Monday, December 21, 2015

இவ்வளவு கட்டுப்பாடு தேவையில்லை

logo

மத்திய அரசாங்கம், வருமான வரி விதிப்பை எளிமையாக்கப்போகிறோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு வருகிறது. அதுபோல, எல்லா பண பரிமாற்றங்களுக்கும் ‘பான்’ என்று கூறப்படும் ‘பெர்மனண்ட் அக்கவுண்டு நம்பர்’ அதாவது, ‘நிரந்தர கணக்கு எண்’ வைத்திருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற அத்தாட்சிகளை வைத்திருந்தால், அதனால் தொல்லை இல்லை என்ற நிலை இருந்தால்தான், மக்களுக்கும் அதைப்பெற ஆர்வம் இருக்கும். ஆனால், இப்போது ‘பான்’ வைத்திருந்தால் அனைத்து வருமானவரி தொல்லைகளுக்கும் அடையாளம் காட்டுவதுபோல நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்குமேல் எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும், பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலேயே நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு லட்ச ரூபாய் என்பது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது, சாதாரண செலவுகள் குறிப்பாக, 4 சவரன் நகை வாங்கினாலே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் போய்விடும். இப்போது புதிதாக மேலும் ஒரு உத்தரவு அமலுக்கு வருகிறது. வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் ஓட்டல் பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தாலோ, அல்லது வெளிநாட்டு பயண டிக்கெட்டு 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆனாலோ, கண்டிப்பாக ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 2 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள ரொக்கப்பரிமாற்றங்கள், 10 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள அசையா சொத்துகள் வாங்குதல் என்று கையை விட்டுச் செய்யும் எல்லா செலவுகளுக்கும் ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல, வங்கிக்கணக்குகள் தொடங்கவும் இனி ‘பான் எண்’ வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக ஒரு சாதாரண குடும்பத்தினர், தங்கள் வீட்டு திருமணத்தை ஒரு திருமண மண்டபத்தில் நடத்தும் செலவைவிட, ஒரு சிறிய ஓட்டலில் நடத்தினால் செலவு குறையும் என்ற எண்ணத்தில் ஓட்டல்களில்தான் நடத்துகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக நடத்தினாலும், 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகிவிடும். அந்த பில்லுக்கான பணத்தை கட்டும்போது, ‘பான்’ எண்ணைக் குறிப்பிட்டு அதன்பிறகு வருமான வரித்துறை நோட்டீசுக்கு பதில் அளித்துக் கொண்டு இருக்கும் நிலை எங்களுக்கு தேவையா? என்பதே சாதாரண மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. மேலும், இதுபோல ரொம்ப கசக்கிப் பிழிந்தால் வரி ஏய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது போலாகிவிடும். இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பல செலவுகளை தாராளமாக அனுமதித்தால்தான் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்கள் வளரும். அந்த வரிவிதிப்பில் அரசுக்கும் வருமானம் பெருகும். மேலும், கிராமப்புற மக்கள், படிக்காதவர்களுக்கு ‘பான்’ என்பது பற்றிய விழிப்புணர்வு இன்னமும் இல்லை. அதனால்தான் இவ்வளவு உத்தரவுகளுக்குப் பிறகும் நாட்டில் ஏறத்தாழ 21 கோடி மக்களிடம்தான் ‘பான்’ இருக்கிறது. பணப்பரிமாற்றம் என்பது அரசால் கொண்டுவரப்பட்டதுதான். செக்கோ, டெபிட் கார்டோ பயன்படுத்துவதைவிட, உடனடி பரிமாற்றத்தை எளிதாக்கும் வசதிகளைக்கொண்டது. ‘செக்’ கொடுத்தால் அது வங்கியில் ‘பாஸ்’ ஆகும் வரையில் பரிமாற்றத்தை தாமதப்படுத்தும். ஆனால், இப்போது பணம் என்ற வார்த்தையே ஒரு கெட்டவார்த்தையாக அரசு கருதுவதைப்போல, பணப்பரிமாற்றத்தை தவிர்க்கும் வகையில், இப்படி கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. பணம் சுற்றி வந்தால்தான் பொருளாதாரம் வளரும். அதை இப்படி தடுப்பு அணைபோல தடுத்து விடக் கூடாது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...