Monday, January 16, 2017

தமிழுக்குப் பெருமை!

By ஆசிரியர்  |   Published on : 16th January 2017 01:59 AM

இன்றைய உலகமய, தொழில்நுட்ப சூழலில், தமிழ்வழிக் கல்வி என்பது வருங்காலத்துக்கு உதவாது என்கிற கருத்தைப் பொய்யாக்கியிருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி ஏற்க இருக்கும் நடராஜன் சந்திரசேகரன். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகரனின் நியமனம் டாடா சன்ஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பம். டாடா சன்ஸ் என்கிற 10,300 கோடி டாலர் (ரூபாய் சுமார் 7 லட்சம் கோடி) வர்த்தகக் குழுமத்தின் தலைவராக, பார்ஸி இனத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

டாடா சன்ஸ் என்பது இந்தியாவிலேயே மிகவும் பழைமையான, சர்வதேச அளவில் அறியப்படும் வணிகக் கூட்டாண்மை நிறு
வனம். இந்தக் குழுமத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் செயல்படுகின்றன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தக் குழுமத்தின் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றால் அது தமிழகத்திற்குப் பெருமை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியிலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலும் படித்து பொறியியல் பட்டமும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் முது   நிலைப் பட்டமும் பெற்றவர். 1987-இல் டாடா சன்ஸ் குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் சேர்ந்த சந்திரசேகரன், 2009-இல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவராக உயர்ந்தவர். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து டாடா நிறுவனத்திலேயே இருந்து வந்த அவருக்கு, இப்போது கிடைத்திருக்கும் தலைமைப் பதவி திறமைக்காக மட்டுமல்ல, விசுவாசத்திற்காகவும்கூட.

அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற சந்திரசேகரன் மட்டுமல்ல, அவரது இரண்டு சகோதரர்களும் இன்று மிகப்பெரிய நிர்வாகிகளாக வலம் வருகிறார்கள். அவரது மூத்த சகோதரர் சீனி
வாசன், முருகப்பா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர். இன்னொரு சகோதரர் டாடா கன்சல்டன்சி சர்வீஸின் தலைமை செயல் அதிகாரி. இந்த மூன்று திறமைசாலிகளின் தந்தை எஸ். நடராஜன், வழக்குரைஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற்று மோகனூரில் விவ
சாயத்தில் ஈடுபட்டவர். 85 வயது நடராஜனுக்கும், 82 வயதான மீனாட்சிக்கும் தமிழகமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சர்வதேச வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்ததற்கும், புதிய சந்தைகளைத் தனது நிறுவனத்திற்குத் தேடித் தந்ததற்கும் அவரது நிறுவனத்தால் பாராட்டப்படுபவர் சந்திரசேகரன். தனது நிறுவனத்திற்கு வெளியே இருந்து ஒருவரைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுப்பதைவிட, ஊழியர்களில் ஒருவரையே டாடா சன்ஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு, அந்த நிறுவனத்தின் கொள்கைகள், அடிப்படை குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் பொருள்களுக்கு இருக்கும் மரியாதை ஆகியவற்றை நன்கு உணர்ந்த, நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்பதுதான் காரணம். இதற்கு முன் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் இவை காணப்படவில்லை என்பதுதான் அவர்மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு.
கடந்த சில ஆண்டுகளாக, டாடா நிறுவனம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்த நீரா ராடியா விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது சைரஸ் மிஸ்திரியின் நீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை, அந்தக் குழுமத்தை நீதிமன்றத்திற்கும், நிறுவன சட்ட ஆணையத்திற்கும் இழுத்திருக்கிறது.

வியாபார ரீதியாகப் பார்த்தால், சர்வதேச இரும்பு உருக்கு நிறு
வனமான கோரûஸ வாங்கியதால் ஏற்பட்ட பேரிழப்பும், ஜப்பானிய நிறுவனமான டொக்கோமோவுடனான பிரச்னையும் புதிய தலைவரை எதிர்கொள்கின்றன. டாடா நிறுவனத்தின் ஹோட்டல், மோட்டார் வாகனம், விமானப் போக்குவரத்து போன்றவற்றின் செயல்
பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தி, அந்தத் துறைகளில் முன்னணி நிலையை அடைந்தாக வேண்டும். முதலீட்டாளர்கள், பங்குதாரர்
களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது இன்னொரு சவால்.
நிர்வாக செயல்பாடுகள் மூலம்தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க முடியும்.

சைரஸ் மிஸ்திரியின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, தன்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்பதுதான். நிச்சயமாக ரத்தன் டாடாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸின் இயக்குநர் குழுவின் தலையீடுகளை சந்திரசேகரன் ஆரம்ப கட்டங்களில் சகித்துக் கொண்டாக வேண்டும். இந்த நிறுவனத்தின் அடிமட்டத்
திலிருந்து உயர்ந்திருப்பவர் என்பதால் அது சந்திரசேகரனுக்கு சிரமமானதாக இருக்காது. சைரஸ் மிஸ்திரிபோல இவர் "உங்களுக்கு மேலே' என்கிற மனப்போக்கில் செயல்பட மாட்டார் என்பது
நிச்சயம்.

சந்திரசேகரன் ஒரு புகைப்படக் கலைஞரும், சங்கீத ரசிகரும் மட்டுமல்லாமல் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவரும்கூட. ஆம்ஸ்டர்டாம், பாஸ்டன், சிகாகோ, பெர்லின், மும்பை, நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருப்பவர்.

அவற்றையெல்லாம்விடப் பெரிய, சிரமமான மாரத்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவி. திருக்குறள் கற்று வளர்ந்த இந்தத் தமிழருக்கு "ஞாலம் கருதினும் கைகூடும்' என்பது தெரியும். அவருக்கு "தினமணி'யின் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...