Friday, August 25, 2017

'நீட்' தேர்வுக்கு சிறப்பு ஆசிரியர்கள், கூடுதல் பயிற்சி: மாணவர்களை தயார்படுத்த ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்24ஆக
2017
23:53

சென்னை;'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கூடுதல் பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, விண்ணப்பம் அளிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்ற மாணவி மனு தாக்கல் செய்தார். 

மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, மாநில அரசு எடுத்த முயற்சிகளில் குற்றம் காண முடியாது என்றாலும், கல்வியாண்டு துவக்கத்திலேயே, நீட் தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களை தயார்படுத்தி இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில், தகுந்த பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும்.தமிழகம் மட்டுமே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரியது. மற்ற மாநிலங்கள் எதுவும், விலக்கு கோரவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் படிப்பறிவு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர்; அதிக எண்ணிக்கையில், கல்வி நிறுவனங்களும் உள்ளன.

பொருளாதார, கல்வி ரீதியாக பின்தங்கிய மாநிலங்களான, ஜார்க்கண்ட், ஒடிசா, பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கூட, நீட் தேர்வுக்கு விலக்கு கோரவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்ததால், இந்த ஆண்டுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்களும், பெற்றோரும் கருதியிருக்கலாம். அதனால், தேர்வுக்கு தயாராகாமல் இருந்திருக்கலாம். விலக்கு கோரும் அதே நேரத்தில், மாணவர்களையும், அரசு தயார்படுத்தியிருக்க வேண்டும். அதை, அரசு செய்யவில்லை.துவக்கத்திலேயே, மாநில அரசின் கோரிக்கையை, மத்திய அரசும் நிராகரிக்கவில்லை. நீட் தேர்வு விலக்கு குறித்து, சாதகமான நிலையை மத்தியஅரசு எடுத்ததாக, பத்திரிகைகளில் செய்தி வந்தன. 

பின், உச்ச நீதிமன்றத்தில் எதிர்மறையான நிலையை, மத்திய அரசு எடுத்தது. அதுவரை, நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்கள் கருதினர். மத்திய அரசு நடந்து கொண்ட விதமும், இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்.மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் தான் பொறுப்பு என, முதலில் இந்த நீதிமன்றம் கருதினாலும், பிரச்னையை ஆழமாக பரிசீலிக்கும்போது, மாநில அரசின் தவறுகளும் வெளிப்படுகிறது.தற்போதைய சூழ்நிலைக்கு, கீழ்கண்டவை காரணங்கள்:l பிளஸ் 1 பாடத்திட்டத்தை பயிற்றுவிக்காததால், அதில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியவில்லை. பிளஸ் 2 பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன; அதிகாரிகளும், இதை கவனிக்க தவறி விட்டனர்l நீட் தேர்வுக்காக, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாடத்திட்டத்தை, கற்பிக்க தவறியதுl அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை, மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, அரசு மற்றும்தனியார் பள்ளிகள் தவறியதுl 10 ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மாநில அரசு தவறியது.மருத்துவப் படிப்பில் கூடுதல் இடங்களை உருவாக்க, வழக்கறிஞர்கள் நீலகண்டன், வேல்முருகன், சூரியபிரகாசம் ஆகியோர் கோரினர். அப்படி ஒரு உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில அரசு தான் பரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கூடுதலாக, பயிற்சி வகுப்புகளை, அரசு துவங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் மனநிலையில், இந்த நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. அவர்கள், மன உறுதியைஇழக்கக் கூடாது. உண்மை நிலையை புரிந்து, முன்னேற வேண்டும்.மாணவர்களும், பெற்றோரும், தவறான முடிவுகளை எடுக்க கூடாது. அவர்களுக்கு, அரசு ஆலோசனைகள் வழங்க வேண்டும். கல்வியாளர்களும், சினிமா பிரமுகர்களும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், அறிவுரைகளை வழங்க வேண்டும். நவீன பாடத்திட்டத்தின்படி, தகுந்த கல்வியை வழங்க, மாநில அரசு, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நீட் தேர்வில் அரசுக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, குறிப்பாக பள்ளி கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026