Wednesday, September 18, 2019

பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடா?: தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு

By DIN | Published on : 18th September 2019 05:11 AM



தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற நடைமுறை காலநேரம் பார்க்காமல் பணிபுரியும் தங்களுக்குப் பொருந்தாது என தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள், முக்கிய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தலைமைச் செயலகத்திலும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.


துறைச் செயலாளர்கள் கூட்டம்: அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலகத்தில் ஊழியர்களின் வருகை, புறப்பாட்டைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு துறைச் செயலாளர்களில் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பயோ-மெட்ரிக் முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, ஊழியர்கள் கூறுகையில், தலைமைச் செயலகத்தில் காலநேரம் பார்க்காமல் பணிபுரிகிறோம். குறிப்பாக நிதி நிலை அறிக்கை தாக்கலாகும் நேரங்களில் இரண்டு முதல் மூன்று மாதங்களாக காலை, இரவு என நேரம் பார்க்காமல் பணி செய்கிறோம். இந்தச் சூழலில், பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பது போன்று பயோ-மெட்ரிக் முறையைக் கொண்டு வந்தால் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பணிபுரியும் நிலை ஏற்படும். மாலையில், வேலை நேரம் முடிந்தவுடன் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விட்டு செல்லும் மனநிலை ஏற்பட்டு விடும். எனவே, இப்போதைய நடைமுறையே தொடர்ந்திட வேண்டும் என்று ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025