தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே '
ஆதார்' வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி: 'ஆதார்' தொடர்பான வழக்கில், 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசி யலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும்,மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது:
ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் என்பது, தனி மனித சுதந்திரம்; அது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆதார் பதிவுக்காக, மக்கள் அளித்துள்ள தங்களின் தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை, தனியார் பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளிப்பது, தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல். அதனால், தனியாருக்கு தகவல்கள் அளிக்க தடை விதிக்க வேண்டும்.
தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என்பதால், ஆதாரை கட்டாயமாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவற்றில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது; பின், ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, 'தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையா' என்ற வழக்கு, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.இது தொடர்பாக நடந்த விசாரணைகளுக்கு பின், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான, ஒன்பது நீதிபதிகள் அரசியலமைப்பு சட்ட அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே,
ஆர்.கே.அகர்வால், ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.சப்ரே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளது. 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. 'அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவு மற்றும் பாகம் - 3 ஆகியவை அளிக் கும், வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுடன் உள் ளார்ந்த ஒரு பிரிவே, தனி மனித சுதந்திரம்' என, உச்ச நீதிமன்ற அமர்வு, தன் தீர்ப்பில் கூறிஉள்ளது.
தனி மனித சுதந்திரம் தொடர்பாக, எம்.பி., சர்மா வழக்கில், எட்டு நீதிபதிகள் அமர்வு, 1950லும், கரக்சிங் வழக்கில், ஆறு நீதிபதிகள் அமர்வு, 1960லும் அளித்த, 'தனிமனித சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை இல்லை' என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, தற்போதைய தீர்ப்பு ரத்து செய்கிறது.இந்த தீர்ப்பை அடுத்து, 'ஆதார் தனி மனித உரிமையை மீறுகிறதா' என்ற முக்கிய வழக்கின் விசாரணை, ஐந்து நீதிபதி கள் அமர்வில் தனியாக நடக்கும்.
அவசர ஆலோசனை
உச்ச நீதிமன்ற தீர்ப்பு, 'ஆதார்' அடையாள அட்டை யில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து, மத் திய அரசு ஆலோசனை நடத்தியது.தீர்ப்பு வெளி யான உடனேயே, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, பிரதமரின் முதன்மை செயலர் நிரிபேந்திர மிஸ்ரா சந்தித்து பேசினார். அதன்பின், இருவரும், நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அரசு வரவேற்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:'ஆதார்' மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, அரசு கூறியவற்றை, இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. தனி மனித சுதந்திரம் என்பது, உரிமையாக இருந்தாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்ற அரசின் நிலைப்பாட்டையே, இந்த தீர்ப்பும் கூறுகிறது.
கண்காணிப்பின் மூலம் நசுக்க பார்க்கும் கொள்கை யை, பா.ஜ., கொண்டுள்ளதாக, காங்., கூறுவது வேடிக்கையாக உள்ளது. 'எமர்ஜென்சி' காலத்தின் போது, தனி மனித சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது
என்பது, அனைவருக்கும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.
புது யுகத்தின் துவக்கம்!
தனி மனித சுதந்திரம், அடிப்படை உரிமையே என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பின் மூலம், சாமானியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது; இது, தனி மனித சுதந்திரத்திற்கான,புது யுகத்தின் துவக்க மாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
சோனியா, தலைவர், காங்.,
மத்திய அரசுக்கு பின்னடைவு!
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு களில், இதுவும் ஒன்று. 'ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய,பா.ஜ., அரசு கையாளும் நடைமுறைகள் தவறானவை என்பது. நிரூபணமாகி உள்ளது.
ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
நீதி துறையினர் வரவேற்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மூத்த வழக் கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலு மான, சோலி சொராப்ஜி கூறியதாவது:இது, மிகவும் முற்போக்கான, மக்களின் உரிமையை பாதுகாக்கும் தீர்ப்பு. ஒருமித்த தீர்ப்பு அளித் துள்ளதன் மூலம், மிகச் சிறந்த உதாரணத்தை, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. மக்கள் வேவு பார்க்கப்படுவது தடுக்கப்படும்; இது, கொண்டா டப்பட வேண்டிய நாள்.
இந்த தீர்ப்பால், 'ஆதார்' ரத்தாகுமா என்பதை, தற்போதைக்கு கூற முடியாது. முழு தீர்ப்பை யும் படித்தால் தான் கூற முடியும். அதே நேரத் தில், ஆதாரை முழுமையாக ரத்து செய்ய முடி யாது. எந்த ஒரு உரிமையும், முழுமையான உரிமையல்ல;சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.'
'இந்த தீர்ப்பை வர வேற்கிறோம். மத்திய அரசின் நிலைப்பாட்டையே, இது உறுதி செய்கிறது. மற்ற அடிப்படை உரிமைகளை போலவே, தனி மனித சுதந்திரமும், முழுமை யான உரிமையல்ல. அதற்கு, சில கட்டுப்பாடு கள் உள்ளன,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாள ரும், வழக்கறிஞருமான, அமன் சின்ஹா கூறினார்.
No comments:
Post a Comment