Friday, October 5, 2018

20.5 செ.மீ.,!  7ல் பெய்யுமாம் மழை










சென்னை : 'அரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில், வரும், 7ம் தேதி, 20.5 செ.மீ., அளவுக்கு, பேய் மழை பெய்யும்' என, இந்திய வானிலை மையம், 'ரெட் அலர்ட்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.






அரபிக் கடலில், தென் மேற்கு பகுதியில் இருந்து வீசும், ஈரப்பதம் மிக்க காற்று, அதிக வலுவடைந்துள்ளது. அதனால், கடலில் இன்று இரவு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில், மிக கன மழை பெய்ய, அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில், ஐந்து நாட்களாக கன மழை கொட்டி வரும் நிலையில், இன்னும் கன மழை தொடரும் என அறிவித்துள்ளதால், அங்கு, மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு மழை பெய்யும்?

* இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இன்று மட்டும், அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவை ஒட்டிய, தமிழக பகுதிகளில், பெரும்பாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்

* வரும், 7ம் தேதி, தமிழகம் மற்றும் கேரளாவில், மிக கன மழை முதல், மிக அதிக கன மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகள்,


கர்நாடகாவை ஒட்டிய தமிழக பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில், கன மழை பெய்யும்.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி

* வரும், 8ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோர பகுதிகள், கடலோரத்தை ஒட்டிய உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி என, அனைத்து மாவட்டங்களிலும், சில இடங்களில், மிக கன மழை பெய்யும்.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், நாகை, கடலுார், விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரி

* வரும், 9ம் தேதி, தமிழக உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு கடலோர மத்திய மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை.

இதில் குறிப்பிடப்படாத பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை, திடீர் மழை பெய்யலாம்.

வானிலை மைய கணக்கு :

7 - 11 செ.மீ., வரை: கன மழை
12 - 20 செ.மீ., வரை: மிக கன மழை
21 செ.மீ., மற்றும் அதற்கு மேல்: மிக அதிக கன மழை

வரும், 7, 8ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில், மிக அதிக கன மழை பெய்யும்.
- சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலோரத்தில் கவனம்!
இன்று முதல், 7ம் தேதி வரை, பெரும்பான்மையான இடங்களில், மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கன மழை பெய்யும். அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் வலுப்பெற்று, ஓமன் நாட்டில், கரையை நோக்கி நகரும். மீனவர்கள், குமரி கடல், தெற்கு கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு, இன்று முதல், 8ம் தேதி வரை செல்ல வேண்டாம். கடலுக்குள் இருப்பவர்கள், உடனடியாக, கரைக்கு திரும்பி விட வேண்டும். சென்னை மற்றும் புறநகரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற நாட்களில், திடீர் மழைக்கு தான் அதிக வாய்ப்பு.
-எஸ்.பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்

பீதி வேண்டாம்
வரும், 7ம் தேதியை பற்றி கவலைப்பட வேண்டாம். 7ம் தேதி, எப்படி மழை பெய்கிறது என்பதை, நீங்களே தெரிந்து கொள்வீர்கள். யாரும் பீதியடைய வேண்டாம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு மட்டுமே, இந்திய வானிலை ஆய்வு மையம், மிக அதிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ல், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கேரளாவில், மிக அதிக கன மழை இருக்கும்.
-ஆர்.பிரதீப் ஜான், 'தமிழ்நாடு வெதர்மேன்'

மாவட்டங்களில் உஷார் நிலை!
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில், நீச்சல் தெரிந்த, தன்னார்வம் உடைய இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதேபோல், பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். இவர்கள், மழை நீர் தேங்கினால், உடனடியாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர். பயிற்சி பெற்ற இளைஞர்கள், 30 ஆயிரத்து, 759 இளைஞர்கள் உள்ளனர். அதேபோல், கடலோர மாவட்டங்களில், காவல் துறையைச் சேர்ந்த, 60 - 80 பேர் கொண்ட படையை, தயார் செய்துள்ளோம். மற்ற மாவட்டங்களில், 40 - 50 பேரை தேர்வு செய்து, பேரிடர் மீட்பு பயிற்சி அளித்துள்ளோம். 1,275 காவலர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். மழை நீர் தேங்காமல் இருக்க, பாலங்களில் தடுப்புகளை அகற்றி உள்ளோம். 68 சிறு பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. 7,250 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழை நீரை சேகரிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
-கே.சத்யகோபால், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக அரசு

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...