Sunday, October 14, 2018

மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்




ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? என்று கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 14, 2018 05:15 AM

கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூல விவரம் வருமாறு:-

சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பணம் எடுத்துச்செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த ரெயிலில் கொள்ளையை அரங்கேற்ற நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தோம். இதற்காக சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தோம். இதற்காக சேலம் ரெயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பல நாட்கள் வேவு பார்த்து வந்தோம்.


சேலத்தில் இருந்து ரெயில் எப்போது புறப்படுகிறது? எந்தெந்த நிலையங்களில் நிற்கிறது? எவ்வளவு நேரம் நிற்கிறது? எப்போது சென்னை வருகிறது? பெரிய பெரிய பார்சல்களை ரெயில்வே சரக்கு போக்குவரத்து அதிகாரிகள் எப்படி கையாளுகிறார்கள்? இதையெல்லாம் நீண்ட நாட்களாக கண்காணித்தோம்.

5 பேர் பயணம்

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே டீ குடித்துக்கொண்டும், நாளிதழ் படித்துக்கொண்டும் கண்காணித்தோம்.

இந்தநிலையில் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடிக்கணக்கான அளவில் பணம் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்படுவதை அறிந்தோம். எனவே முன்கூட்டியே எங்கள் தலைவன் மோஹர்சிங் தலைமையில் 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் ரெயிலின் மேற்கூரைக்கு செல்லும்வகையில் பெட்டியின் படிக்கட்டு பகுதியிலேயே தயாராக இருந்தோம்.

ரெயிலின் மேற்கூரைக்கு சென்றோம்

ரெயில் புறப்பட்டதுமே திட்டத்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்குள் கூறிக்கொண்டோம். நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து மெதுவாக ரெயிலின் மேற்கூரைக்கு ஒவ்வொருவராக சென்றோம். இரவு வேளை என்பதாலும், ஏற்கனவே நோட்டமிட்டபடி சுரங்கப்பாதைகளோ, மரக்கிளைகளோ இல்லாத காரணத்தாலும், மின் மயமாக்கப்படாத பாதை என்பதாலும் எளிதாக ரெயிலின் மேற்கூரைக்கு சென்றோம்.

ஒருகட்டத்தில் நாங்கள் 5 பேரும் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் கூட்டாக அமர்ந்திருந்தோம்.

இந்தநிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சின்ன சேலம் கடந்து விருத்தாச்சலம் நோக்கி சென்றது. அப்போது தான் நாங்கள் திட்டமிட்டிருந்த படி மேற்கூரையில் துளை போட்டோம். எந்த சூழ்நிலையிலும் கண்காணிப்பு போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம். இதனால் ரெயில் என்ஜின் ஒலி எழுப்பும் சமயத்தில் குறிவைத்து வேகவேகமாக மேற்கூரையில் துளைபோட்டோம். ஓரளவு துளை போட்டதும் எங்களில் 2 பேர் அந்த துளையின்வழியாக ரெயில் பெட்டிக்குள் இறங்கினார்கள்.

பணக்கட்டுகள்

அந்த 2 பேர் தான் ரெயில் பெட்டிக்குள் இருந்த மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்தனர். பின்னர் எடுத்த பணக்கட்டுகளை பத்திரமாக லுங்கியில் சுற்றி வைத்து கொண்டனர்.

தேவையான பணக்கட்டுகளை எடுத்த பின்னர் அவர்கள் 2 பேரும் வேகவேகமாக மேலேறி விட்டனர். நாங்களும் முன்பு போல ஜன்னல் கம்பிகள் வழியாக மெதுவாக கீழே இறங்கி, ரெயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம். ரெயில் விருத்தாசலம் வந்தபோது, அங்கே தண்டவாளம் அருகே காத்திருந்த எங்கள் கூட்டாளிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்.

ஏமாற்றம்

பெரும் சிரமங்களுக்கு இடையே துல்லியமாக திட்டமிட்டு கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தை நினைத்து சந்தோஷப்பட்டோம். ஆனால் நாங்கள் கொள்ளையடித்தது செல்லாத, பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டோம்.

இருந்தாலும் எப்படியாவது இந்த பணத்தை மாற்றிவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தோம். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி சந்தோஷமாக செலவு செய்துவந்தோம். இந்தநிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எங்களை கொஞ்சம் பதற்றம் அடைய செய்தது. இந்த பணத்தை வங்கிகளுக்கு கொண்டு சென்றால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமே என்று அச்சப்பட்டோம். நாங்கள் கொள்ளையை அரங்கேற்றிய நாளில் இருந்து அவ்வப்போது போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் எங்களுக்கு கிலியை ஏற்படுத்தினாலும், மாட்டிவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சுற்றி வந்தோம். ஆனால் எங்களின் கெட்ட நேரம் நாங்கள் சிக்கிவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...