Monday, December 28, 2015

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

Dinamani

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணி செய்தவர்களும், 2016 மே 31-ஆம் தேதியோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்வோரையும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இந்த அதிகாரிகளை அறிவதற்காக ஆணையம் வழங்கும் கட்-ஆஃப் தேதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இதுதொடர்பாக உடனடியாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும். அதே மாவட்டங்களில் பதவி உயர்வு பெற்று பணியாற்றிக் கொண்டிருந்தாலும், 3 ஆண்டு காலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலத் தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த அறிவுரைகள் பொருந்தாது.
விதிவிலக்கு யாருக்கு? குறிப்பிட்ட பகுதியை நன்கு அறிந்த பகுதி அலுவலர்கள், அங்கு பணியாற்றினால்தான் தேர்தல் பணிகளைச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அவர்கள் பணியாற்றலாம்.
யார், யாருக்கு பொருந்தும்?: மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணைத் தேர்தல் அதிகாரிகள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்ற அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
போலீஸ் அதிகாரிகள்: காவல் துறையில் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், ஆயுதப் படை அணித் தலைவர்கள், சிறப்பு எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், உதவிக் கோட்ட அதிகாரிகள், ஆய்வாளர்கள் அல்லது அதற்கு இணையான அதிகாரிகளுக்கும் பொருந்தும். கணினிமயமாக்கல், சிறப்புப் பிரிவு, பயிற்சிப் பிரிவு போன்றவற்றில் பணியாற்றுவோருக்கு இந்த உத்தரவு பொருந்தும். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய உதவி ஆய்வாளர்களை சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்தே பணியிட மாற்றம் செய்ய வேண்டும். சொந்த தொகுதியிலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
பணியில் யாரை ஈடுபடுத்தக் கூடாது? கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள், கவனக்குறைவாக இருந்தவர்களுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது. குற்ற வழக்கு நிலுவையில் இருப்போரையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
இடமாற்ற நகல் அனுப்ப வேண்டும்: இடமாறுதல் செய்யப்படுவோர் விடுப்பில் சென்றாலோ அல்லது மாவட்டங்களை விட்டு வெளியேற மறுத்தாலோ புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணிகளில் மறைமுகமாகத் தொடர்புள்ள அதிகாரிகளும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவதாக அடிப்படை முகாந்திரத்துடன் புகார்கள் வந்தால் அந்தப் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
இடமாற்றம் செய்யப்பட்டோருக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படும்போது, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசிக்க வேண்டும். இடமாற்றல் உத்தரவின் நகல்கள் தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோரை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...