Sunday, September 17, 2017

டிஜிட்டல் போதை -1: விழித்துக்கொண்டு பிழைத்துக்கொள்வோமா?

Published : 16 Sep 2017 11:48 IST

வினோத் ஆறுமுகம்






அது ஒரு சின்னஞ்சிறிய கிராமம். இயற்கை எழில் கொஞ்சுகிறது. வெப்பமும் அதிகமில்லை, குளிரும் அதிகமில்லை. இதமான ஒரு காலை நேரம். மரங்களுக்கு நடுவே அமைதியான ஆசிரமம்போல் அமைந்துள்ளது அந்த வீடு. இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் அந்த வீட்டில் பதின் வயது இளைஞர்கள் சிலர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அலறும் சீழ்கை ஒலி அவர்களை எழுப்புகிறது. உறக்கம் கலந்த கண்களுடன் அனைவரும் வெளியே வருகிறார்கள். மருத்துவர்கள் வருவதற்குள் காலை உடற்பயிற்சியை முடிக்க வேண்டும். வேகமாகப் புறப்படுங்கள் என்று கட்டளை வருகிறது. அனைவரும் காலைக் கடன்களை முடிக்கிறார்கள். வெளியே மிதமான வேகத்தில் ஓட்டப்பயிற்சி, பின்பு எளிதான உடற்பயிற்சி. சிறிது நேரம் தியானம். குளிக்க செல்கிறார்கள். அப்புறம் காலை சிற்றுண்டி. சிற்றுண்டி முடிந்ததும் மீண்டும் தியானம். இப்பொழுது அவர்களின் கையில் கைபேசி அல்லது மடிக்கணினி கொடுக்கப்படுகிறது. செல்போனுடன் சிறிது நேரம். இணையத்துடன் சிறிது நேரம். வேண்டுமென்றால் கேம் விளையாடலாம்,பேஸ்புக் பார்க்கலாம், படம் எடுக்கலாம். ஒரு மணி நேரம்தான். மீண்டும் தியானம். ஒரு சிறு இடைவெளி. பின்பு வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகள்.

மாறுபட்டதொரு முகாம்

மனநல மருத்துவர் வருகிறார். அனைத்தையும் கண்காணிக்கிறார். அவர்களுடன் புன்னகை தவழப் பேசுகிறார். சில மனநலப் பரிசோதனைகளையும் பயிற்சிகளையும் நடத்துகிறார்.சில ஆலோசனைகளை வழங்குகிறார். மதிய உணவு. சிறிது நேர உறக்கம். மீண்டும் தியானம். மீண்டும் அரை மணி நேரம் கைபேசி. மாலை நேர உடற்பயிற்சி. மீண்டும் மனநல மருத்துவருடன் உரையாடல். இரவு உணவுக்குப் பிறகு மீண்டும் தியானம். அன்றைய நாள் பணிகள் முடிவடைந்தன.

இது ஏதோ பள்ளி முகாம் அல்லது என்.சி.சி.-சாரணர் பயிற்சி முகாம் போலத் தோன்றுகிறது, இல்லையா. இந்த முகாம் நடைபெறுவதற்கான காரணம் வேறு. கொஞ்சம் அதிர்ச்சிகரமான முகாம்தான். சீனாவில் இணையத்துக்கு அடிமையானவர்களுக்காக ஹுனான் மாகாணத்தில் செயல்பட்டுவரும் மறுவாழ்வு மையம் இது. இணையம், ஸ்மார்ட்போன், வீடியோ கேம்களால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்க மனநல மருத்துவர்களும் பெற்றொர்களும் இணைந்து சில லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த மையத்தை நடத்திவருகிறார்கள்.



தோள்கொடுக்கும் அரசு

டிஜிட்டல் விளையாட்டு போதைக்கு ஆட்பட்டிருக்கும் இளம் சமூகத்தை மீட்டெடுக்கும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் சீனாவிலும் தென்கொரியாவிலும் அதிகரித்துவருகின்றன. அவற்றுக்கு அந்நாட்டு அரசுகளும் உதவுகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாடுகளிலும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் செல்போன், இணையம், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்களை குடிநோயாளிகள் அல்லது போதைப் பழக்கம் கொண்டவர்களைப் போல முகாமில் அடைத்து ராணுவக் கட்டுப்பாடுபோல் கண்காணிக்க வேண்டுமா? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று தோன்றலாம். சீன, கொரிய அரசுகள் அப்படி நினைக்கவில்லை.

அந்த நாடுகளில் இளைஞர்களும் சிறுவர்களும் டிஜிட்டல் தொழில்நுட்ப போதைக்கு அடிமையாகி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால்தான், ‘டிஜிட்டல் போதை’ பெரும் தொற்றுநோயைப் போல் அங்கு அதிவேகமாகப் பரவிவருகிறது. உடனே மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தைநல ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் டிஜிட்டல் போதை நீக்க மையங்களை அந்நாட்டு அரசுகள் நிறுவிவிட்டன.

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...