Saturday, October 27, 2018


பெண்ணிடம் சைகை காட்டுவது பாலியல் குற்றமா? எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள்; என்ன தண்டனை?- விரிவான அலசல்

Published : 23 Oct 2018 15:40 IST

க.சே.ரமணி பிரபா தேவி




படம்: ராய்ட்டர்ஸ்.

பாலியல் தொடர்பான செய்திகள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், இணையம் என எல்லா ஊடகங்களிலும் இடம்பெறுகின்றன. ஆனால் பாலியல் அத்துமீறல் குறித்து முறையாக அறிந்திருக்கிறோமா?

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல்கள், அவற்றைப் புகார் அளிக்க முடியுமா? அவற்றுக்கு என்ன தண்டனை?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு கிடைக்குமா உள்ளிட்ட கேள்விகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.


1. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?

தொடுவது, சைகை காட்டுவது, சைகை காட்டச் சொல்வது, முகத்தில் வெவ்வேறு பாவங்களைக் காண்பிப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, பாலியலுக்கு அழைப்பது உள்ளிட்டவை பாலியல் குற்றங்களில் அடங்கும்.

2. என்னென்ன சைகைகள், உடல் மொழிகள் பாலியல் குற்றமாகக் கருதப்படும்?

அந்தரங்க உறுப்புகளைப் போன்ற சைகைகளைக் காண்பிப்பது, ஆபாசமான படங்களைக் காட்டுவது, பொதுவான மற்றும் அந்தரங்க உடல் பாகங்களைத் தொடுவது மற்றும் தொடச் சொல்வது மற்றும் அந்தரங்க உடல் உறுப்புகளைக் காண்பிப்பது குற்றமாகும்.

3. பாலியல் புகார்களை யாரிடம் அளிக்க வேண்டும்?

அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். அவர்களே புகார் எந்தப் பிரிவின் கீழ் வரும் என்பதைப் பகுப்பாய்வு செய்து வழக்குப் பதிவு செய்வர்.



4. இணையம் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்?

இணையப் புகார்களையும் அதே காவல் நிலையத்தில் அளிக்கலாம். அவர்கள் அங்குள்ள சைபர் க்ரைம் அதிகாரிக்கு புகாரை அளிப்பார்கள். காவல் துறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், மாவட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம், அல்லது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட மகளிர் ஆணையத்தை நாடலாம். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத பட்சத்தில், நீதிமன்றங்களின் கதவைத் தட்டலாம்.

5. சம்பவம் நடந்து எவ்வளவு நாட்கள் கழித்துப் புகார் கூறமுடியும்?

பாலியல் குற்றம் நடந்து, எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால் தாமதம் குறித்து நீதிமன்றம் கேட்கும் காரணங்களுக்குத் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். (உதாரணத்துக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மேற்கொள்ளப்படும் தாமதம் ஏற்றுக்கொள்ளப்படும். )

புகாரை ஏற்றுக்கொள்வது நீதிமன்றத்தின் இறுதி முடிவாகும்.

6. பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை எப்படி எதிர்கொள்வது?

சம்பந்தப்பட்ட அலுவலகமே உள்ளூர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். அலுவலகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்.


வேலை பார்க்கும் ஒரு பெண், வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர், பணியிடத்துக்கு பொறுப்பானவர் ஆகிறார். அதேபோல வேலை முடித்து வீடு திரும்பும் வரை, அவர் பணியில் இருப்பதாகத்தான் அர்த்தம். அல்லது அப்பெண் தனிப்பட்ட முறையிலும் புகார்களை அளிக்கலாம்.

7. உள் விவகாரங்கள் ஒழுங்குமுறை கமிட்டி (விசாகா கமிட்டி) என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்னென்ன?

* விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

*குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் அமைக்கப்பட வேண்டும்

* கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

* ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

விசாகா கமிட்டி அமைக்காத அலுவலகங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அரசு சார்பில் அபராதம் விதிக்கப்படும். அதுதவிர சட்ட நடவடிக்கைகளும் பாயும்.

8. எங்கெல்லாம் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும்?

* அரசு அலுவலகங்கள்,

* தனியார் நிறுவனங்கள்,

* பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயம்.



பாலியல் அத்துமீறல் - சித்தரிப்பு படம்

9. ஆதாரம் இல்லாத புகாரை எப்படிக் கையாள வேண்டும்?

பாலியல் புகார் அளிக்கும்போது கட்டாயம் ஆதாரம் தேவை. சாட்சி இல்லாத பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாக அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தேவைப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவரிடம் உண்மை அறியும் சோதனையை மேற்கொள்ளலாம். இதில்தான் பெரும்பாலான வழக்குகள் தீர்க்கப்படுகின்றன.

இனி வரும் காலங்களில் பாலியல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 . உறவில் இருவர் இருந்த போது, ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மற்றொருவர் புகார் கூற முடியுமா?

உறவில் இருக்கும்போதோ, அதற்குப் பிறகோ, நண்பர்களாக இருக்கும்போதோ/ இருந்தபோதோ கூறப்படும் அனைத்துப் பாலியல் புகார்களும் ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்ளப்படும்.


11.பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இருக்கிறதா?

ஆம், சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மகிளா சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அங்கே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும். நீதிமன்றத்தின் தலைவராக பெண் நீதிபதி இருப்பார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை நடைபெறும். அப்போது பாதிக்கப்பட்ட நபரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத வகையில் கண்ணாடிக் கதவு அமைக்கப்பட்டிருக்கும்.

மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.



வழக்கறிஞர் சதீஷ் குமார்

12. பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெற முடியுமா?

நிச்சயமாக. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.

13.நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு என்ன தண்டனை?

பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து தண்டனை மாறும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் மற்றும் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...