Saturday, October 27, 2018

தலையங்கம்

உயர்ந்த மனிதருக்கு உயரமான சிலை




இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார்.

அக்டோபர் 27 2018, 04:00

இந்திய விடுதலைக்காக, இந்திய ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒரு உயர்ந்த மனிதருக்கு, உலகிலேயே உயரமான சிலையை வருகிற 31–ந் தேதி குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்போகிறார். அவர் வேறு யாருமல்ல, ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் தான். அவருடைய பிறந்தநாள் 1875–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31–ந் தேதி ஆகும். 2013–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி அவரது பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி உலகிலேயே மிக உயரமான சிலையை அவருக்கு அமைக்கும் முயற்சியில் அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளில் அந்த சிலை அமைக்கப் பட்டு, வருகிற 31–ந் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று சிலை திறப்பு விழாவும் நடக்கிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையே தன் வாழ்க்கை என்று வாழ்ந்தார். சுதந்திரத் துக்கு பிறகு, இந்தியா ஏக இந்தியாவாக இல்லாத நேரத்தில், ஒருங்கிணைந்த இந்தியாவாக ஆக்கிய பெருமை சர்தார் வல்லபாய் படேலையே சாரும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், துணை பிரதமராகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். நாட்டு வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றினார். அந்தநேரத்தில் இந்தியா ஏக இந்தியாவாக இல்லை. 565 சமஸ்தானங்கள் நாட்டில் ஆங்காங்கு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தன. வல்லபாய் படேல் அந்த சமஸ்தானங்களை எல்லாம் இந்தியாவோடு சேர்க்க மிகவும் பாடுபட்டார். ‘ஆடுகிற மாட்டை ஆடி கறக்கவேண்டும், பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும்’ என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப, பேச்சுவார்த்தை மூலமாகவும், போரிட்டும் அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவோடு ஒன்றிணைத்து ஏக இந்தியாவை உருவாக்கினார். இதனால்தான் அவரை இன்றளவும் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று போற்றுகிறது, புகழ்கிறது. ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் தியாகங்கள், அயராத பணிகள், உரியமுறையில் அங்கீகாரம் பெறவில்லை என்பது ஒரு பெரிய மனக்குறைவுதான்.

1950–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி காலமான சர்தார் வல்லபாய் படேலுக்கு, 1999–ம் ஆண்டுதான் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இப்போது பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மிக சரியான அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். குஜராத் மாநிலத்தின் ரத்த நாளமாக விளங்கும் நர்மதா ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்பது வல்லபாய் படேலின் கனவாகும். அங்கு அந்த அணை கட்டப்பட்டு ‘சர்தார் சரோவர் அணை’ என்று பெயரிடப் பட்டுள்ளது. அந்த அணையில் இருந்து 3.2 கி.மீட்டர் தூரத்திலுள்ள ஆற்று தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் மட்டும் 600 அடியாகும். பீடத்தின் உயரத்தையும் சேர்த்தால் 787 அடியாகும். ரூ.3,000 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப் பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு, செய்த தியாகங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கிறது. நிச்சயமாக அவரைப்பற்றி அனைவருக்கும் தெரிவிக்க பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாறு இந்தியா முழுவதிலும் சேர்க்கப்படவேண்டும். அதுவே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலி என்பதுதான் ஆன்றோர்களின் கருத்தாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...