Tuesday, December 1, 2015

தென்றல் தவழட்டுமே....

logo

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். திருமணங்கள் பகையைமுறித்து, நல்லுறவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் அது. அதுபோல, ஒரு நிலைமைக்கான அடையாளம் இப்போது தெரிகிறது. பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில் இதுவரை பாராளுமன்ற கூட்டத்தொடர்களெல்லாம் அமளியிலேயே நடந்தது. அதுவும் ராஜ்யசபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், பல மசோதாக்கள் லோக்சபையில் பா.ஜ.க.வின் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் நிறைவேற்றமுடியாமல் திரிசங்கு சொர்க்கம் நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், இப்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இது ஆக்கபூர்வமான கூட்டத்தொடராக நடக்கும் என்பதற்கான விதை ஒரு திருமண வீட்டில் விதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வியின் மகன் திருமணம் டெல்லியில் நடந்தது. அந்த திருமணத்துக்கு நரேந்திர மோடியும் வந்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் வந்திருந்தார். திருமண வீட்டில் இருவரும் யதேச்சையாக சந்தித்தபோது, பிரதமர் சரக்கு சேவைவரி உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற துணையாக இருக்க கேட்டுக்கொண்டார். மன்மோகன்சிங்கும் இதுபற்றி சோனியாகாந்தியிடமும் பேசலாமே என்று கருத்து தெரிவித்தார். இதேபோல, மற்றொரு தொடர்பும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தன் மகள் திருமணத்துக்காக ராகுல்காந்திக்கு அழைப்பு கொடுக்க சென்றபோது ஏற்பட்டது. இந்த இரு திருமணங்களும் தற்போது ஒரு புதியபாதைக்கான வாசலைத் திறந்துவிட்டன.

கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும், பிரதமர் வீட்டுக்கு ஒரு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் பல அரசியல் மாற்றங்களுக்கு தேநீர் விருந்துகள்தான் காரணமாக இருந்தன. இந்த தேநீர் விருந்து அழைப்பை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் ஏற்றுக்கொண்டு, பிரதமர் வீட்டுக்கு சென்றனர். அங்கு மனம்திறந்து இருதரப்பும் பேசினர். சரக்கு சேவைவரி மசோதா, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த மசோதா, அதில் சில மாற்றங்களை பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. சரக்கு சேவைவரி 22 சதவீதம் விதிக்கப்படவேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. இது 18 சதவீதம்தான் இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் ஒரு சதவீதம் கூடுதல்வரி விதிக்கலாம் என்று பா.ஜ.க. சொல்கிறது. அது கூடாது என்று காங்கிரஸ் சொல்கிறது. சரக்கு சேவைவரி கவுன்சிலில் மூன்றில் ஒருபங்கு இடம் மத்திய அரசாங்கத்துக்கு வேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. நான்கில் ஒருபங்கு போதும் என்று காங்கிரஸ் சொல்கிறது.

மது, புகையிலை பொருட்கள் விற்பனையை குறைந்தது 5 ஆண்டுகளுக்கு சரக்கு சேவைவரிக்குள் கொண்டுவரக்கூடாது என்று பா.ஜ.க.வும், 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவேண்டும் என்று காங்கிரசும் கூறுகிறது. இந்த தேநீர் விருந்தின்போது இருதரப்பும் பேசிய கருத்துகள் தொடர்பாக அவரவர் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சிமாநாடு முடிந்து பாரீசில் இருந்து பிரதமர் வந்தவுடன், நாளை அல்லது நாளை மறுநாள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்து இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமுடிவு காணப்படவேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். இரு கட்சிகளுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் சீர்திருத்த கட்சிகள் என்ற முறையில், இனி பாராளுமன்றத்தில் நல்லுறவு, நல்லிணக்கம் தழைக்கட்டும். மக்களுக்கு சேவை என்ற குறிக்கோளை நோக்கி இந்த குளிர்கால கூட்டத்தொடரில் வெப்பம் வேண்டாம், குளுமை நிலவட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...