Tuesday, February 17, 2015

தொட்டில் குழந்தைகள் திட்டம்தான் தீர்வு

இந்தியா காலம்காலமாக பெண்மையைப் போற்றி வணங்கி வந்தாலும், சமுதாயத்தில் தனக்கு பெண்குழந்தை என்றால் சலிப்புடன் வேண்டா வெறுப்பாக கருதும் நிலை இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 1941–ம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,010 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்பில் இருந்து, 6 வயது வரையிலான குழந்தைகள் விகிதம் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த விகிதம் குறையத்தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடுமுழுவதும் மக்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வரும்போதுதான் இந்த விகிதம் அறியப்படுகிறது. 2001–ம் ஆண்டு கணக்கெடுப்பில் இதே வயது வரம்பில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்று இருந்த நிலைமாறி, 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 919 ஆக குறைந்துவிட்டது. இந்த விகிதத்தில் அரியானா மாநிலம்தான் மிக மோசமாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 834 பெண் குழந்தைகள்தான். புதுச்சேரியில் 967 ஆகவும், தமிழ்நாட்டில் 943 ஆகவும், கர்நாடகத்தில் 948 ஆகவும், கேரளாவில் 964 ஆகவும், நாட்டின் தலைநகரமாம் டெல்லியில் பரிதாபகரமாக 871 ஆகவும் இருக்கிறது.

ஆக, நாட்டில் நிலவும் இந்த மோசமான நிலையை போக்கும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, அரியானா மாநிலத்தில் ‘‘மகளை காப்போம், மகளுக்கு கல்வி புகட்டுவோம்’’ என்ற திட்டத்தை ரூ.100 கோடி செலவில் தொடங்கியுள்ளார். இது, அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் விழிப்புணர்வு நடத்தும் திட்டமாகும். வெறும் பிரசாரத்தால் எந்த பயனும் எதிர்பார்த்த அளவு வரப்போவதில்லை. கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று ஸ்கேன் மூலம் பார்ப்பதை தடைசெய்யும் சட்டத்தை கடுமையாக நிறைவேற்றவேண்டும். அதுபோல, பெண் சிசுக்கொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெண் கல்வி, வேலைவாய்ப்புகள், வரதட்சணை கொடுமை ஒழிப்பில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். எனக்கு பெண் குழந்தை வேண்டாம் என்று பிறந்த குழந்தையை கொல்லும் கொடிய வழக்கம் இன்னும் நாடு முழுவதும் இருக்கிறது. அப்படி வேண்டாம் என்று ஒதுக்கும் குழந்தைகளை கொல்லவேண்டாம், அரசே செல்லக்குழந்தைகளாக வளர்க்கும் என்ற ஒரு கருணைத்திட்டத்தை, 1992–ம் ஆண்டில் ‘தினத்தந்தி’யில், வயிற்றில் இருக்கும் கரு, பெண் குழந்தை என்று ஸ்கேன் மூலம் தெரிந்தவுடன், அந்த கருவை அழிக்க மாமியாரின் வற்புறுத்தலை தாங்கமுடியாத சேலம் மாவட்டம், தொப்பூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மனம் உருகி கொண்டுவந்த திட்டம்தான் ‘தொட்டில் குழந்தைகள்’ திட்டம். அன்னை தெரசாவே சென்னையில் ஜெயலலிதாவை மனம் நெகிழ்ந்து பாராட்டிய திட்டம் இது. இந்த திட்டத்தின் மூலமாக இன்றுவரை 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் பிழைத்து, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். எனவே, வெறும் பிரசாரத்தோடு நின்றுவிடாமல், இந்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தை நாடுமுழுவதும் நிறைவேற்றினால்தான், இந்த கொடுமை தீரும் என்பதை தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜ.க.வினர், மத்திய அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...