Monday, September 18, 2017

மனைவி பிரசவத்தின் போது ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை
2017-09-18@ 00:28:16




புதுடெல்லி: மனைவி பிரசவத்தின் போது ஆண்களுக்கும் 3 மாதம் மகப்பேறு விடுமுறை அளிக்கும் புதிய மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மகப்பேறு திருத்த மசோதா 2016, இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதில், அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளின் பிரசவத்தின் போது அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, அனைத்து பெண்களும் 26 வாரங்கள் விடுமுறை எடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அனைத்து கட்சி எம்பி.க்களும் ஒரே குரலில், ‘குழந்தை பிறப்பின்போது தந்தைக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கு இந்த மசோதாவில் எந்த வழியும் இல்லை. எனவே, புதிய மசோதா தாக்கல் செய்து வழிவகை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினர்.

அப்போது பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, “தந்தையர்களின் கவலையை போக்கும் வகையில் எதிர்காலத்தில் இதுபோன்ற மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார். தற்போது, நாடு முழுவதும் மத்திய ஊழியர்கள் நலவிதி முறைப்படி மனைவி பிரசவத்தின் போது கணவன் 15 நாள் விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இதே போன்று ஆண்களுக்கு விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளது. இதை மையமாக வைத்து தந்தையர்கள் பயன்பெறும் மசோதா 2017 தயாரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராஜீவ் சத்தவ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் மசோதா, அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரான குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவில் பெற்றோருக்கான பொறுப்பு அடிப்படையில் குழந்தை பிறக்கும்போது தாய் மற்றும் தந்தை இருவருமே பயன் பெறும் வகையில் தந்தைக்கும் 3 மாதம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஒழுங்குபடுத்தப்படாத தனியார் துறைகளில் பணிபுரியும் ஆண்களும் மனைவியின் பிரசவத்தின் போது மூன்று மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ள இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராஜீவ் சத்தவ் கூறியதாவது:
குழந்தைகள் நலனில் தாய் மற்றும் தந்தை இருவருக்குமே பொறுப்பு உண்டு. எனவே, புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்புக்கு உரிய நேரத்தை இருவரும் ஒதுக்க வேண்டும். எனவே, ஆண்களுக்கும் விடுமுறை அவசியம். குழந்தை பிறப்பு தேதிக்கு 7 நாட்களுக்கு முன் இருந்து இந்த விடுமுறையை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அதிகபட்சமாக குழந்தை பிறந்த தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை விடுமுறை எடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் வளர்ப்பு தந்தையர்களும் இந்த விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்’

எம்பி மற்றும் எம்எல்ஏக்களாக பதவி வகித்த சிலரின் சொத்து மதிப்பு அவர்கள் பதவிக்காலம் முடிவடைவதற்குள் 500 மடங்கு அதிகரித்தது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய நேரடி வரி ஆணையம் தாக்கல் செய்த மனுவில், 7 எம்பி மற்றும் 98 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு திடீரென உயர்ந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எம்பிக்கள் பதவிக்காலம் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் சொத்து மதிப்பை வெளியிடக்கூடிய வகையில் புதிய தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி நினாங் எரிங், இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

No comments:

Post a Comment

Tug of war between AI Group & IndiGo for captains

Tug of war between AI Group & IndiGo for captains  NEW FDTL RULES Saurabh.Sinha@timesofindia.com 30.12.2025 New Delhi : Call it the Indi...