Saturday, October 13, 2018

'அடக்க நினைத்தால்  திமிறும் காளையாக எழுவேன்'

சேலம் : ''அடக்க நினைத்தால், திமிறும் காளையாக எழுவேன்,'' என கமல் பேசினார்.  dinamalar 13.10.2018




பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று, சேலம் வந்த, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், திறந்தவேனில் நின்றபடி மக்களை சந்தித்து பேசியதாவது: உங்களை, மேடையில் சந்திக்க நினைத்தேன். அதற்கு தடை விதித்தனர். அடக்க நினைத்தால் திமிறும் காளையாக எழுவேன். அதனால், சிலர் பதற்றம் அடைவர். மேல்மட்ட நிர்வாகிகளை, மேடையில் அமரவைக்க ஆசைப்பட்டேன்; முடியவில்லை. எங்களுக்கும், ஒரு காலம் வரும்.

தேர்தலுக்கு, உங்களை சந்திக்க வரவில்லை. மக்கள் பிரச்னையை தெரிந்து கொள்ள வந்தேன். இப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் இல்லை.


மேம்பால விளக்கு எரிவதில்லை. சந்தையில் போதிய வசதியில்லை. இதை, நாங்கள் கேட்போம். எங்களுக்கு அனுமதி மறுக்க மறுக்க, கூட்டம் பெருகும். மறுத்துக்கொண்டே இருங்கள். எனக்கு, கடமை காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ஒரு தொண்டரை அழைத்த கமல், கட்சி கொடியை ஏற்ற வைத்தார்.

பேராசை :

* நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லுாரியில், சிவாஜிகணேசனின், 90-வது பிறந்தநாள் விழாவில் நுாலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என்கின்றனர். அவர்களை விட, அரசியல் பேச யாருக்கு தகுதி உள்ளது. நான் தொண்டர்களை தேடி வரவில்லை. நாளைய தலைவர்களை தேடி வந்துள்ளேன். எனக்கு பேராசை என்கின்றனர். ஆமாம், என் தமிழ் மக்கள் நன்கு வாழ வேண்டும் என்று எனக்கு பேராசைதான்.

யார் பெயரால், நுாலகம் தொடங்கப்பட்டதோ, அவர், இரண்டாம் வகுப்பு படித்தவர். திறந்து வைத்த நான், எட்டாம் வகுப்பு படித்தவன். ஓட்டுப்பதிவு நியாமற்ற முறையில் நடக்கிறதா, அங்கு நீங்கள் ஒன்று சேருங்கள்.

அங்குள்ள ரவுடிகள் கூட்டம் ஓடி விடும். ஐ.ஏ.எஸ்., வக்கீல்கள், டாக்டர்கள் என கற்றவர்கள் ஏராளமானோர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கிராமங்களுக்கு முக்கியத்துவம்:

* மல்லசமுத்திரத்தில், அவர் பேசியதாவது: கிராமியமே தேசியம்; எட்டு கிராமங்களை தத்தெடுக்க உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்களைவிட அதிகமாக, அக்கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளேன். நான் இங்கு வந்த நோக்கம் ஓட்டு சேகரிப்பதற்காக அல்ல. மக்களை சந்தித்து, மாற்றத்தை உருவாக்கவே வந்தேன். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026