Friday, December 9, 2016

எப்படி இருக்கிறது போயஸ் கார்டன்?  அதிரும் அடுத்தடுத்த காட்சிகள் 


பரபரப்புடன் காணப்படும் போயஸ் கார்டன் இப்போது கூடுதல் பரபரப்பாகி உள்ளது. இதுவரை நடந்திராத வகையில் போர்டிகோவில் சசிகலாவின் பென்ஸ் எம்.எல் என்ற வகை கார் புதியதாக இடம்பிடித்துள்ளது.

வி.வி.ஐ.பிக்கள் வாழும் பகுதி போயஸ் கார்டன். இதில் 81, வேதா நிலையத்தில் கெடுபிடிகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வழியாக செல்பவர்களிடம் கூட பல கேள்விகளை கேட்டு துளைக்கும் காவல்துறை. அந்தளவுக்கு பல பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டதுதான் வேதாநிலையம் என்றழைக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டபிறகே யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவர்.

ஜெயலலிதாவைப் பார்க்க கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் கட்டுக்கடங்காது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையாவது நம்மீது பட்டுவிடாதா என்ற தவிப்பில் காத்திருக்கும் தொண்டர்கள் கூட்டம். காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்து தொண்டர்களையும், மக்களையும் கைகளை கூப்பியபடி மெல்லிய புன்னகையோடு ஜெயலலிதாவைப் பார்த்து புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும். ஆனால் அந்த கோஷங்கள் இப்போது போயஸ் கார்டனில் இல்லை.

கவலைதோய்ந்த முகத்துடன் கரைவேட்டிகளோடு காட்சியளிக்கும் தொண்டர்களின் கூட்டம் குறைந்துள்ளது. வேதா நிலையத்திலிருந்து என்ன தகவல் வரும், யாரெல்லாம் உள்ளே, வெளியே செல்கிறார்கள் என்ற கண்காணிப்போடு மீடியாக்களும் காத்திருக்கின்றனர்.

ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் வீடு இப்போது எப்படி இருக்கிறது என்று உள்விவரம் தெரிந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அதே பாதுகாப்பு, கெடுபிடி இப்போதும் அங்கு இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் அம்மா இன்னும் அங்கேதான் இருக்கிறார் என்ற நினைவுகளை சுமந்தபடி இருக்கின்றனர். முதல்தளத்தில் ஜெயலலிதாவின் அறை. அதன் அருகில்தான் கட்சியினரை சந்திக்கும் அறை. இப்போது காலியாக காட்சியளிக்கின்றன. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், நந்தகுமாரை தற்போது பார்க்க முடியவில்லை. அடுத்து உதவியாளரான ஹரி மட்டும் கவலையுடன் இருக்கிறார். மேலும், ஜெயலலிதாவின் கார் மட்டுமே முன்பு போர்டிகோவில் நிறுத்தப்படும். தற்போது அந்த இடத்தில் டி.என். 1111 என்ற வாகன பதிவுடன் கூடிய சசிகலாவின் பென்ஸ் எம் எல் என்ற வகை கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறைக்கு சசிகலா சென்று வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அந்த அறை பூட்டியே இருந்துள்ளது. சசிகலாவும், இளவரசியும் தங்களது அறைகளை விட்டு அவ்வளவாக வெளியே வருவதில்லையாம். ஆக மொத்தத்தில் வேதா நிலையத்தில் முழுஅமைதி நிலவுகிறது" என்றார்

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று காலை போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்களுடன் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அந்த முடிவுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அடுத்து யார் பொதுச் செயலாளர், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும், ஜெயலலிதா இல்லாத இந்த சமயத்தில் எதிர்கொள்ளப் போகும் சவால்களை எப்படி சமாளிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவை நோக்கியே செல்லத் தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...