Friday, October 5, 2018


ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன்

Updated : அக் 04, 2018 15:29 | Added : அக் 04, 2018 15:10 |  dinamalar




சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 7 ம் தேதி அதிதீவிரமான கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான, 'தமிழ்நாடு வெதர்மேன்' தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

204 மி.மீ., மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 ம் தேதி அதி தீவிர கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் மழை அளவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்; மிக அதி தீவிர கனமழையாக, 204.5 மி.மீ., அளவுக்கு; 75 சதவீதம் கண்டிப்பாக மழை உண்டு என்ற நிலையில் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 204.5 மி.மீ., மழை பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், சென்னையில் மிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அதற்குள் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால்,அதற்கான சாத்தியகூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில், 10 மழை அளவீடு மையங்கள் இருந்தால், அந்த மாவட்டம் முழுவதும் 204.5 மி.மீ., மழை பெய்யுமா என பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தால் சமாளித்து விடலாம்.

தமிழகத்தில் எந்த பகுதியில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதை கூறாமல், பொதுவாக ரெட் அலர்ட் விடுத்தால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் குறைந்த அளவு மழை பெய்தால் அங்கு என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்.

வேகமாக பரவும் வதந்தி

ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய தமிழக பகுதிகளான நீலகிரி, கோவை (வால்பாறை) தேனி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரியில், தினமும் 200 மி.மீ., அளவுக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சோலையாறு அணை பகுதியில், 24 மணி நேரத்தில் 400 மி.மீ., மழை பெய்தது. அப்போது அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஏன் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன?

தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால், அது கிழக்கில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதன் காரணமாக மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கன மழை பெய்யும்.

கடந்த, 2009ம் ஆண்டு நீலகிரியின் கேத்தி பகுதியில், ஒரே நாளில் 820 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக குன்னூர் பகுதியில் கன மழை பெய்தது. ஆனால், தற்போது உருவாக உள்ள புயல் சின்னம், 2009ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக உள்ளது. அது ஓமன் நாட்டை நோக்கி நகருவதால், கேரளா மற்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும், தமிழகத்தின் மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும்.

தமிழக முழுவதும் எச்சரிக்கை தேவையில்லை. குறிப்பாக சென்னைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலர்ட் சென்னைக்கு உரியது அல்ல. தமிழகத்தின் மலை பகுதிகளுக்கு உரியது. எனவே, முன்பு டிச., 1ம் தேதி போல் பேய் மழை பெய்யும் என பயப்பட வேண்டாம். மலை பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி அல்லது கன்னியாகுமரி அல்லது வால்பாறை அல்லது பெரியாறு பகுதியில் பெய்தது போல் இருக்காது. சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் என்பது வேறு விஷயம். ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பயப்பட வேண்டாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...