Wednesday, September 13, 2017

தற்கொலைகளை ஏன் நம்மால் தடுக்க முடிவதில்லை?

Published : 12 Sep 2017 08:53 IST

இள.சிவபாலன்






கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 லட்சம் தற்கொலைகள். பெரும்பாலானோர் 15-ல் இருந்து 29 வயதுடையோர். 15 வயதில் ஒரு வளரிளம் குழந்தை தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கிறது என்பதையே நம் மனதால் ஏற்க முடியவில்லை. ஆனால், அதிகபட்சத் தற்கொலைகள் இந்த வயதில்தான் நிகழ்கின்றன. “எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’’ என ஏழெட்டு வயது மகனோ / மகளோ சொல்லும்போது, அது நமக்கு நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. அந்த வார்த்தைகளின் பின்னுள்ள ஆழ்ந்த மனவலியை நாம் உணரத் தவறுகிறோம்.

தற்கொலை எண்ணம் இருப்பதாக ஒருவர் சொல்லும்போது, ஒரு பலவீனமான மனிதருக்கு முன், நாம் மிகுந்த பலசாலியாக, வாழ்க்கையைப் புரிந்துகொண்டவராக, வாழ்க்கையின் மீதான பதற்றங்கள் அற்றவராக நம்மை நினைத்துக்கொள்கிறோம். அந்த மமதையில் தற்கொலையின் அவலம் குறித்து நீண்ட போதனையைப் பாதிக்கப்பட்டவரிடம் நிகழ்த்துகிறோம். அவரது பலவீனங்களை அவரிடமே பட்டியலிடுகிறோம். தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று பரிகசிக்கிறோம். தற்கொலை எந்தப் பலனையும் தரப்போவது இல்லை என்ற அரிய உண்மையை அவருக்கு அறிவிக்கிறோம்.

தற்கொலையைத் தடுக்க, பாதிக்கப்பட்டவரிடம் பேசுவது அத்தனை முக்கியமானது என நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்கொலை எண்ணம் கொண்டோரிடம் நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எப்போதாவது கேட்பதற்குத் தயாராக இருந்தோமோ?

காது கொடுத்துக் கேட்டோமா?

மருத்துவராக வேண்டும் என்ற உணர்வுபூர்வமான கனவை பால்ய காலம் முதல் சுமந்து, அதற்காகக் கடினமாக உழைத்து, தன்னை முழுவதுமாகத் தகுதியாக்கிக்கொண்ட ஓர் எளிய குடும்பத்து மாணவியிடமிருந்து அவளது கனவை, லட்சியத்தை அடாவடியாகப் பறிக்கும்போது, “ப்ளஸ்-டூவில் மதிப்பெண் நிறைய வாங்க வேண்டும் என்றார்கள். வாங்கினேன். நீட் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது” என்று அந்த மாணவி கதறுகிறாள். அந்த வலிமிகுந்த குரலை நாம் எத்தனை வாஞ்சையுடன் காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும்?

விளிம்புநிலை சமுதாயத்திலிருந்து ஒரு மாணவன், ஏராளமான எதிர்பார்ப்புகளோடு, ஒரு பல்கலைக்கழகத்தில் சேரும்போதும், அங்கு அவனுக்குச் சமத்துவமும் சுதந்திரமும் மறுக்கப்படும்போதும்; பாரபட்சங்கள் ஒரு கூரிய கத்தியாக அவனின் லட்சியவாதக் கனவுகளுக்கு முன் தொங்கும்போதும் “என்னைப் போல ஒடுக்கப்பட்ட மாணவர்கள், இது போன்ற பல்கலைக்கழகங்களில் சேரும்போதே கொஞ்சம் விஷமும், உறுதியான கயிறும் தந்துவிட்டால் மறுக்கப்பட்ட அவர்களது உரிமைகளைத் தங்களது மரணத்தில் தேடிக்கொள்வார்கள்” என்று சொன்னபோதே நாம் காது கொடுத்துக் கேட்டிருந்தால் அதே போன்ற ஒரு உறுதியான கயிற்றில் அவன் தூக்கு மாட்டிக்கொண்ட அவலத்தைத் தடுத்திருக்கலாமே?

நிச்சயமற்ற பருவநிலைகளை நம்பியிருக்கும் விவசாயத்தில், வாழ்வாதாரம் முழுவதையும் முதலீடு செய்யும் விவசாயி, ‘பருவமழை தவறும்போதும் அரசாங்கம் முன்னெப்போதையும்விட தீவிரமாக எங்களை அரவணைக்க வேண்டும்; எங்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையாவது உறுதிசெய்ய வேண்டும்’ எனச் சொல்லும்போது நமது காதுகளைத் திறந்து வைத்திருந்தால், வருடத்துக்குக் கிட்டத்தட்ட 20,000 விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்திருக்கலாமே?

மதிப்பெண்களின் மீதான கிளர்ச்சியில், நம் குழந்தைகள்மீது நாம் வைத்திருக்கும் போலியான மதிப்பீடுகளின் அழுத்தம் தாங்காமல் அவர்கள் கதறும்போது நாம் செவி கொடுத்துக் கேட்டோமா?

அந்தக் கணத்தில் ஒரு ஜீவன்...

எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பது தற்கொலையாளர்களுக்கும் தெரியும். பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைத்து அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது இல்லை. பிரச்சினையை எதிர்கொள்வதற்கான நம்பிக்கைகள் இருண்டுபோன தருணத்திலேயே அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஒருவேளை, அந்தக் கணத்தில், அவர்களின் மனவலியை இறக்கி வைக்க; அவர்களின் வேதனையைப் பகிர்ந்துகொள்ளத் தோழமையான ஒரு ஜீவன் அருகில் இருந்திருந்தால் அந்தத் தற்கொலை முடிவு கைவிடப்பட்டிருக்கலாம்.

ஆரோக்கியமான சமூகமாக நாம் தோல்வி அடைந்துவிட்டதைத்தான் ஒவ்வொரு தற்கொலையும் நமக்கு உணர்த்துகிறது. நாமோ, நம் தோல்விகளை ஒப்புக்கொள்வதேயில்லை. மாறாக, தற்கொலை செய்துகொண்டவர் மீதே அதற்கான பழியையும் சுமத்திவிடுகிறோம். குற்றவுணர்ச்சியின் சிறு எச்சம்கூட நம்மீது படிவதை நாம் விரும்புவதில்லை. நம்மைப் பொறுத்தவரையில் அத்தனை தற்கொலையும் ஒன்று. வேறு வேறு புறக்காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனிப்பட்ட பலவீனங்கள் மட்டுமே அவற்றுக்கெல்லாம் முதன்மையான காரணம் என்று நம்புகிறோம். இந்த சிந்தனை ஓட்டம் மாறாத வரை தற்கொலைகளை நம்மால் தடுக்கவே முடியாது.

வாழ்க்கையின் மீதான மற்றும் வாழ்தலின் மீதான தீராத காதலில் இருக்கும் ஒரு மனிதர், துரோகத்தின் அல்லது ஏமாற்றத்தின் பொருட்டுத் தற்கொலையை நாடிச் செல்வதையும், வாழ்க்கையின் மீதான வெறுப்பில் ஒருவர் மரணத்தை நாடிச் செல்வதையும் நாம் எப்படி ஒரே அளவில் மதிப்பிட முடியும்? சுதந்திரமும் சமத்துவமும் நீதியும் வாழ்வாதாரங்களும் வாய்ப்புகளும் ஒரே மாதிரி இல்லாத ஒரு சமூகத்தில், தற்கொலைகளுக்கு மட்டும் எப்படி ஒரே மாதிரியான காரணத்தைச் சொல்ல முடியும்?


சமூகத்தின் தோல்வி

“தற்கொலை என்பது தனிமனித பலவீனம் அல்ல, அது ஒரு சமூகத்தின் தோல்வி. ஒவ்வொரு தற்கொலையிலும், சமூகம் ஏதோ ஒரு வகையில் தனது சித்தாந்தத்திலும் அடிப்படைக் கட்டுமானத்திலும் தோல்வி அடைகிறது. அதனால் ஒவ்வொரு தற்கொலையிலிருந்தும் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு அந்தச் சமூகத்தை மீள்கட்டுமானம் செய்வது அவசியம்” என்றார் தத்துவவியலாளர் எமில் டர்க்கெம்.

ஆனால், நாம் ஒவ்வொரு தற்கொலையையும் தனிமனித பலவீனமாக நிறுவுவதில் மெனக்கெட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு தனிமனிதரின் மூளையில் ஏற்படும் சமநிலையற்ற வேதிமாற்றங்களையே அத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் என்று நிறுவ முயல்கிறோம். தற்கொலை செய்துகொள்பவர்களில் சுமார் 20% பேர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், எல்லா தற்கொலைகளுக்கும் மனநோயைக் காரணமாக்குவது ஆபத்தானது.

நமது சுயநலம்

மனநோயும், தனிமனித பலவீனங்களும்தான் எல்லா தற்கொலைகளுக்கும் காரணம் என நாம் சொல்வதில் ஒரு சுயநலம் இருக்கிறது. அதில் நமக்குப் பங்கில்லை என்று குற்றவுணர்ச்சியின்றிக் கடந்து போகலாம். “நான் அப்போதே அவனிடம் அவ்வளவு அறிவுரை சொன்னேன், கேட்டானா?” என அங்கலாய்க்கலாம்.

தற்கொலையை நோக்கிய நீண்ட பாதையில், ஒருவர் அவ்வளவு தனியாக நடந்து வரும்போது, அவரின் கரங்களைப் பற்றிக் கருணையுடன், அவரது வேதனைகளைக் கேட்பதற்கு நாம் தயாராக இல்லாத பட்சத்தில்... நம்பிக்கையின் சிறு வெளிச்சத்தையாவது நம்மால் அவருக்குத் தர இயலாத பட்சத்தில்... நாம் சொல்லும் எந்த அறிவுரையும் அவரது அந்தப் பயணத்தை தடுக்கப்போவதில்லை.

அன்பு, பரிவு, பாசம், ஆதரவு போன்ற உணர்வுகளை ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பே, சக மனிதர்களின் சுயநலமற்ற அன்பிலும் இணக்கத்திலும்தான் இருக்கிறது. இங்கு ஒருவர் தன்னை நிராதரவாக உணரும்போது, பிறழ்வான அவரது மனம்தான் அதற்குக் காரணமாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறழ்வான சமூக அமைப்புதான் முக்கியமான காரணம். முதிர்ச்சியான குடிமைச் சமூகம், ஒவ்வொரு தற்கொலையிலும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதற்கு நம் கேளா செவிகளைத் திறந்து வைக்க வேண்டும். ‘நாலு வார்த்தை’ பேசுவது முக்கியம் போலவே, ‘நாலு வார்த்தை’ பேசுவதைக் கேட்பதும் இங்கு முக்கியம்.

-இள.சிவபாலன், மனநல மருத்துவர்,

தொடர்புக்கு: sivabalanela@gmail.com.

செப்டம்பர்-10: உலக தற்கொலைத் தடுப்பு நாள்

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...