Thursday, December 10, 2015

கூடங்குளம் தாமதம் ஏன்?

daily thanthi



தமிழ்நாடு மிகவேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் முனைவோர் எல்லாம் விரும்பி முதலீடு செய்ய ஓடோடிவரும் மாநிலமாகத் திகழ்வதால்தான், இந்தியாவின் டெட்ராயிட் என்று அழைக்கப்படுகிறது. எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது மின்சார உற்பத்தியில்தான் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா வசதிகளையும் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டுக்கு ஆண்டு மின்சாரத்தின் தேவை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மின்சாரத்தேவையை பூர்த்திசெய்ய நீர்மின்சாரம் அதாவது புனல் மின்சார உற்பத்தி வாய்ப்பை ஏற்கனவே முழுமையாக பயன்படுத்திவிட்டோம். அனல் மின்சாரம் அதாவது நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான மின்சார நிலையங்கள் அமைக்கும் வாய்ப்பும் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. இது சுற்றுப்புற சூழ்நிலையைக்கெடுக்கிறது, மாசுபடுத்துகிறது என்ற குறைபாடு உலகம் முழுவதும் இருக்கிறது. நிலக்கரி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. வெளிமாநிலங்களில் இருந்துதான் விலைக்கு வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவுக்கே வெளிநாடுகளில் இருந்துதான் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மட்டும் 500 கோடி டாலர் அரசின் அன்னிய செலாவணி செலவாகிறது என்ற குறை இருக்கிறது.

இந்த நிலையில், ஆபத்பாந்தவனாக அணுமின் நிலையத்தையே அனைவரும் கருதுகிறார்கள். நம் நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் தோரீயத்தை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்க முடியும் என்பதால், நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதலில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணுஉலை அமைக்கவும், தொடர்ந்து மற்றொரு ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது, அதிக செலவு என்பதோடு மட்டுமல்லாமல், சிறிய கசிவு ஏற்பட்டாலும், கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படும், கடல்வளம் பாதித்துவிடும் என்று பல எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தாலும், அப்துல்கலாம் போன்றவர்கள் அப்படியெல்லாம் நடக்காது என்று சொன்ன உறுதிமொழிகள், அரசாங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்து, அதன்பலனாக ரூ.18 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. முதல் யூனிட்டுக்கான கட்டிட பணிகள் 2002–ம் ஆண்டு மார்ச் மாதம் 31–ந் தேதி தொடங்கியது. 12 ஆண்டு களுக்குப்பிறகு 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந் தேதி உற்பத்தி தொடங்கியது. இந்த ஆயிரம் மெகாவாட்டில் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட்தான் கிடைக்கும் என்றாலும் சரி பரவாயில்லை என்று மக்கள் நினைத்தனர். தொடங்கிய நாளில் இருந்தே சிறு சிறு கோளாறுகள் ஏற்பட்டன. ஆனாலும், மக்கள் தொடக்கத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். ஆனால், தொடங்கி 5 மாதத்திலேயே பராமரிப்புக்காக என்று சொல்லி ஜூன் மாதத்தில் மூடிவிட்டார்கள். 90 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம் என்று உறுதிஅளிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் ஆகியும் இன்னும் உற்பத்தியைத் தொடங்கவில்லை.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் மாதம் 7–ந் தேதியே உடனடியாக உற்பத்தியைத் தொடங்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். முழுக்க முழுக்க ரஷ்ய நாட்டு இயந்திரங்கள், எரிபொருளும் அங்கு இருந்துதான் வரும் சூழ்நிலையில், தொடக்கத்திலேயே இப்படி கோளாறு என்றால் காலப்போக்கில் என்ன ஆகுமோ?, 2–வது யூனிட் எப்போது தொடங்குமோ? என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. மத்திய அரசாங்க அணுசக்தித்துறை உடனடியாக இன்னும் தாமதம் இல்லாமல் முதல் யூனிட்டில் உற்பத்தியைத் தொடங்கிவிட்டு, 2–வது யூனிட் எப்போது முதல் செயல்படும் என்ற உறுதியான தகவலைத் தெரிவிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...