Monday, September 18, 2017

13,20,000 கி.மீ... பூமியை 33 முறை சுற்றியதற்கு நிகர்... பெரியார் பயண சுவாரஸ்யங்கள்!

வரவணை செந்தில்

தந்தைப் பெரியார் பயணங்களில் பெருமளவு விருப்பம் கொண்டவர். அவரின் பயண விருப்பம் என்பது தன்னலம் சார்ந்தது அல்ல. அதிக அளவில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பத்தினால் உருவானது. பெரியாரின் பயணங்களை கணக்கிட்டால் அவர் வாழ்ந்த 94 வயது வரை அவர் பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர். இந்தப் பூமியை 33 முறை சுற்றி வந்தால் எவ்வளவு தொலைவு ஆகுமோ அந்தத் தூரத்தை தன் ஒட்டுமொத்த வாழ்நாளில் கடந்துள்ளார். பெரியாரின் பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான் இருக்கும். அவரின் பயணத்தின் நோக்கம் மக்களைச் சந்திப்பது என்பதால் இரவுப்பயணத்தை மட்டுமே தேர்வு செய்தார். பெரியார் என்கிற தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமையின் பயணங்களில் நடந்த நிகழ்ந்த சுவையான சம்பவங்களை திருச்சி.செல்வேந்திரன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இருந்து சில..



பெரியார் சிக்கனம் உலகமறிந்த ஒன்று. ஊர்தி ஓட்டுநர்கள் விடுப்பில் சென்று விட்டாலும் சரி வேலையை விட்டுப் போய்விட்டாலும் சரி கவலைப்படாமல் புதிய ஓட்டுநர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வாராம். புதிய ஓட்டுநர்கள் அப்போதுதான் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருப்பர். இதைப் பார்த்து "அய்யா, சுயமரியாதை இயக்கத்துடன் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் நடத்துகிறார்" என்று கிண்டல் செய்வார்களாம். "இரவில்தானே பெரும்பாலும் பயணம் செய்கிறோம். அதனால் சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள்" என்பாராம் பெரியார்.

அது போல பெரியார் தனக்கு பயணம் செல்ல வாகனம் வாங்கினால் அது பயணத்துக்க மட்டுமல்லாமல் பிரசாரம் செய்யவும் பெரிய திறப்பு கொண்ட பகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதில் மைக், ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்தும் தயாராக இருக்கவேண்டும். பேசப்போகும் ஊரில் மேடை போடப்படாவிட்டால் தன் வேனில் இருந்தே பேசிவிட்டு திரும்புவாராம். வாகனப்பராமரிப்பு என்பது பெரியாரிடம் அறவே கிடையாது. ஒரு வாகனம் வாங்கினால் அதை முழுக்க முழுக்க பயன்படுத்தி இனிமேல் எந்தச் சூழலிலும் அது ஓடாது என்கிற நிலை வரும் வரை பயன்படுத்திவிடுவாராம்.

தன் பிரசார வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரியார் தூங்கிவிடுவாராம். ஆனால் முழித்து இருந்தார் என்றால் தன்னுடன் வரும் தொண்டர்களுடன் சலசலவென பேசிக்கொண்டே வருவாராம். பெரியார் வேன் பயணங்கள் தவிர்த்து ரயிலில் அதிகமுறை பயணித்துள்ளார். ஆனால் எப்போதுமே மூன்றாம் வகுப்பில் தான் பயணம் செய்வாராம். மக்களோடு மக்களாகப் பயணம் செய்வதிலே அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை ஜிடி.நாயுடு பெரியார் வசதியாகச் செல்லட்டும் என்று முதல்வகுப்பு சீட்டு எடுத்துக் கொடுத்துள்ளார். சிக்கனத்தின் சின்னமான அவர் அதை கேன்சல் செய்துவிட்டு மூன்றாம் வகுப்பு சீட்டு வாங்கிக்கொண்டாராம். மீதி பணத்தையும் கவனமாக வைத்துக்கொண்டாராம்.

ஒரு முறை இரவு கூட்டம் முடித்து விட்டு அடுத்த நாள் நிகழ்ச்சி உள்ள ஊருக்கு தன் வேனில் கிளம்பியுள்ளார். அப்போது பெரியாரின் வேன் செல்லும் வழியில் போக வேண்டிய சில தோழர்கள் பயணச்சீட்டை மிச்சம் செய்ய பெரியாரின் வேனிலேயே ஏறிவிட்டனராம். வண்டி போகப்போக அவர்களின் பேச்சில் இதனைக் கண்டுபிடித்த பெரியார் அனைவரிடமும் அவர்கள் பேருந்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை வசூலித்துவிட்டாராம். ஆனால் அது எல்லாமும் கட்சிக்குத்தான் சென்றது. ஏனென்றால் பிறப்பிலேயே அவர் பெரும் கோடீஸ்வரர். தான் சேர்த்த செல்வங்களை மக்கள் பணிக்கே விட்டுச்சென்றுள்ளார்.

பெரியாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களில் ஒன்று சிக்கனம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025