Friday, February 20, 2015

மெக்கல்லம் ருத்திரதாண்டவம்: 12 ஓவரில் நியூசிலாந்து வெற்றி!



வில்லிங்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை துரத்தியடித்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

வில்லிங்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, என்னமோ இமாலய இலக்கை நிர்ணயிக்கிற மாதிரி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் இயான் பெல் 20 ரன்களிலும், மொயின் அலி 8 ரன்களிலும் சவுத்தி பந்தில் போல்டானார்கள்.

கேப்டன் மோர்கன் 41 பந்துகளில் 17 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இறுதியில் 33 ஓவர்களில் சுருண்ட இங்கிலாந்து 123 ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது.

சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது உலகக் கோப்பையில் மூன்றாவது சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு முன், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்ராத் 15 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிட்செல் 20 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மெக்கல்லமும், குப்திலும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். அதிலும் மெக்கல்லமின் அதிரடியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கதி கலங்கிதான் போனார்கள். 18 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் மெக்கல்லம் 50 ரன்களை கடந்தார். இதற்கு முன் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் இதே மெக்கலம்தான் அரை சதமடித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை அவரே இன்று தகர்த்தார். தொடர்ந்து சரவெடி ஆட்டம் ஆடிய மெக்கல்லம் 25 பந்துகளில் 77 ரன்களை அடித்து வெளியேறினார்.

பின்னர் குப்திலும் 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் வெற்றிக்கு தேவையான 124 ரன்களை 12.2 ஓவர்களிலேயே அடித்து முடித்தனர். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேச அணி எடுத்திருந்த 109 ரன்களை 12 ஒவர்களில் எட்டியதுதான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நியூசிலாந்து முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 2 பந்துகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் அந்த சாதனையை நியூசிலாந்து கோட்டை விட்டது.

இத்துடன் நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை ஈட்டியுள்ளது. ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...