'மாஜி' செந்தில் பாலாஜிக்கு இறுகுகிறது வளையம்
பதிவு செய்த நாள்23செப்
2017
22:36
கரூர், கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில், ஏராளமான ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளன; இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடக்க உள்ளது.
கடந்த, 21 முதல், கரூரில், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர், செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானோர், வருமானவரித்துறை சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்களின், ஜவுளி நிறுவனம், நிதி நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை, 10:00 மணி முதல், ஆர்த்தி ஏ டிரேடர்ஸ் உள்ளிட்ட பல இடங்களில், மூன்றாவது நாளாக சோதனை நடந்தது. கடந்த, மூன்று நாட்களாக நடந்த சோதனையில், 60 கோடி ரூபாய் அளவுக்கு, வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிய
வந்துள்ளது. மேலும், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், கரூர் அருகே, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஜவுளி நிறுவனம், அதே பகுதியில் உள்ள, அவருடைய தம்பி, அசோக்குமார் வீடு மற்றும் உதவியாளர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை.
செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட்டபோது, பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படும் தியாகராஜன், மருத்துவக் கல்லுாரிக்கு நிலம் தானமாக
வழங்கிய, 'நவ்ரங் டையிங்' உரிமையாளர், சுப்பிரமணி, அரசு கான்ட்ரக்டர், சங்கர் ஆனந்த், நண்பர் சரவணன் ஆகியோரிடம், வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.குறிப்பாக, அரவக்குறிச்சி தேர்தலின் போது, செலவு செய்யப்பட்ட தொகை குறித்த விபரத்தை, செந்தில் பாலாஜியின் நண்பர்களிடம், வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது கிடைத்த தகவல்கள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அடுத்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
தினகரன் அணி நிர்வாகியின் நிறுவனத்துக்கு, 'சீல்'
கரூரில், தினகரன் அணியின் நிர்வாகி சரவணனின், நிதி நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரும், தினகரன் அணியின், கரூர் மாவட்ட துணை செயலாளருமாகிய சரவணன் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தினர்.
அதை தொடர்ந்து, கரூர்-திண்டுக்கல் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை துணை இயக்குநர் சந்திர மவுலி தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிகாலை, 'சீல்' வைத்தனர். இந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

No comments:
Post a Comment