Monday, September 25, 2017

பட்டையை கிளப்பினார் பாண்ட்யா; தொடரை வென்றது இந்தியா
பதிவு செய்த நாள்
செப் 24,2017 21:17


இந்துார்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாண்ட்யா விளாசல் கைகொடுக்க இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ம.பி.,யில் உள்ள இந்துாரில் நடக்கிறது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கார்ட்ரைட், மாத்யூ வேட் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப் வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.



பின்ச் விளாசல்:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி துவக்கம் தந்தது. பாண்ட்யா பந்தில் வார்னர் (42) போல்டானார். பின், இணைந்த பின்ச், கேப்டன் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய பந்துவீச்சை விளாசிய பின்ச், ஒரு நாள் அரங்கில் 8வது சதம் எட்டினார். தன் பங்கிற்கு, ஸ்மித் அரை சதம் கடந்தார்.

விக்கெட் சரிவு:

குல்தீப் 'சுழலில்' பின்ச் (124) ஆட்டமிழந்தார். ஸ்மித் 63 ரன்களில் அவுட்டானார். இதன்பின், விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது. சகால் பந்தில் மேக்ஸ்வெல் (5) சிக்கினார். டிராவிஸ் ஹெட் (4), ஹேண்ட்ஸ்கோம்ப் (3) ஒற்றை இலக்கில் திரும்பினர். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (27), ஆஷ்டன் ஏகார் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோகித் அரை சதம்:

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. கூல்டர் பந்தை ரகானே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு, ரிச்சர்டசன் பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தபோது, ரோகித் (71) ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் பந்தில் ரகானே (70) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி(28), கேதார் ஜாதவ்(2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

பாண்ட்யா அதிரடி:

பின் மணீஸ் பாண்டேவுடன் இணைந்த பாண்ட்யா அதிரடியில் கலக்க இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. வெற்றிக்கு 10 ரன்கள் மட்டும் தேவையாக இருக்கும் போது 4 சிக்சர்களுடன் அரைசதம் கடந்த பாண்ட்யா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. மணீஸ் பாண்டே 36 ரன்களுடனும், தோனி 3 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...