Friday, April 3, 2015

தலையங்கம் :தேர்வில் 'பிட்' கலாசாரம் தமிழகத்தில் வந்தது எப்படி?

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 8.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த தடவை பீகாரைப் போல பெருமளவில் காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், சில சம்பவங்கள்
தமிழகத்தை அதிரச் செய்தன. இந்த ஆபத்தான கலாசாரம் எப்படி வந்தது? இதை முற்றிலும் நீக்க முடியுமா என்பதற்கும் விடை
காண்பது சிரமம்.
சமீப காலங்களில், தேர்வு முடிவுகளில், அதிக உச்சத்தை தொடவைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மாணவ, மாணவியரை தேர்வுக்கு, இயந்திர கதியில் அதிக அளவில் இயங்க வைக்கின்றனர்.சமீபத்தில், 'வாட்ஸ் அப்' மூலம் வினா-விடை விவரங்களை தந்த அதிர்ச்சி தகவல் வந்த பின், பல விஷயங்களை, முன்னாள் ஆசிரியர்கள் தமிழகத்தில் வெளிப்படையாக பேசுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 'கொள்குறிவகை'யில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு, ஏற்கனவே மாணவர்கள் சில தவறான உத்திகளை பின்பற்றும் வழக்கம், சில பள்ளிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் அறையில், நன்கு படிக்கும் தலையாய மாணவர் ஒருவர் அல்லது மாணவி, இக்கேள்விகளுக்கு ரகசிய சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் வழக்கம் இருக்கிறதாம்.தலையை தொட்டால், 'ஏ' என்ற விடை, மூக்கைத் தொட்டால், 'பி' சரியானது என்று சமிக்ஞை மூலம், 'பிட்' பாணிக்கு முன்னோட்டமாக இந்த முறை இருக்கிறதாம். இதை தேர்வு கண்காணிப்பாளர் எப்படி தடுக்க முடியும்?கல்வி ஒரு வியாபாரமாக ஆன அடையாளத்தின் ஒரு கூறு இது என்று பலரும் கூறலாம்.'வாட்ஸ் அப்' மூலம் பரவிய கலாசாரத்தை, இனி அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 20 தேதிக்குள் முடிந்து விடும் என்றும், அதற்குப்பின் வெளிவரும் முடிவுகளில், அதிகம் பேர்
ரேங்க் பட்டியலில் முன்னணியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் மற்றொரு நல்ல அம்சமாக, புதிய சூழ்நிலை வரும் அறிகுறிகள் காணப்
படுகின்றன.தமிழகத்தில் அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிக
கட்டண வசூல் இத்தடவை குறையும் என கூறப்படுகிறது. காரணம், முன்னணி
கல்லூரிகள் கூட, சில துறைகளில், முழு அளவில் இடங்களை நிரப்ப முடியவில்லை.
மேலும் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் அதிக அனுபவத் தகுதி பெற வேண்டிய நிலை முற்றிலும் உருவாகவில்லை. அதிலும் சீர்திருத்தம் வரவேண்டும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் போட்டி போடும் சூழ்நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்று எடைபோடும் காலம் வருகிறது. வேலைவாய்ப்பு தரும் கல்வி எது என்று ஆராயும் வகையில் சமுதாயம் சிந்திப்பது நல்ல அறிகுறி. அதை நோக்கி உயர் கல்வி சீராகப் போகிறது என்பதும் நல்ல அடையாளமாகும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...