரை வெளியேறியது.

மெரினா கடற்கரை, சீனிவாசபுரம், திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளிலும் கடல் அலைகளில் இருந்து அதிகளவு நுரை பொங்கி வந்தது.

கடற்கரை முழுவதும் நுரை பொங்கி படர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று அச்சத்துடன் கடலை பார்வையிட்டு சென்றனர். சிறுவர்கள், சிறுமிகள் சிலர் அந்த நுரையை கைகளால் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

ஒரு விதமான தூர்நாற்றத்துடன் வெளியேறும் அந்த நுரை, காற்றில் அடித்து செல்லப்பட்டு பொதுமக்களின் கால்கள் மற்றும் உடம்புகளில் ஒரு விதமான பசை போல் ஒட்டிக்கொள்கிறது. இதனால் பலரின் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது:-

கடல் அலைகளில் இருந்து வெளியேறும் நுரைகளை அதிகாரிகள் அடங்கிய குழு பார்வையிட்டது. நுரைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் கழிவு நீர், அலைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால், கடலுக்கு உள்ளே செல்லாமல் கரைக்கு அருகிலேயே அலைகளில் சுழன்று கொண்டு கிடக்கிறது. இந்த கழிவு நீருடன் தற்போது பெய்து வரும் மழை நீரும் அதிகளவு கடலில் கலக்கிறது.

இதனால் கடல் அலையில் இருந்து நுரை வெளியேறி வருகிறது. இவை அலையின் வேகத்தில் கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் தள்ளப்படுகிறது. எனவே கடலில் இருந்து நுரை வருவதற்கு இதுதான் காரணம். கடலில் வேதியியல் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவை ஒரு சில நாட்கள் இருக்கும். பின்னர் சரியாகி விடும். இதனால் ஆபத்து எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருந்தாலும் இந்த நுரையால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுமா? என்ற தகவல் ஆய்வுக்கு பின்னர் தான் முழுமையாக தெரியவரும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும் போது அவ்வப்போது இதுபோன்று நுரை தள்ளுவது வழக்கம் தான். எங்களுக்கு இது புதிதல்ல. ஆனால் பொதுமக்கள் இதை பார்த்து அச்சப்படுகின்றனர். நுரை வெளிப்படுவதால் எங்களுக்கு மீன்பிடிக்க செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் நடுக்கடலில் நுரை எதுவும் தென்படுவதில்லை.

ஆனால் கரையில் நிறுத்தி வைக்கப்படும் படகு முழுவதும் நுரை ஆகி விடுகிறது. அது ஒன்று தான் பிரச்சினையாக இருக்கிறது. சில நாட்களுக்கு பின்பு இது தானாகவே காணாமல் போய்விடும். அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...