Thursday, December 24, 2015

இவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு

logo


மிகவும் சர்ச்சைக்குள்ளாகி இருந்த சிறார் நீதிசட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறிவிட்டது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தது. இந்தியாவில் எல்லா குற்றங்களும், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குற்றம்செய்திருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 18 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு குற்றத்தை செய்திருந்தால், அவர்களை மற்ற தண்டனை சட்டத்தின்கீழ் விசாரிக்காமல், இப்போதுள்ள சிறார் நீதி சட்டத்தின்கீழ் விசாரித்து, எந்த குற்றம் என்றாலும் அதிகபட்சம் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் படுகிறது. அந்த தண்டனை காலத்தையும் அவர்கள் சிறையில் கழிக்கவேண்டியது இல்லை. சிறார் சீர்திருத்த இல்லங்களில் வைத்து, திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இப்போது இந்த சட்டத்துக்கான திருத்தம் ராஜ்யசபையிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தவுடன் நிறைவேறிவிடும். இதன்படி, இனி 16 வயது ஆனவர்களும், கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களை செய்திருந்தால், அவர்கள் மற்றவர்களைப்போல தண்டனை பெறுவார்கள் என்பதுதான் இந்த புதிய சட்டத்தின் சாராம்சம். அதேநேரம், இவர்களுக்கு ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ விதிக்கப்படமாட்டாது. இந்த சட்டம் நிறைவேறிய பிறகு, இனி எதிர்த்து பயனில்லை என்றாலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்திலேயே மத்திய உள்துறை ராஜாங்கமந்திரி ஹரிபாய் பராதிபாய் சவுத்திரி பேசும்போது, ‘கடந்த ஆண்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறார்களின் கணக்கை பார்த்தால், 55.6 சதவீத சிறார்கள் ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அடுத்த 22.4 சதவீத சிறார்கள் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்கள். அடுத்த 14.3 சதவீத சிறார்களை எடுத்தால், அவர்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு ஏன்? நிர்பயா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். குற்றம் நடந்த தினத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடியவன், பிளாட்பாரத்தில் பசியும், பட்டினியுமாக அலைந்து இருக்கிறான். அந்த ஒரு சம்பவத்துக்கு முன்பு எந்த குற்றமும் செய்யாதவன். நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாடு மேய்க்கச் சென்ற 21 வயது திருமணமான பெண்ணை கற்பழித்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும், 16 வயது ஏழை சிறுவன். ஆக, வறுமையால் வாடும் இளம் சிறார்களுக்கு இத்தகைய குற்றங்கள் பெரிதாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டிய அரசாங்கங்கள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும், படிப்பறிவு இல்லாத ஏழை சிறார்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு, உணவு வழங்குவதற்கு, கல்வி புகட்டுவதற்கு உண்டான வழிகளை காணவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசங்களையும், மானியங்களையும் வழங்கும் தீவிரத்தைவிட, இதுபோன்றவர்களின் வாழ்க்கை பாதுகாப்பில் காட்டினால்போதும், குற்றங்களை குறைத்துவிடலாம். வாழ்வின் கடைக்கோடியில் உள்ள இளஞ்சிறார்களுக்கு பசி அறியாத வகையில் உணவு வழங்கி, பள்ளிக்கூடங்களுக்கு கொண்டுசென்று கல்வி புகட்டி, அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை நிச்சயமாக மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....