Tuesday, January 17, 2017


எம்.ஜி.ஆர். நினைவலைகள்: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வழங்கப்பட்ட கலைமாமணி!





இன்று, எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள். இந்நாளில் ஒரு பிளாஷ்ஃபேக்.
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அண்ணாவின் வாசகத்துக்கேற்ப தன் படத்துக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒருவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்திருக்கிறார் மறைந்த எம்.ஜி.ஆர்.

"பட்டிக்காடா பட்டணமா", "ராஜபார்ட் ரங்கதுரை" போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர் கதாசிரியர் பாலமுருகன். 1967ஆம் ஆண்டு இறுதியில், வேறோரு படத்துக்கு வசனம் எழுதியதற்கு ஊதியம் கொடுப்பதற்காக கதாசிரியர் பாலமுருகனை தன் அலுவலகத்திற்கு அழைக்கிறார் ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசன். பாலமுருகனும் எஸ்.எஸ். வாசன் அலுவலகம் செல்கிறார்.

தன் அலுவலகத்துக்கு வந்த பாலமுருகனை வரவேற்று தன் எதிரே உள்ள நாற்காலியில் அமரச் சொல்லி மற்ற திரைப்படங்களைப் பற்றி பொதுவாக பேசுகிறார். இறுதியில், தன் படத்தில் பணிபுரிந்ததற்காக பாலமுருகனுக்கு ஊதியமாக நல்ல தொகையைத் தருகிறார் எஸ்.எஸ்.வாசன். தொகையை வாங்கிய கதாசிரியர் பாலமுருகன், ஐயா, நீங்கள் கொடுத்த தொகை, என் வேலைக்கு ஏற்ற ஊதியத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளதே என்று கூற, அதற்கு, எஸ்.எஸ். வாசன், பாலமுருகன், நீங்கள் செய்த வேலைக்கும் மற்றும் நீங்கள் செய்யப்போற வேலைக்கும் சேர்த்துக் கொடுத்துள்ளேன் என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று பாலமுருகன் கேட்க...
அதற்கு எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆரின் 100வது படத்தை தயாரிக்கிறேன், அதற்கு "ஒளி விளக்கு" என்று பெயரிட்டுள்ளேன்.அதற்கு நீங்கள்தான் கதை-வசனம் எழுத வேண்டும் என்றார்.

உடனே பாலமுருகன், மன்னிக்க வேண்டும், இந்தக் கை சிவாஜி படங்களுக்கு எழுதி பழக்கப்பட்ட கை. எம்.ஜி.ஆர் படத்துக்கு எழுத முடியாது என்றார்.
சற்றும் எதிர்பார்க்காத பதிலைக் கேட்ட எஸ்.எஸ்.வாசன், சிரித்துக் கொண்டே, ஒருவர் நடிக்கும் படத்துக்குக் கதை - வசனம் எழுவது அல்லது எழுதமாட்டேன் என்று சொல்வது என்பது உங்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் இது எம்.ஜி.ஆர் நடிக்கும் படம், அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு சிறந்த கதாசிரியர், அதனால் கேட்டேன் என்றார் எஸ்.எஸ்.வாசன்.
ஐயா, உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. ஆனால், என் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று பாலமுருகன் எஸ்.எஸ்.வாசனிடம் சொல்லிவிட்டு தனக்குரிய தொகையை மட்டும் ஊதியமாக எடுத்துக்கொண்டு, கிளம்பத் தயாரானார்.

சென்று வாருங்கள், ஆனால், எம்.ஜி.ஆர் படத்திற்கு கதை-வசனம் எழுத வந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டோமே என்று என்றைக்காவது வருத்தப்படுவீர்கள் என்று சொல்லி பாலமுருகனை அனுப்பிவைத்தார் எஸ்.எஸ்.வாசன்.

அலுவலகத்தை விட்டு பாலமுருகன் கீழே இறங்கி வருகிறார், எதிரில் நடிகர் திலகமும் அவரது சகோதரரும் எஸ்.எஸ்.வாசனை பார்க்க மேலே ஏறி வருகிறார்கள். பாலமுருகனை பார்த்தவுடன் சிவாஜி, 'என்ன பாலமுருகா இங்கே என்று கேட்க, அதற்கு பாலமுருகன் நடந்த சம்பவங்களைக் கூறினார்.
இதைக்கேட்ட சிவாஜி, என்ன பாலமுருகா, அருமையான சந்தர்ப்பம், அதுவும் அண்ணன் நடிக்கும் படத்தில் எழுதுவதற்கு. சரி, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு எஸ்.எஸ். வாசனைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
ஆனால், கதாசிரியர் பாலமுருகன் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார்
இந்தச் சம்பவம் நடந்து ஒருசில மாதங்களுக்குப் பிறகு, கதாசிரியர் பாலமுருகன் கதை-வசனம் எழுதிய படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவில் (தற்போது அங்கு ஜானகி-எம்.ஜி.ஆர் கலைக்கல்லுரி உள்ளது) நடைபெற்று வந்தது. பாலமுருகன் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கதாசிரியர் பாலமுருகனின் தோளை ஒரு கரம் அழுத்தியது. திரும்பிப் பார்த்த பாலமுருகன் ஆச்சரியமடைந்து, இருகை கூப்பி வணக்கம் என்றார். தன் எதிரே நின்றவர் எம்.ஜி.ஆர்.

உடனே எம்.ஜி.ஆர்., வணக்கம் அடியேன் எம்.ஜி.ஆர். நான் நடிக்கும் படங்களுக்கும் நீங்கள் கதை-வசனம் எழுத வேண்டும் என்று சொல்லி, பாலமுருகன் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சம்பவம் நடந்து பல வருடங்கள் கழித்து 1977ல் எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவியேற்கிறார். பதவியேற்ற ஒரு சில மாதங்கள் கழித்து மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமியைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, அண்ணா, நம்மள மாதிரி நாடகத்திலிருந்து வந்தவர் கதாசிரியர் பாலமுருகன், அவருக்கு அரசாங்கம் ஏற்கனவே விருது வழங்கியுள்ளதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

உடனே பாலமுருகனைத் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆர் கேட்ட கேள்வியை பாலமுருகனிடம் கேட்டார் வி.கே. ராமசாமி. உடனே இல்லை என்று பாலமுருகன் பதில் தர, அதே பதிலை எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டார் வி.கே. ராமசாமி. இந்தப் பதிலை மனதில் வைத்துக்கொண்டு, "கலைமாமணி" விருதை கதாசிரியர் பாலமுருகனுக்கு வழங்கி கௌரவித்தார்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற பேரறிஞர் சொன்ன வாசகங்களுக்கு ஏற்ப தனக்கு கதை-வசனமே எழுதாத ஒரு கதாசிரியருக்கு, தன்னைப்போல, நாடகத்திலிருந்து வந்தவர் என்கிற அடிப்படையில் தன் ஆட்சியில் "கலைமாமணி" விருதை வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...