Tuesday, January 24, 2017

எங்க காலத்துல நீங்க இல்லாமப் போயிட்டீங்களே கண்ணுங்களா..' - மெரினா களத்தில் பாட்டியின் பெருமிதம்!

பாட்டி

ஜல்லிக்கட்டு போராட்டக் களமான சென்னையில் தனது வயதையும் பொருட்படுத்தாமல் போராட்டக்களத்தில் வந்து அமர்ந்திருந்த எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியிடம் பேசினோம்.

''என்னோட இளம் வயசுல பல பெரிய பெரிய அரசியல் ஜாம்பவான்கள் நடத்தின போராட்டத்தை எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா, இப்படி ஒரு புரட்சிகரமான போராட்டத்தை என்னோட வாழ்நாளில் பார்த்தது இல்ல. எவ்வளவு ஒத்துமையா, அசம்பாவிதம் இல்லாம போராட்டம் நடத்தினாங்க இந்த பசங்க. அங்கங்க மைக்கப் புடிச்சு எவ்வளவு அருமையாப் பேசுதுங்க. நமக்கெல்லாம் கை,கால் நடுங்கும். ஆனா இந்த புள்ளைங்க பேசப் பேச கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு ராசாத்தி. அத்தனைப் புள்ளைங்களும் நல்லா இருக்கணும்.



மனுஷனோட வாழ்க்கையில செய்யிற நல்ல விஷயம் என்ன தெரியுமா, வயிரை நிறைய வைக்கிறதுதான். வயித்துக்கு வஞ்சனை இல்லாம எல்லாருக்கும் சாப்பாடு போட்டு, தண்ணிக் கொடுத்து, உதவிக்கு ஓடி வந்து எப்படி பாத்துக்கிறாங்க தெரியுமா. எனக்கு வீடு பக்கத்துலதான். இருந்தாலும் அப்பப்போ பீச்சுப் பக்கம் வருவேன். ஆனா, இந்த போராட்டம் நடக்க ஆரம்பிச்சதுல இருந்து தெனமும் வந்துட்டுப் போறேன்.' என்றவரின் பைகளில் நிறைய சாப்பாட்டுப் பொட்டலங்கள் இருந்தன. அது குறித்து கேட்டதற்கு,

'இது எனக்கு இல்லம்மா.. எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற நடக்கமுடியாத, உடம்பு சரியில்லாம இருக்கிற பல பேருக்கு கொடுக்கப் போறேன். இந்த பசங்களால நாலு நாளா நல்ல சாப்பாடு சாப்பிடுறாங்க. என்னைய கையெடுத்து கும்பிடுறாங்க. ஆனா, நான் சொன்னேன், நன்றி சொல்லணும்னு நம்ம பேரன்,பேத்திகளுக்கு சொல்லுங்கனு. நீங்க எல்லாருமா சேர்ந்து இந்த பீச் ஓரமாபடுத்திருந்த பல ஏழைகளோட, இல்லாதவங்களோட வயித்த நிரப்பியிருக்கீங்க கண்ணுங்களா..நீங்க நல்லா இருக்கணும். ஆனா, ஒன்னு நீங்க பேசும் போது யாரையும் கெட்ட வார்த்தகள்ள திட்டாதீங்க. நீங்க எல்லாம் நல்லாப் படிச்சவங்க. பல விஷயம் தெரிஞ்சவங்க. உங்க வாயில சரஸ்வதி குடியிருக்கா.. அந்த வாயால கெட்ட வார்த்தைகளப் பேசாதீங்க. என்ன தான் இருந்தாலும் நீங்க திட்டறவங்க உங்களைவிட வயசுல பெரியவங்க இல்லியா. ஆனாலும், உங்க அத்தனை பேரோட பேச்சையும் நான் கவனமா கேட்டுட்டேன். எங்க காலத்துல நீங்க இல்ல. உங்க காலத்துல நாங்க இருக்கோம்ங்கிற பெருமை போதும்டா கண்ணுங்களா.' என கண்கள் கலங்கினார். கடைசி வரை தன் பெயரை சொல்லவே இல்லை பாட்டிம்மா.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...