Friday, February 6, 2015

எல்இடி பல்பு பயன்படுத்தினால் எவ்வளவு பணம் மிச்சம்?



க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா வரிசையில் மோடி அறிவித்திருக்கும் அடுத்தத் திட்டம்தான் எல்இடி பல்புகளை வீட்டிலும், தெருக்களிலும் பயன்படுத்தும் திட்டம். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள தெருவிளக்குகளில் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 5 பில்லியன் kWh மின்சாரமும், 3,000 கோடி ரூபாயும் மிச்சமாகும் என்கிறது மத்திய அரசாங்கம். ஓர் அரசாங்கத்துக்கே இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்றால், பொதுமக்களுக்கு இதனால் எவ்வளவு பணம் மிச்சமாகும்? இந்த எல்இடி பல்புகள் மின்சாரம் அதிக அளவில் செலவாவதைக் கட்டுப்படுத்துமா? இதன் வெளிச்சம் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா? என்பது போன்ற விஷயங்களுக்குப் பதில் தேடினோம்.

ஏன் எல்இடி பல்பு?

வீட்டின் வெளிச்சத்துக்கு பெரிதும் பயன்பட்டுவந்த டங்ஸ்டன் இழை பல்புகள் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. அத்துடன் அதிக வெப்பத்தை வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பாதிப்புத் தருவதாக மாறியதால், டியூப் லைட்டு களையும், சிஎஃப்எல் எனப்படும் ஃப்ளோரசன்ட் பல்புகளையும் பயன்படுத்த தொடங்கினர். ஆனால், தற்போது அரசு பயன்படுத்த நினைக்கும் இந்த எல்இடி பல்புகள் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக வெப்பத்தை உமிழாமல், நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாக இருக்கும்.

எல்இடி பல்புகளின் சிறப்பு!

எல்இடி பல்புகள் ஏன் மற்ற பல்புகளைவிடச் சிறப்பானவை என்பது குறித்து எலெக்ட்ரிக்கல் துறை பேராசிரியர்கள் சிலரிடம் கேட்டோம்.

‘‘டங்க்ஸ்டன் இழை பல்புகள் அதிக வெப்பத்தை உமிழும் என்பதால்தான் குறைந்த வெப்பத்தை உமிழக்கூடிய, அதேநேரத்தில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்த துவங்கினர். தற்போது அதைவிடக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக வெளிச்சத்தைத் தரக்கூடியவையாக எல்இடி பல்புகள் இருக்கின்றன. இதன் பயன்பாட்டுக் காலம் என்பது நாம் பயன்படுத்தும் டியூப் லைட்டுகளைவிட 15 மடங்கும், சிஎஃப்எல் பல்புகளைவிட மூன்று மடங்கும் அதிகம்.

பொதுவாக, பல்புகளின் ஆயுட்காலமானது, நாம் அதை ஆன் செய்து ஆஃப் செய்வதைப் பொறுத்துதான் இருக்கும். அப்படி பார்க்கும்போது, எல்இடி பல்புகள் மற்ற பல்புகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமான நாட்கள் உழைக்கும்.

இது குறைவான மின்சாரத்தைத்தான் பயன்படுத்தும். 5 வாட்ஸ் முதல் இந்த பல்புகள் கிடைக்கின்றன. இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதன் வாழ்நாள், எடுத்துக்கொள்ளக்கூடிய மின்சாரம் போன்ற விஷயங்களால், இந்த பல்புகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்’’ என்றனர்.


விலை!

இந்த எல்இடி பல்புகளின் விலை சாதாரண பல்புகளைவிட 10 மடங்கு அதிகமாகவும், சிஎஃப்எல் பல்புகளைவிட 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

சாதாரண டியூப்லைட்டுகள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது என கணக்கிட்டால், சாதாரண டியூப்லைட் சுமார் 1 வருடம் வரை பயனளிக்கும். சிஎஃப்எல் பல்புகள் சுமார் 4 - 5 வருடங்கள் வரை பயனளிக்கிறது. ஆனால், எல்இடி பல்புகளோ 13 - 15 வருடங்கள் பயன்படுகின்றன. இதனால் அடிக்கடி பல்பை மாற்றும் சூழல் உருவாவதில்லை.

எவ்வளவு மிச்சமாகும்?

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்கிற கணக்கில் 15 ஆண்டுகளுக்கு டியூப் லைட்டைப் பயன்படுத்தும்போது, அதற்கு செலவாகும் மின்சாரமானது ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் மின்சாரக் கட்டணம் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு டியூப்லைட்டின் ஆயுட்காலம் என்பது ஒரு வருடம்தான். எனவே, 15 ஆண்டுகளுக்கு 15 டியூப் லைட்டுகளை வாங்க வேண்டும். பணவீக்கம் 7 சதவிகிதம் எனக் கொண்டால், 15 வருடங்களில் பயன்படுத்தும் டியூப் லைட்டுக்கான விலை மட்டும் 1,522 ரூபாயாக இருக்கும்.



இதற்கான மின்சாரக் கட்டணம் (இதனை மாட்ட உதவும் உபகரணக் கட்டணம் + டியூப்லைட் விலை சேர்த்து) 15 வருடங்களில் டியூப்லைட் பயன்படுத்த ஆகும் செலவு 7,672 ரூபாயாக இருக்கும்.

இதேமுறையில் சிஎஃப்எல் பல்புக்கான செலவானது 3,480 ரூபாயாக இருக்கும். ஆனால், 15 வருடம் பயன்படும் எல்இடி பல்புக்கான செலவானது வெறும் 1,602 ரூபாய்தான். நீண்ட ஆயுட்காலம், குறைவான மின்சாரம், அதிக வெளிச்சம் ஆகிய விஷயங்களைக் கணக்கில் கொண்டால், 15 ஆண்டுகளில் எல்இடி பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 6,000 ரூபாய் மிச்சமாகும். ஆனால், சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 1,800 ரூபாய்தான் மிச்சமாகும்.

தனியொரு குடும்பமே இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றால், ஒரு நாடு முழுக்க எவ்வளவு பணம் மிச்சமாகும் என்று யோசியுங்கள். மத்திய அரசு டெல்லியில் மக்களுக்கு ரூ.130 என்ற சலுகை விலையில் எல்இடி பல்புகளை வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாநில அரசு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அனைத்து அரசு அலுவலகங்களையும் எல்இடி மயமாக்குவதன் மூலமும் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறக்கூடும்.

நீங்களும் உங்கள் வீடுகளில் இருக்கும் பழைய பல்புகளுக்கு பதிலாக, வாய்ப்பு கிடைக்கும்போது எல்இடி பல்புகளுக்கு மாறிக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...