Sunday, September 24, 2017

ஜெ., இட்லி சாப்பிடவில்லை; பொய் சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

Published : 23 Sep 2017 12:23 IST

BHARATHI PARASURAMAN_50119




திண்டுக்கல் சீனிவாசன் (இடது); டிடிவி தினகரன் (வலது)

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மதுரை பழங்காநத்தத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத் தெரியவில்லை, அனைத்தும் விசாரணைக் கமிஷனில் தெரியவரும்.

அதிமுகவை அழிப்பதற்காக டிடிவி தினகரன் திமுகவுடன் சேர்ந்துவிட்டார். தகுதிநீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் திமுக டெபாசிட் இழந்துவிடும்" எனப் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றுடன் (செப்.22) ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அனைவருமே மக்களிடம் பொய் உரைத்தனரோ என்ற கேள்வியை மக்கள் மத்தியில் மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இன்று (சனிக்கிழமை) குடகில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இன்று, சசிகலா மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மாறி மாறி பேசும் அவரை நாங்கள் கிண்டல் செய்யத்தேவையில்லை. சமூக வலைதளங்களில் மக்களே கிண்டல் செய்வர்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025