Thursday, September 13, 2018

மாநில செய்திகள்

“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது” குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு




“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க கூடாது”, என 1991-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பதிவு: செப்டம்பர் 13, 2018 05:15 AM

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வெடிப்பில் பலியானார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (அப்போது பணியாற்றியவர்) அனுசியா டெய்சியும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். தற்போது அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (விழுப்புரம்) பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு, அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அனுசியா டெய்சி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். இந்த தினத்தை மறக்க நான் ஒவ்வொரு நாளும் முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டே கனத்த இதயத்துடன் என் காவல் பணியை நிறைவு செய்துவிட்டேன். இருந்தாலும் வேதனையை சுமந்தபடி என் சோகத்தை பகிர்கிறேன்.

அன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்களை கூட்டத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீசார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தேன்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ (பதற்றம் வேண்டாம்) என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.

சுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். என் உழைப்பு, என் நம்பிக்கை எனக்கு பதவி உயர்வை தந்தது. நாகையில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 வருடம் தலைமையக பணி, ஒரு வருடம் விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரணை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றேன்.

தற்போது நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு துடிப்பதையும், அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது. இவர் களை விடுதலை செய்ய நியாயமான காரணத்தை யாராவது சொல்லமுடியுமா? ‘இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார்கள், பாவம்’, என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணங்களாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்?

இவர்களை விடுவிக்கட்டும், ஆனால் இவர்களால் செத்துமடிந்த அத்தனை பேருக்கும் உயிர் கொடுத்து எழுப்பிட முடியுமா? என் கை திரும்ப எனக்கு கிடைக்குமா? இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா? ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா? இதற்கு மக்கள் துணைபோகிறார்களா? குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.

தற்போது அரசியலுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் காயத்தின் சுவட்டை இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் என் போன்றோரின் கண்ணீருக்கு யாருமே பதில் சொல்லிவிட முடியாது. குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும். செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.

இதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுபட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...