Sunday, September 24, 2017

வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 'மாஜி' அமைச்சர் 

செந்தில் பாலாஜியின் சொந்தங்கள் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு,60 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்து உள்ளது. பினாமிகள் பெயரில் இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கிய வரித்துறை, அவை யாருடையன என,'கிடுக்கிப்பிடி'விசாரணையை துவக்கி உள்ளது.



கரூரைச் சேர்ந்தவர், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி. தினகரன் ஆதரவாளரான இவரின், எம்.எல்.ஏ., பதவி, சமீபத்தில் பறிக்கப்பட்டது.இந்நிலையில், கரூரில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களின் நிதி நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில், 21ம் தேதி காலை, வருமான வரித்துறை சோதனை துவங்கியது.

பல குழுக்கள்

சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.சட்டசபை தேர்தலின் போது, செந்தில் பாலாஜியின், தேர்தல், வரவு - செலவுகளை கவனித்ததாக கூறப்படும், கரூர், 'ஆர்த்தி ஏ டிரேட்'உரிமையாளர்கள் சாமிநாதன்,

முன்னாள், ஜெ., பேரவை நிர்வாகி, மனோகரன், 'ஆஸி டெக்ஸ்' உரிமையாளர்கள்,தியாகராஜன், செல்வராஜ் ஆகியோரின் அலுவலகம், வீடுகளில் சோதனை நடந்தது.

மேலும், அ.தி.மு.க., முன்னாள் நகர அவைத் தலைவர், சரவணன், சாயப்பட்டறை உரிமையாளர், சுப்பிரமணியன்,'கொங்கு மெஸ்' உரிமையாளர், சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள்வீடுகள், நிதி நிறுவனங்கள், அலுவலகங்களில்மூன்றாவது நாளாக நேற்று சோதனை நடந்தது.

நேற்று மாலை, ஐந்து இடங்களில் சோதனை தொடர்ந்தது. சோதனையில், 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது.ஆவணங்கள் ஆய்வு இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு தலைமையக அதிகாரிகள் கூறியதாவது:

கரூரில், ஆகஸ்டில் ஏழு நிதி நிறுவனங்களில், வருமான வரி சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, மூன்று நாட்களாக, ஒன்பது நிதி நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்
களுக்கு சொந்தமான அலுவலகங்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது.இதில், சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான, வருமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ரொக்கமாக, 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

வரித்துறை சோதனைக்குள்ளான பலர்,

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களில், வங்கிகளில் போலி கணக்கு துவங்கி, பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு உள்ளனர். அவ்வாறு, 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் சேமிப்பாக, 10 கோடி ரூபாய் இருந்தது. இந்த கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

பினாமிகள் யார் யார்; அதன் பின்னணியில் உள்ளோர் குறித்தும், விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீது, 'பினாமி' பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். சில நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. சோதனை இன்னும் நிறைவடையவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிக்கிய ஆடிட்டர்!

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்தங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதும், பினாமிகள் பெயரில் பணம் பதுக்கி அட்டகாசம் செய்தது தொடர்பாகவும் வரித்துறையினர், 'கிடுக்கப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் வரி ஏய்ப்புக்கு, ஆடிட்டர் ஒருவர் உதவியது தெரிய வந்துள்ளது. இவர் மீதும், நடவடிக்கை பாய உள்ளது.

'வருமான வரித்துறை சட்டம், 278ன்படி, வருமான வரி ஏய்ப்புக்கு உதவும் ஆடிட்டர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஏழு ஆண்டுகள் வரை, சிறைத்தண்டனை அளிக்க, சட்டத்தில் வழி உண்டு. அவரது, அங்கீகாரம் ரத்தாகவும் வாய்ப்புள்ளது' என, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025