Friday, December 18, 2015

மும்பை விமான நிலையத்தில் விமான என்ஜினுக்குள் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விமானி, துணை விமானி மீது நடவடிக்கை



மும்பை,


மும்பை விமான நிலையத்தில் விமான விபத்தில் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக அந்த விமானத்தை இயக்கிய விமானி, துணை விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுனர்

மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஐதராபாத் செல்வதற்காக ஏ.ஐ. 619 என்ற விமானம் தயார் நிலையில் இருந்தது. இதையொட்டி, விமானத்தின் என்ஜின் அருகே ரவி சுப்பிரமணியன் என்ற தொழில்நுட்ப வல்லுனர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமானத்தின் சக்கரத்துடன் பொருத்தப்பட்டிருந்த ‘டோபார்’ கருவியை அகற்றுமாறு தன்னுடைய உதவியாளர் ஷிண்டேயை அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, டோபார் கருவி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘சிக்னல்’ கிடைத்து விட்டதாக துணை விமானி தெரிவித்தார். அதன் பேரில் விமானி, விமானத்தை இயக்கினார். விமானம் நகர தொடங்கியதும், என்ஜினின் சுழற்சி வேகத்தால் ஏற்பட்ட காற்றின் மூலம், தரையில் நின்றுகொண்டு இருந்த ரவிசுப்பிரமணியன் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டார்.

உடல் சிதைந்து பலி

இதில், அவர் என்ஜினுக்குள் சிக்கி திக்குமுக்காடினார். மேலும், அங்கிருந்த கூர்மையான பிளேடுகள் அவரை துண்டு, துண்டாக சிதைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார். பின்னர் சிதறிய அவரது உடல் பாகங்கள் என்ஜினின் பின்பகுதி வழியாக வெளியேறியது. பிரேத பரிசோதனை கூட செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல் சிதைந்து விட்டது.

அதிர்ஷ்டவசமாக கீழே நின்று கொண்டிருந்த அவரது உதவியாளர் ஷிண்டே உயிர் தப்பினார். சம்பவத்தை பார்த்து சுதாரித்து கொண்டு தரையில் அமர்ந்ததால், அவர் எந்தவொரு காயமும் இன்றி மயிரிழையில் தப்பினார். சிக்னல் கிடைத்ததாக தவறுதலாக கருதி என்ஜினை இயக்குமாறு துணை விமானி கூறிய தவறான தகவலால் ஏற்பட்ட விளைவே இந்த விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, விமானி, துணை விமானி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

விமான என்ஜினில் சிக்கி பலியான தொழில்நுட்ப வல்லுனர் ரவி சுப்பிரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 54 வயதான அவர், மும்பை சுன்னாப்பட்டியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு விமான போக்குவரத்து இணை மந்திரி மகேஷ் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் அஷ்வானி லோகானி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, அஷ்வானி லோகானி உடனடியாக மும்பை விரைந்தார். நேற்று மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இழப்பீடு

எங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். ரவி சுப்பிரமணியனின் மறைவையொட்டி, இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கினோம். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்கிறோம். ரவி சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா விமான அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால், இந்த தருணத்தில் அதற்கான காரணம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல.

இவ்வாறு அஷ்வானி லோகானி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...