Monday, September 11, 2017

சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை
By DIN | Published on : 11th September 2017 03:59 AM |




தனிநபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமான வரித் துறை மேற்கொள்ள உள்ளது.

இதையடுத்து புதிதாக வாங்கிய சொகுசு கார்கள், ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள், இனி வருமான வரித்தாக்கலின்போது அவற்றை மூடி மறைத்து தப்பிக்க முடியாது.
வரி ஏய்ப்பையும், கருப்புப் பணப் பதுக்கலையும் தடுக்கவே இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முதல் அது நடைமுறைக்கு வரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வருமானத்தை மறைத்து தவறான விவரங்களைத் தெரிவிப்பவர்களுக்கு இந்நடவடிக்கை ஒரு கடிவாளமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கருப்புப் பணப் பதுக்கலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அவற்றில் பிரதானமானது. இந்த அதிரடி அறிவிப்பானது உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, சந்தேகத்துக்குரிய பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு விவகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.
உள்நாட்டிலும் சரி; வெளிநாடுகளிலும் சரி, கருப்புப் பணப் பதுக்கலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் மத்திய அரசு, அதன் ஒருபகுதியாக "பிராஜெக்ட் இன்சைட்' (வருமான விவரங்கள் தொடர்பான ஆழ்ந்த கண்காணிப்பு நடவடிக்கைகள்) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் வருமான விவரங்களானது தகவல் - தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர், வருமான வரித் தாக்கலின்போது தனிநபர்கள் தெரிவிக்கும் தகவல்களும், சேகரிக்கப்பட்ட விவரங்களும் ஒப்பீடு செய்யப்படும்.
அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரவும், நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவன நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வருமான வரித் தாக்கலின்போது, பெரும்பாலானோர் தங்களது வருவாய் தொடர்பான உண்மையான விவரங்களை அளிப்பதில்லை. அதேவேளையில், முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த பொருள்களை புகைப்படம் எடுத்து பதிவிடுகின்றனர்.

அந்தத் தகவல்களைக் கண்காணித்து அதுதொடர்பான விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பும் நோக்கிலேயே "பிராஜெக்ட் இன்சைட்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக "எல் அண்டு டி இன்ஃபோடெக்' நிறுவனத்துடன் வருமான வரித் துறை கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி,சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து அதுதொடர்பான தகவல்களைத் திரட்டும் பணிகளை "எல் அண்டு டி நிறுவனம்' ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்.

அதிக மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளை இதன் மூலம் கண்காணிக்க இயலும். இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்குள் சமூக வலைதளக் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...