Tuesday, September 12, 2017

மனிதநேயம் தேவை


By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 12th September 2017 03:33 AM  
மனிதாபிமானம் என்ற வார்த்தை மனிதர்களிடம் காட்ட வேண்டிய நேசத்தைக் குறிக்கிறது.
எந்த ஒரு மனிதனின் இதயத்தில் இயற்கையிலேயே ஈவு, இரக்கம், அன்பு ஆகியவை ஊற்றெடுக்குமோ அவரிடத்தில் மனிதநேயம் இருக்கும். அப்படிப்பட்டவரின் நேசம் மற்ற மனிதர்களிடத்து ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு பார்த்து வெளிப்படாது.
அப்படிப் பாகுபாடு பார்த்து அன்பு காட்டுபவர்கள் மனிதர்களும் அல்லர். அவர்களின் மனதில் தம் சமூகம் சாராத மக்களின் மீது துவேஷமும், வன்மமுமே நிறைந்திருக்கும்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடினார் வள்ளலார். ஓரறிவு உயிர்களிடம் இத்துணை அன்பு காட்டவேண்டுமென்றால், ஆறறிவு படைத்த மனிதர்களிடம் எத்துணை நேசம் காட்ட வேண்டும் என்பது நம் அறிவுக்கு எட்ட வேண்டும்.
மனிதநேயதிற்கென எல்லைகள் கிடையாது. பசித்தோருக்கு உணவளித்தல், ஆடை இல்லாதோருக்கு ஆடை அளித்தல் போன்ற செயல்கள் மனிதநேயத்தின் வெளிப்பாடு. சக மனிதரைப் பார்த்து நேசத்துடன் புன்னகைப்பது குறைந்தபட்ச மனிதநேயம்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று உவகை கொண்ட கணியன் பூங்குன்றனாரின் மனிதநேயம் எல்லைகள் தாண்டியது. எந்நாட்டினர் என்றாலும் என் இனம் என்பது, சுருங்கி என் நாடு, என் மக்கள், என் மதம், என் மொழி, என் ஊர் என்று இன்னும் சுருங்கி நான், எனது குடும்பம் என்ற சிறிய வட்டத்திற்குள் ஒடுங்கி விட்ட மனிதநேயம், இன்னும் சில காலங்களுக்குள் நான், எனது தேவை, என் நலம் என்று ஒரேயொரு ஒரு புள்ளியில் நின்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உள்நாட்டுப் போர்களினால் இலங்கை, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மனிதநேயம் சிதைந்து போனதென்றால், வளர்ந்த நாடுகளின் பேராசை, ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு, போன்றவற்றால் பாலஸ்தீனம் உள்ளிட்ட நலிந்த நாடுகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் பலிகடா ஆக்கப்பட்டார்கள்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள். பிரிட்டனில் இருந்து செயல்படும் மனிதஉரிமை அமைப்பு, உள்நாட்டுப் போரினால் சிரியாவில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்
துள்ளது.
இம்மக்கள் அந்நிய நாட்டு மண்ணில் அகதிகள் முகாமில் தங்கும் அவல நிலையையும், கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்குச் செல்லும் பொழுது நீரில் மூழ்கி இறந்து போனதையும் செய்தித்தாள்களில் படித்தோம்.
அலைகளின் தாக்குதல்களில் சிக்கிய மீன் குஞ்சுபோல, கரையில் சடலமாக ஒதுங்கிக் கிடந்தவர்களின் புகைப்படம் நம் மனதை பதைபதைக்க வைத்தது. இப்பொழுது மியன்மரில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறையும் மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவால்தான்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்பாக முகமூடியிடப்பட்ட, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் இருப்பது போன்ற ஒளிப்பதிவுகளில் மண்டியிட்டது கைதிகள் மட்டுமா? மனிதநேயமும்தான்.
அடிமைகளிடமும், கைதிகளிடமும் பரிவும், பாசமும் காட்ட வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் சொல்லும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்.
தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுக்கமாக மேம்படும்.
மனிதநேயம் என்னும் விதை முதலில் வீட்டில் குழந்தைகளின் மனதில் விதைக்கப்பட்டு தொடங்க வேண்டும். தான் காயப்படும்பொழுது தனக்கு வலிப்பது போல, மற்றவர்களைக் காயப்படுத்தும் பொழுது அவர்களுக்கும் வலிக்கும் என்பதை இளம் பருவத்திலேயே சொல்லிக் கொடுக்கும் பொழுது மனிதநேயம் அவர்களின் நெஞ்சங்களில் மலர ஆரம்பிக்கும்.
தான் விரும்பிய பொருள் அல்லது அன்பு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பொருளையோ, அன்பை மறுத்த மனிதரையோ வெறுக்கவோ, வெறி கொண்டு கொலை செய்யவோ மனம் துணியாது. சில பெற்றோர்களின் மனதில் மனிதநேயம் மரித்துப் போவதால் தாங்கள் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளை கருணைக் கொலை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
வீடுகள் மட்டுமின்றி, கல்விக் கூடங்களும் மாணவர்களுக்கு மனிதநேயத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறுவதால் இன்று பள்ளிகளிலேயே மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேறுகின்றன.
மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கலவரப் பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஊடகங்கள் திரும்பத், திரும்பக் காட்டுவதால் அதனைப் பார்க்கும் மக்களின் உணர்சிகள் தூண்டப்படும்.
குற்றம் செய்பவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் மதம்,சமூகம் ஆகியவற்றை குறிப்பிடுவது நிலைமையை இன்னும் மோசமாகவே ஆக்கும். துவேஷத்தைப் பரப்பும் வகையில் அரசியல்வாதிகளோ, சமூக விரோதிகளோ பேசும் பேச்சுகளால் வன்முறை பெரிதாகி, மதக் கலவரமாக வெடிக்கும்.
ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டால் அசம்பாவிதங்களை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஒவ்வொருவரும் மனிதநேயம் தழைப்பதற்கு நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...