Tuesday, September 12, 2017

அச்சம் தவிர்!

By மாலன்  |   Published on : 12th September 2017 03:32 AM  |   
கலை உலக நட்சத்திரங்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இன்று கவலைப்படுகிற ஒரு விஷயம் நீட். ஆனால் அவர்கள் கவலைக்குக் காரணங்கள் உண்டா? பொதுவாக காபிக் கடை கலந்துரையாடல்களிலும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடக விவாதங்களிலும் வைக்கப்படும் கேள்விகளை ஆராய்ந்த போது எனக்குக் கிட்டிய பதில்கள் இவை.
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களே?
சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆண்டில் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்ற ஆண்டைவிட அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூரிலிருந்து சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றவர்கள் 4 பேர். ஆம் வெறும் நான்கே பேர். இந்த ஆண்டு 21 பேர்.
மாவட்ட வாரியாகத் தகவல் இதோ. அடைப்புக் குறிக்குள் இருப்பவை சென்ற ஆண்டு பெற்ற இடங்கள் சென்னை 471 (113), வேலூர் 153 (54), கோவை 182 (102), நெல்லை162 (83), கடலூர் 114 (40), மதுரை 179 (110), காஞ்சிபுரம் 140 (72), கன்னியாகுமரி 135 (69), தூத்துக்குடி 79 (25), திண்டுக்கல் 75 (27), திருவண்ணாமலை 67 (27), திருவாரூர் 28 (2), சிவகங்கை 39 (14), நீலகிரி 24 (2), திருப்பூர் 105 (83), தேனி 46 (25), விருதுநகர் 66,(47), நாகப்பட்டினம் 28,(10), அரியலூர் 21 (4), சேலம் 192 (180), புதுக்கோட்டை41 (32), ராமநாதபுரம் 39 (31), தஞ்சாவூர் 97 (89), விழுப்புரம் 93 (88), கரூர் 35 (32).
சில மாவட்டங்கள் பின் தங்கிவிட்டன. திருவள்ளூர் 158 (185), திருச்சி 130 (184), பெரம்பலூர் 23 (81), ஈரோடு 100 (230), தர்மபுரி 82 (225), கிருஷ்ணகிரி 82 (338), நாமக்கல் 109 ( 957). தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக இடங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்ற ஆண்டு மொத்தமுள்ள 3,377 இடங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இடங்களை நாமக்கல் மாவட்டம் பெற்றது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து மாத்திரம் 957 பேர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்கள். திருவாரூர், அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே இடம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு பரவலாக எல்லா மாவட்டங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. அதாவது வாய்ப்பு பரவலாகி உள்ளது. நாமக்கல் முட்டை "நீட்'டிடம் வேகவில்லை!
நீட் தேர்வு நகர்ப்புற மாணவர்களுக்குத்தான் சாதகமானது என்கிறார்களே?
சென்ற ஆண்டு திருவாரூர் பெற்ற இடங்கள் 2 இந்த ஆண்டு 28. அதாவது 14 மடங்கு அதிகம். நீலகிரி சென்ற ஆண்டு 2 இந்த ஆண்டு 24. அதாவது 12 மடங்கு அதிகம். சிவகங்கை, கடலூர் ஆகியவை ஏறத்தாழ மூன்று மடங்கு. காஞ்சிபுரம், தேனி இவை ஏறத்தாழ இரண்டு மடங்கு. இவை நகரங்கள் நிறைந்த மாவட்டங்களா?
பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் சொல்கிறார்களே?
ஏற்கனவே இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதாவது மொத்த இடங்களில் 69% இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் சேர முடியும். ஆனால் அவர்கள் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தப் பிரிவு மாணவர்களுக்கு அது கடினமானதல்ல என்பதை நீட் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலிடம் பெறுபவர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இரண்டாம் இடம் பெற்றவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் இடம் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவருக்கு. முதல் பத்து இடங்களில் ஆறு இடங்களைப் பிடித்தவர்கள் பிற்பட்ட வகுப்பினர். இரண்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு. இரண்டு இடம் மற்ற பிரிவினருக்கு.
இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் முன்பு இருந்ததைவிடப் பலன் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாதபோது அவர்கள் பெற்ற இடங்கள் 149. இந்த ஆண்டு 164. அதேபோல பட்டியல் இனத்தவர், அதற்குள் உள் ஒதுக்கீடு பெற்ற அருந்ததியர், பழங்குடியினர் இவ்ர்களுக்கும் பெரிய இழப்பு இல்லை.
இந்தாண்டு தேர்வு பெற்றவர்களில் பெரும்பான்மையோர் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள் எனச் சொல்லப்படுகிறதே?
அப்படிச் சொல்கிறவர்கள் ஆதாரம் எதையும் கொடுப்பதில்லை. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்களோடு, கல்விச் சான்றிதழ், நீட் மதிப்பெண்கள், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். ஆனால் பயிற்சி பெற்றீர்களா என்ற கேள்வி விண்ணப்பபடிவத்தில் கிடையாது. அப்படி இருக்கும் போது எத்தனை பேர் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவலைத் துல்லியமாகப் பெற இயலாது. அப்படிப் பெற வேண்டுமானால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள ஒவ்வொரு மாணவரையும் பேட்டி கண்டு தகவல் திரட்ட வேண்டும். அப்படி ஒரு நேர்காணலோ, சர்வேயோ நடந்ததாகத் தெரியவில்லை.
+2 மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடத்தப்பட்ட போது +2 மாணவர்களில் சிலர் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து டியூஷன் படித்தார்களே? அப்போது மட்டும் அதில் சமநிலை இருந்ததா?
நீட் தேர்வு பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கிறதா?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 15% இடங்களை நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்ளலாம். நிர்வாகத்தினர் இந்த இடங்களை வசதியுள்ள மாணவர்களுக்கு விலைக்கு விற்று வந்தனர். கடந்த ஆண்டு இடம் ஒன்றுக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை என விலை வைத்து விற்கப்பட்டது. இந்தப் பணம் பெரும்பாலும் ரசீதுகள் ஏதும் கொடுக்கப்படாமல் ரொக்கமாகவே பெறப்பட்டு வந்தது. அதனால் அவை கருப்புப் பணமாகவும் குவிந்து கொண்டிருந்தன.
ஆனால் உச்சநீதிமன்றம் நிர்வாக இடங்களில் சேர்வதானாலும் நீட் தேர்வு எழுதி அதில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என்று சொல்லிவிட்டது. அதன் விளைவுகளில் ஒன்று இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 974 இடங்கள் காலியாக உள்ளன. இது அவர்களிடம் உள்ள இடங்களில் 90 சதவீதம்
மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களை சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் தேர்வு எழுதச் சொன்னது சரியா?
நீட் கேள்வித்தாள்கள் ஒரு பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுவதில்லை. பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் மத்திய கல்வி கவுன்சில் (ouncil Board of School Education - COBSE), தயாரித்துள்ள பாடத்திட்டத்தையும், மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE) கல்வி, ஆய்வு, பயிற்சி ஆகியவற்றிற்கான தேசிய கவுன்சில் (National Council of Education Research and Training - NCERT) ஆகியவை தயாரித்துள்ள பாடத்திட்டம் ஆகியவற்றையும் ஆராய்ந்து தனது கேள்வித்தாளைத் தயாரிக்கிறது. அதில் 11-ஆம் வகுப்புப் பாடங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவை முன் கூட்டியே இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டில் நடக்க உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் இப்போதே இணைய தளத்தில் உள்ளது. (https://www.sarvgyan.com/articles/neet}syllabus)
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய பின்னும் இன்னுமொரு தேர்வு எழுத வேண்டும் என்பது நியாயமா?அப்படியானால் +2வில் எடுத்த மதிப்பெண்களுக்கு அர்த்தமில்லாமல் போகிறதே?
குறைவான இடங்கள் அதிகமான விண்ணப்பதாரர்கள் என்று வரும் போது ஏதோ ஒரு வகையான வடிகட்டல் தேவைப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும். காலியாக இருக்கும் 10 இடங்களுக்கு 500 பேர் விண்ணப்பித்தால் என்ன செய்வார்கள்? ஒரு தகுதிகாண் தேர்வு வைப்பார்கள். அது கல்லூரி பிளேஸ்மெண்ட் ஆனாலும் சரி அரசுப் பணியானாலும் சரி, அதுதானே வழக்கம்..
நீட் என்பது ஒரு தகுதி காண் தேர்வு. இதே போன்று தகுதி காண் தேர்வு பல கல்விகளுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நீட் தேர்வில் சில சீர்திருத்தங்கள் தேவை. அதாவது மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக தர வரிசைப் பட்டியலை நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மாத்திரம் கொண்டு தீர்மானிக்காமல், +2வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் (weightage) கொடுத்து தயாரிக்கலாம்.
நாம் வாழும் சூழல் போட்டி நிறைந்தது. பக்கத்து பெஞ்சுக்காரனோடு போட்டி போடுகிற காலங்கள் முடிந்து விட்டன. உலகமயமான ஒரு காலகட்டத்தில் பக்கத்து மாநிலத்துக்காரர்களோடு அல்ல, பக்கத்து நாட்டினரோடு மட்டுமல்ல, அமெரிக்கர்களோடு, ஜப்பானியர்களோடு, ஜெர்மானியரோடு போட்டியிடும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரலாம். கல்வியில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கூட.
போட்டிகளை எதிர் கொள்ளும் திறனையும் கல்வியையும் நம் குழந்தைகளுக்கு ஊட்டியாக வேண்டும். அதைவிட முக்கியமாக தோல்விகளை எதிர் கொள்ளும் மனத் திடத்தை வளர்த்தாக வேண்டும். வாழ்வில் தோல்விகளை எதிர் கொள்ளாத மனிதர்களே கிடையாது. ஆனால் நாம் நம் குழந்தைகளை சின்ன ஏமாற்றத்தைக் கூட எதிர்கொள்ள முடியாதவர்களாக வளர்க்கிறோம்.
நினைவில் கொள்க: தீதும் நன்றும் பிறர் தர வாரா.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...