Sunday, December 4, 2016

வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைகிறது: டாக்டர் ஜெகதீஷ் பிரசாத்

By DIN  |   Published on : 04th December 2016 02:41 AM  

tnmgr

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் பேசியது:
தரமான மருத்துவ சேவையை நிர்ணயம் செய்வதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நியாயமான செலவில் நவீன மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலகில் பெரும்பாலான ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களில் இந்தியர்களே பணியாற்றுகிறார்கள். மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இந்தியாவிலேயே உயர்தர ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், வெளிநாடுகளுக்குச் சென்ற உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் இந்தியாவுக்கே திரும்பி வருகின்றனர். மேலும் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் இளம் மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றார் அவர்.
விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்டப் பிரிவுகளில் 20,489 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. அதில் 5,266 மாணவர்கள் நேரடியாக வந்து பட்டங்களைப் பெற்றனர்.
141 மாணவர்களுக்கு பதக்கங்கள்: படிப்பில் சிறந்து விளங்கிய 141 மாணவர்களுக்கு மொத்தம் 181 பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.பாவனா எம்.பி.பி.எஸ்.படிப்பில் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.அதிதி முதுநிலை பொது மருத்துவப் படிப்பில் 5 பதக்கங்களையும், கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பி.மீனலோஷனி முதுநிலை பொது அறுவைச் சிகிச்சைப் படிப்பில் 5 பதக்கங்களையும் பெற்றார்.
2 நிபுணர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
கௌரவ டாக்டர் பட்டம்: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் ஜெகதீஷ் பிரசாத், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா, முடநீக்கியல் நிபுணர் ஆர்.எச்.கோவர்தன் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) சிஎச்.வித்யாசாகர் ராவ் வழங்கினார்.


டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு கௌரவம்

சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வெவ்வேறு மருத்துவ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பெற்றுள்ளார்.
காது-மூக்கு-தொண்டை மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சனிக்கிழமை (டிச.3) வழங்கப்பட்டது. இதேபோன்று வங்கதேசம் தலைநகர் டாக்காவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் ("சார்க்') காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் மாநாட்டில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு (வலமிருந்து 2-ஆவது) வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறார் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத். உடன் (இடமிருந்து) சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...